கண்ணாலே பேசிப் பேசி…

  • படம்: சூரியன்
  • பாடல்: பதினெட்டு வயது
  • எழுதியவர்: வாலி
  • இசை: தேவா
  • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=W6Kgy-z9QHA

கங்கை போலே, காவிரி போலே,

ஆசைகள் ஊறாதா!

சின்னப் பொண்ணு, செவ்வரிக் கண்ணு,

ஜாடையில் கூறாதா!

’செவ்வரி’க் கண் என்றால், சம்பந்தப்பட்ட நபருடைய விழியின் வெள்ளைப் பகுதியில் சிவந்த வரிகள் ஓடுகின்றன என்று அர்த்தம். அது ஒரு தனி அழகாகச் சிறப்பித்துக் கூறப்படுகிறது.

உதாரணமாக மகாகவி பாரதியாரைப்பற்றி வ. ரா. வர்ணித்துக் கூறும் வரிகள், ’பாரதியாரின் கண்கள் செவ்வரி படர்ந்த செந்தாமரைக் கண்கள். இமைகளின் நடுவே, அக்கினிப் பந்துகள் ஜொலிப்பனபோலப் பிரகாசத்துடன் விளங்கும். அந்தக் கண்களை எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருந்தாலும் தெவிட்டாது.’

குறுந்தொகையில் ஒரு பாடல், ‘இவள் அரி மதர் மழைக்கண்’ என்று வர்ணிக்கும். இதன் பொருள், இந்தப் பெண்ணின் செவ்வரி படர்ந்த, மதர்ப்பான, குளிர்ச்சியான கண்கள்.

கடவுளுக்குக்கூட செவ்வரி படர்ந்த கண்கள் இருப்பது தனி அழகு. பொய்கையாழ்வார் திருமாலைப்பற்றிப் பேசும்போது, ‘திறம்பாதென் நெஞ்சமே, செங்கண்மால் கண்டாய்’ என்கிறார். இங்கே ‘செங்கண்’ என்பது, கோபத்தாலோ ராத்திரி சரியாகத் தூங்காததாலோ சிவந்த கண்கள் அல்ல, செவ்வரி ஓடியதால் இயற்கையாகச் சிவந்த கண்கள் என்று கொள்வதே சிறப்பு.

அப்படிப்பட்ட செவ்வரிகளைக் கொண்ட இந்தப் பெண்ணின் கண் ஜாடை, தன்னுடைய ஆசைகளை மறைக்காமல் சொல்லிவிடும், டேய் ஆடவா, அதைப் புரிந்துகொண்டு இவளோடு ஆட வா என்கிறார் வாலி.

கிட்டத்தட்ட இதேமாதிரி ஒரு பாடலை ’கண்ணதாசன் திரைப் பாடல்கள்’ தொகுப்பில் நேற்று வாசித்தேன், ‘பெண்ணுக்கு ரகசியம் ஏது? தலைப் பின்னலும் பேசிடும்போது!’

பொதுவாகப் பெண்களிடம் ரகசியம் தங்காது என்று சொல்வார்கள், அவர்கள் வாயைத் திறந்து சொல்லாவிட்டாலும், தங்களுடைய தலைப் பின்னலைத் தூக்கிப் போடுகிற விதத்தில்கூட விஷயம் வெளிவந்துவிடும், எதிரில் உள்ளவருக்கு அதைப் ‘படிக்க’த் தெரிந்திருக்கவேண்டும்.

ஆக, Body Language, Face Languageபோல், பெண்கள் மொழி Eye Language, Hair Language என்று பலவிதமாக நீளும். படித்துப் புரிந்துகொள்வது ஆண்களின் சமர்த்து!

***

என். சொக்கன் …

01 04 2013

121/365