வாய்யா, மின்னல்!
- படம்: வெள்ளை ரோஜா
- பாடல்: சோலைப் பூவில் மாலைத் தென்றல்
- எழுதியவர்: முத்துலிங்கம்
- இசை: இளையராஜா
- பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
- Link: http://www.youtube.com/watch?v=khUohdHlgAM
மேகத்துக்குள் மின்னல்போலே நின்றாயே,
மின்னல் தேடும் தாழம்பூவாய் நானும் வந்தேனே!
தாகம் தீர்க்கும் தண்ணீர்போலே நீயும் வந்தாயே,
தாவிப் பாயும் மீனைப்போலே நானும் ஆனேனே!
இங்கே தரப்பட்டிருக்கும் நான்கு வரிகளில், முதல் இரண்டு பெண் பாடுவது, அடுத்த இரண்டு ஆண் பாடுவது.
வழக்கம்போல், ஆண் பேசுவதைப் புரிந்துகொள்வது சுலபம்: தண்ணீராக அவள் வந்தாள், மீனாக இவன் நின்றான், தண்ணீர் இன்றி மீன் வாழாது, அதுபோல அவள் இன்றி இவன் வாழமுடியாது!
ஆனால், அந்தப் பெண்ணின் குரலில் ஒரு சின்னக் குழப்பம், மின்னலாக அவன் வந்தான் என்கிறாள் இவள், கூடவே, ‘தாழம்பூவாக நான் ஆனேன்’ என்கிறாள். இரண்டுக்கும் என்ன சம்பந்தம்?
இந்தப் புதிருக்கு விடை, கச்சியப்ப முனிவர் எழுதிய ‘தணிகைப் புராணம்’ என்ற நூலில் இருக்கிறது. ’தடித்து எழுந்தொறும் தாழை பூப்பன.’
’தடித்து’ என்றால் மின்னல், வானில் மின்னல் தோன்றும்போது, மொட்டாக இருக்கும் தாழை பூக்கும்!
அதாவது, சூரியனைப் பார்த்தவுடன் தாமரை மலரும், சந்திரனைப் பார்த்தவுடன் அல்லி மலரும் என்பதுபோல, மின்னலைப் பார்த்தவுடன் தாழம்பூ மலரும். அந்தச் செய்தியை இந்தப் பாடலில் முத்துலிங்கம் பயன்படுத்தியிருக்கிறார். ‘காதலா, மலர்வதற்காக மின்னலைத் தேடுகிற தாழம்பூவைப்போல நான் காத்திருந்தேன், ஆனால் நீயோ, மேகத்துக்குள் ஒளிந்து நின்றாய், இப்போது இங்கே என்முன்னே தோன்றினாய், உன்னைப் பார்த்ததும் நான் மலர்ந்துவிட்டேன், நீதான் என் மின்னல்!’ என்கிறாள் அவள்!
***
என். சொக்கன் …
05 04 2013
125/365
amas32 (@amas32) 11:14 pm on April 5, 2013 Permalink |
எவ்வளவு அழகாக கவிஞர் இந்தக் கருத்தை இந்தப் பாடலில் பயன்படுத்தியுள்ளார்!. மின்னலைப் பார்த்துத் தாழை பூக்கும் என்ற விவரம் அறிந்தவர்களே பாடலை நன்கு இரசித்திருக்க முடியும்.
நல்ல பாடல்களாக எடுத்து விளக்கம் சொல்கிறீர்கள் 🙂
amas32
Niranjan 12:37 am on April 6, 2013 Permalink |
இந்தப் பாட்டை எழுதியது வாலி அல்லவோ ?
என். சொக்கன் 12:39 am on April 6, 2013 Permalink |
இல்லை நிரஞ்சன், ‘வெள்ளை ரோஜா’வில் வாலி எழுதியது ஒரே ஒரு பாடல், ‘தேவனின் கோயிலிலே யாவரும் தீபங்களே’
இதைப் பாருங்கள்: http://musicalaya.net/imgviewer.php?mod=lpcovers/1218/3/1/1
GiRa ஜிரா 1:06 pm on April 6, 2013 Permalink |
தாழம்பூவைப் பொருத்த வரையில் இரண்டு கருத்துகள் உண்டு. ஒன்று பாம்புக்கு தாழம்பூ வாசனை பிடிக்கும். மற்றொன்று மின்னொளியில் மலரும் தாழம்பூக்கள்.
முன்னதை விட பின்னதில் அறிவியல் விளக்கம் இருப்பது போலத் தோன்றுகின்றது.
பாம்புகள் பெரும்பாலும் புதர்களில் இருக்கும். தாழம்பூவும் புதர்களாக இருக்கும். அதனால் அங்கு பாம்புகள் அடைவதில் வியப்பில்லை. பொடிப்பாம்புகள் விரித்த தாழம்பூக்களில் சமயத்தில் ஏறிக்கொள்ளும். அதைத்தான் பூநாகம் என்று சொல்வார்கள்.
மின்னொளியில் தாழம்பூ மலருமா என்று தெரியவில்லை. ஒருவேளை தாழம்பூவுக்கு மின் கடத்தும் திறன் நிறைய இருக்கலாம். அதனால் மின்னல் தாழம்புதர்களின் விழலாம். அதைப் பார்த்தவர்கள் மின்னலினால் தாழம்பூ மலரும் என்று சொல்லியிருக்கலாம்.
Vanitha 4:26 pm on May 11, 2019 Permalink |
சுரதா அவர்கள் நாடோடி மன்னனில் எழுதிய ‘கண்ணில் வந்து மின்னல் போல்’ பாடலிலும் இந்த உவமை வந்துள்ளது……. !