எப்பொழுதும் உன் கற்பனைகள்

சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் இடம் பெற்ற கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்த ஜேம்ஸ் வசந்தன், ஒரு இசையமைப்பாளராக உருமாறிய திரைப்படம் அது. பாடலும் மிக இனிய பாடல். கவிஞர் தாமரை எழுதி பெள்ளி ராஜும் தீபா மரியமும் இனிமையாகப் பாடிய பாடல்.

பாடலை ரசித்துக் கொண்டிருந்த போது நடுவில் வந்த ஒருவரி என் சிந்தனையைத் தூண்டியது.

இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா

மேலே சொன்ன வரிகள்தான் என்னுடைய சிந்தனையைத் தூண்டியவை. இன்னும் சொல்லப் போனால் இந்த வரிகளுக்குள் தனக்கும் கவிதை இலக்கணம் தெரியும் என்று நிருபித்திருக்கிறார் தாமரை.

ஆம். காதல் பாடல்களை எழுதுவதற்கும் இலக்கணம் உண்டு. அதற்கு அகத்திணையியல் என்று பெயர். எல்லா தமிழ் இலக்கண நூல்களிலும் பொதுவாக விளக்கப்படும். இருப்பதில் பழையதான தொல்காப்பியத்திலும் அகத்திணையியல் உண்டு. அகத்தியம் என்னும் அழிந்த நூலிலும் அகத்திணையியல் இருந்தாலும் தொல்காப்பியர் தனது தொல்காப்பியத்தில் புதுமைகளைச் செய்ததாகச் சொல்லப்படுகிறது.

சரி. இலக்கணத்துக்கு வருவோம். அகத்திணைப் பாடல்கள் என்று சொல்லிவிட்டாலும், அவைகளை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து திணைகளாகப் பிரிக்கின்றார்கள்.

இந்தத் திணைகளைக் குறிக்கும் பொருட்கள் பாடலில் இருக்க வேண்டும். கண்டிப்பாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக முருகக் கடவுளைப் பற்றி வந்தால் அந்தப் பாடல் குறிஞ்சித்திணையைச் சேர்ந்தது. வயல்வெளிகளையும் அங்குள்ள விளைபொருட்களையும் சொன்னால் அந்தப் பாடல் மருதத்திணையைச் சேரும்.

இப்படியாகத் திணைகளைக் குறிக்கும் பொருட்களையும் மூன்று வகைகளாகப் பிரித்தார்கள். அவை முதற்பொருள், உரிப்பொருள் மற்றும் கருப்பொருள் எனப்படும்.

இந்த முதற்பொருளில் வரும் ஒரு பொருள்தான் பொழுது. பொதுவில் முதற்பொருள் என்பது நிலத்தையும் பொழுதையும் குறிக்கும்.

முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
இயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே

ஒரு பாடலின் முதற்பொருளாவது அந்தப் பாடல் சொல்லும் நிகழ்ச்சிகள் நடக்கும் நிலம் மற்றும் நடக்கின்ற பொழுது.

குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த நிலமும்
முல்லை – காடும் காடு சார்ந்த நிலமும்
மருதம் – வயலும் வயல் சார்ந்த நிலமும்
நெய்தல் – கடலும் கடல் சார்ந்த நிலமும்
பாலை – மணலும் மணல் சார்ந்த நிலமும் அல்லது தம் இயல்பில் திரிந்த ஏனைய நிலங்கள்

இந்த ஐவகை நிலங்களுக்குப் பொழுதுகள் உண்டு. அவைகளும் இரண்டு வகைப்படும். அவை பெரும்பொழுது என்றும் சிறு பொழுது என்றும் வகைப்படும்.

ஒவ்வொரு நிலத்துக்குரிய பொழுதுகளைப் பார்க்கும் முன்னர் பெரும்பொழுதுக்கும் சிறுபொழுதுக்கும் விளக்கத்தைப் பார்க்கலாம்.

ஒரு ஆண்டைப் பிரித்தால் வருகின்றவை பெரும்பொழுதுகள். ஒரு நாளைப் பிரித்தால் வருகின்றவை சிறுபொழுதுகள்.

பெரும் பொழுதுகள் – கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், வேனில்
சிறு பொழுதுகள் – மாலை, யாமம், வைகறை, காலை, நண்பகல், பிற்பகல்

ஆறு பெரும் பொழுதுகளையும் ஆறு சிறுபொழுதுகளையும் புரிந்து கொண்டோம். இனி எந்தெந்தத் திணைக்கு எந்தெந்தப் பொழுதுகள் என்று பார்க்கலாம்.

முல்லைத் திணை – கார்காலமும் மாலைப் பொழுதும்
குறிஞ்சித் திணை – கூதிர் காலமும் யாமப் பொழுதும்
மருதத் திணை – வைகறையும் எல்லாப் பருவ காலங்களும்
நெய்தல் திணை – பிற்பகலும் எல்லாப் பருவ காலங்களும்
பாலைத் திணை – நண்பகலும் வேனிற் காலமும்

கங்கை அமரன் எழுதிய ”அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்” என்றொரு பாடல் உண்டு. அந்தப் பாடலில் அந்தி வந்திருக்கிறது. அந்தி சாய்வது மாலை நேரம். அப்படியானால் இந்தப் பாடல் வரி முல்லைத்திணை என்று சொல்லலாம்.

வைரமுத்துவின் ஒரு பாடலைச் சொல்கிறேன். முயற்சி செய்து பாருங்கள்.
பகலும் இரவும் உரசிக் கொள்ளும்
அந்திப் பொழுதில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
உயிரைத் திருப்பித் தந்து விடு

என்ன, கண்டுபிடித்து விட்டீர்களா? கண்டுபிடிக்க முடியவில்லையா? இந்தப் பாடலில் அந்திப் பொழுது வருவதால் முல்லைத்திணையிலும் சேர்க்கலாம். அலைகளும் கடற்கரையும் பாடலில் வருகின்றன. அதனால் நெய்தற் திணையிலும் சேர்க்கலாம். ஆனால் இலக்கணப்படி ஒரு பாடல் ஒரு திணையில்தான் இருக்க வேண்டும். ஆனால் திணை மயக்கமாக ஒன்றிரண்டு பொருட்கள் கலந்து வரலாம். ஆனாலும் பெரும்பாலான பொருட்களின் படிதான் திணையை முடிவு செய்ய வேண்டும்.

சரி. தொடங்கிய இடத்துக்கு வருவோம். இரவும் அல்லாத பகலும் அல்லாத வரிகளை வைத்து கண்கள் இரண்டால் பாடல் எந்தத் திணை என்று சொல்லுங்களேன் பார்க்கலாம்!

கண்கள் இரண்டால் பாடலின் சுட்டி – http://youtu.be/XgA6NgC-vN0

அன்புடன்,
ஜிரா

124/365