குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்!

தண்ணீர் தண்ணீர் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். படத்தில் கண்ணதாசனும் வைரமுத்துவும் பாடல்களை எழுதியிருக்க, ஒரு நாட்டுப்புற பாட்டையும் மெட்டமைத்துப் பயன்படுத்தியிருந்தார் மெல்லிசை மன்னர்.

மானத்திலே மீனிருக்க
மதுரையிலே நீயிருக்க
சேலத்திலே நானிருக்க
சேருவது எக்காலம்?
பாடியவர் – கஸ்தூரி
பாடல் – நாட்டுப்புறப் பாட்டு
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Xqf6s_bFU8A#t=3m9s

சுமை தூக்கிச் செல்லும் பெண் அலுப்புத் தெரியாமல் இருக்க பாடிக் கொண்டே நடக்கின்றாள். அப்படி அவள் பாடும் அடுத்த வரியைக் கேட்கும் போது வேறொரு பாடல் நினைவுக்கு வந்தது.

கார வீட்டுத் திண்ணையிலே கறிக்கு மஞ்சள் அரைக்கையிலே
என்ன பொடி போட்டானோ இழுத்தரைக்க முடியலையே

இப்போது புரிந்திருக்கும் எனக்கு நினைவுக்கு வந்த பாட்டு எது என்று. திருடா திருடா படத்தில் வந்த “ராசாத்தி என் உசுரு என்னுதுல்ல” பாடல்தான் அது.

கார வீட்டுத் திண்ணையில கறிக்கு மஞ்சள் அரைக்கையில
மஞ்சள அரைக்கும் முன்ன மனச அரைச்சவளே
பாடியவர் – சாகுல் அமீது
பாடல் – வைரமுத்து
இசை – ஏ.ஆர்.ரகுமான்
பாடலின் சுட்டி – http://youtu.be/F-gNjRvJcuY

ஒரு நாட்டுப்புறப் பாடலின் வரியை அப்படியே எடுத்து காட்சிக்குப் பொருத்தமாக பயன்படுத்தியிருக்கிறார் கவிப்பேரசு வைரமுத்து.

மஞ்சள் தமிழ்ப் பண்பாட்டோடு நெருங்கிய தொடர்புடையது. ஒரு ஊரின் வளமையைக் காட்ட இஞ்சியும் மஞ்சளும் விளையும் மண் என்று புலவர்கள் தாங்கள் எழுதும் பாடல்களில் குறிப்பிடுவார்கள்.

மஞ்சள் கிழங்கு வகையைச் சார்ந்தது. அதுவும் கொத்துக் கிழங்குகளாக இருக்கும். மஞ்சளில் பலவகைகள் இருந்தாலும் கிழங்கு மஞ்சளும் கஸ்தூரி மஞ்சளும் விரலிமஞ்சளும் தமிழர்களால் அதிகம் பயன்படுத்தப் படுகிறது.

கிழங்கு மஞ்சள் உருண்டையாக இருக்கும். முன்பெல்லாம் குளியலறைகளில் உளியால் கொத்தப்பட்ட வட்டவடிவமான சிறு கல் இருக்கும். அதில் காய்ந்த கிழங்கு மஞ்சளை உரசி பெண்கள் பூசிக் குளிப்பார்கள். இப்போதெல்லாம் மஞ்சள் பொடியாகவே வந்து விடுவதால் யாரும் மஞ்சளை உரசிப் பூசுவதில்லை. கஸ்தூரி மஞ்சளும் இதற்குத்தான் பயன்படுகிறது. கிழங்கு மஞ்சளை விட கஸ்தூரி மஞ்சள் நறுமணம் நிறைந்தது.

சரி. நாம் உணவில் கலக்கும் மஞ்சள் எது? அது விரலிமஞ்சள். விரல் விரலாக நீளமாக இருக்கும். இந்த மஞ்சள் கொத்தைத்தான் பொங்கலன்று வழிபாட்டில் வைப்பார்கள். இந்த மஞ்சளைத் துண்டு துண்டுகளாக நறுக்கி வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நன்கு காய்ந்த பின் இடித்து வைத்துக் கொண்டால் அந்தப் பொடி உணவு வகைகளில் சேர்க்கப் பயன்படும்.

மஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி. வயிற்றுக்குள் சென்று கிருமிகளைக் கொல்வது மட்டுமல்லாமல் உணவுப் பொருள் கெட்டுப் போகாமலும் இருக்கப் பயன்படுகிறது. அசைவச் சமையலில் மஞ்சளைக் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். பட்டிக்காடுகளில் சமைக்கும் முன்னர் கோழியையும் மீனையும் மஞ்சள் தேய்த்துக் கழுவுவார்கள். அதே போல ஆட்டுக்கறியில் உப்புக்கண்டம் செய்யும் போது மஞ்சள் சேர்க்கப்படும்.

மஞ்சள் புகை நுரையீரலுக்கும் சளிக்கும் நல்லதென்று சொல்லக் கேட்டிருக்கிறேன். காய்ந்த விரலிமஞ்சளை லேசாக விளக்கின் சுடரில் காட்டி முகர்ந்தால் சளித்தொல்லை அண்டாது.

ஆரத்தி எடுக்கின்றார்கள் அல்லவா, அது ஏன் சிகப்பாக இருக்கிறது? சுண்ணாம்புக் கரைசலில் சிறிது மஞ்சளைக் கரைத்து ஆரத்தி எடுப்பார்கள். இந்த ஆரத்திக் கரைசலை வருகின்றவர்கள் நெற்றியில் பொட்டாக வைத்து தட்டில் மிச்சமிருக்கும் கரைசலை வாசலின் இரண்டு பக்கத்திலும் கொட்டி விடுவார்கள். இந்தக் கரைசல் சிறந்த கிருமிநாசனி. இதையெல்லாம் மருத்துவத்தில் தனிப்படிப்பாக படிக்காமல் வாழ்க்கை முறையிலேயே செய்திருக்கிறோம். இன்றைக்கு ஆரத்தி எடுக்க வேண்டுமென்றால் குங்குமத்தை தண்ணீரில் கரைத்து விடுகிறார்கள். காரணத்தை விட்டுவிட்டு காரியத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.

குங்குமம் செய்யும் மூலப்பொருளும் மஞ்சள் பொடியே. அதைப் பெண்கள் நெற்றியில் பொட்டாக வைத்துக் கொள்வதாலும் ஆண்கள் பூசிக் கொள்வதாலும் என்ன பயன் உண்டாகும் என்று இனியும் விளக்க வேண்டியதில்லை.

இன்றைக்கு மஞ்சள் குங்குமங்கள் குறைந்து வேதியியல் பொருட்களைக் கொண்டு செய்யப்படும் குங்குமத்தை நெற்றியில் சூட்டிக் கொள்வதால் பலருக்கு நெற்றியில் அந்த இடம் கருத்துப் போகிறது. நல்ல மஞ்சள் குங்குமத்தை கையில் தேய்த்தால் கையில் மஞ்சள் நிறம் பரவும். மஞ்சளின் நறுமணமும் கிளம்பும்.

இப்போது சொல்லுங்கள். மஞ்சள் மங்கலப் பொருள்தானே?!

அன்புடன்,
ஜிரா

122/365