சீவாத நொங்கே!

  • படம்: சின்னக் கவுண்டர்
  • பாடல்: சுட்டி சுட்டி
  • எழுதியவர்: ஆர். வி. உதயகுமார்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்: மலேசியா வாசுதேவன்
  • Link: https://www.youtube.com/watch?v=QrZKODUipuo

போனாப் போகட்டும் ஒரு பொம்பளையின்னு பாத்தா, நீ

ஊரை ஏய்க்கப் பார்ப்பதென்னடி!

வீணா வரிஞ்சு கட்டி வம்பிழுத்ததாலே, இப்ப

மாட்டிக்கிட்டு முழிப்பதென்னடி!

புதிய தமிழ்க் கலாசாரத்தில் வேட்டியும் புடைவையும் இரண்டாம் நிலை உடைகளாகிவிட்டபோதும்கூட, அவற்றோடு தொடர்புடைய ’வரிஞ்சு கட்டி’ என்ற சொற்றொடரை நாம் இப்போதும் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துகிறோம், ‘ஏதாவது ஒரு வம்புன்னா வரிஞ்சு கட்டிகிட்டு வந்துடுவீங்களே!’

’வரிஞ்சு கட்டுதல்’ என்றால் என்ன அர்த்தம்?

முதலில், அது ‘வரிஞ்சு’ அல்ல, ‘வரிந்து’ என்று சொல்லவேண்டும். ‘ஐந்து’ என்கிற எண் பேச்சுவழக்கில் ‘அஞ்சு’ என்று போலியாக மாறுகிறதல்லவா, கிட்டத்தட்ட அதே ஃபார்முலாவின்படி ‘வரிந்து’ என்பது ‘வரிஞ்சு’ என மாறிவிடுகிறது.

தமிழில் ’வரிதல்’ என்றால், இறுக்கிக் கட்டுதல் என்று அர்த்தம், பொதுவாகப் போர் வீரர்களுடைய உடை அலங்காரத்துக்குப் பயன்படுத்தப்படும் வார்த்தை இது.

போருக்குச் செல்கிறவர்களுடைய ஆடைகள் தொளதொள என்று இருந்தால், கண்ட இடத்தில் மாட்டிக்கொள்ளும், அல்லது, எசகுபிசகான நேரத்தில் அவிழ்ந்துவிடும், அப்போது அவர்கள் மானம் காக்க வேட்டியைப் பிடிப்பார்களா, அல்லது வீரம் காக்க வில்லைப் பிடிப்பார்களா?

இந்தப் பிரச்னையைத் தவிர்ப்பதற்காகதான், போர் ஆடைகள் இறுகக் கட்டப்பட்டன. அதாவது, போருக்குச் செல்கிறவர்கள் ஆடைகளை வரிந்துகொண்டார்கள். சற்றே நீட்டி முழக்கிச் சொல்வதென்றால், வரிந்து கட்டிக்கொண்டார்கள்.

அதே பதத்தைதான் இன்றைக்கு நாம் பயன்படுத்துகிறோம், ‘வரிஞ்சு கட்டிகிட்டுச் சண்டைக்கு வர்றான்.’

இதில் இன்னொரு சுவாரஸ்யமான கோணமும் உண்டு.

முன்பெல்லாம் உழவர்கள் தங்களுடைய விளைச்சலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அரசாங்கத்துக்குச் செலுத்திவிடவேண்டும். ஆகவே, அறுவடை நடக்கும்போதே அரசுக்கு உரிய பகுதியை அவர்கள் தனியாக ஒரு சாக்கில் கட்டிக் கொடுத்துவிடுவார்கள்.

இந்த நேரத்தில், சாக்கின் நுனிப்பகுதி நன்றாக இறுகக் கட்டப்படும், அதாவது, வரிந்து கட்டப்படும். இதிலிருந்துதான் ‘வரி கட்டுதல்’ என்ற வார்த்தை வந்ததாகச் சொல்கிறார்கள். பின்னர் அது பல வடிவங்களை எடுத்து இப்போது நமக்கு ‘வருமான வரி’யாக நிற்கிறது.

இப்போதும், ’வரியே கூடாது சார்’ என்று வரிந்து கட்டுகிறவர்கள் உளர்.

***

என். சொக்கன் …

03 04 2013

123/365