விருந்தினர் பதிவு : விகடகவியும் மாலை மாற்றும்

திரைப்படம் : அவள் ஒரு தொடர் கதை (1974)

பாடல் : கடவுள் அமைத்து வைத்த மேடை

குரல்கள்: S.P.பாலசுப்பிரமணியம், சாய்பாபா, சதன், குழுவினர்

பாடலாசிரியர்: கவியரசு கண்ணதாசன்

இசை: மெல்லிசை மன்னர் M.S. விஸ்வநாதன்

காட்சியும் (G)கானமும் இணயம்: http://www.youtube.com/watch?v=gJQ-grJjRgU

கடவுள் அமைத்து வைத்த மேடை

இணைக்கும் கல்யாண மாலை

இன்னார்க்கு இன்னார் என்று

எழுதி வைத்தானே தேவன் அன்று  ( x 2)

நான் ஒரு விகடகவி,

இங்கு நான் ஒரு கதை சொல்வேன்…..

கதாபாத்திரம் விகடம் கோபால் (கமலஹாசன்) ஓர் கதைப்பாட்டை ஆரம்பித்து இரண்டு ஆலமரத்து கிளிகளைப்பற்றி நகச்சுவை ததும்பிய கதையாக தொடருகிறார். இப்பாட்டு, சிறுவர்களிடயே மிகவும் ரசிகப்பட்ட நகைச்சுவையான பாடல். பொதுவாக கதைப் பாட்டுக்கள் எல்லோர் மனதிலும் இலகுவில் இடம் பிடிப்பவை.

 

விகடம் என்பது நகைச்சுவையாக பேசும் தன்மயையும், குரல் மாற்றி பேசும் தன்மையையும் ஒருவகை நையாண்டி கூத்தையும்(satirical laughter) குறிக்கும். ஆங்கிலத்தில் “மிமிக்கர்”(mimicker) என்பார்கள். இப்பாடலில் பல்குரல் மன்னன் சதன் பல்வேறு மிருகங்கள், பறவைக் குரல்களை தத்துரூபமாக விகடஞ்செய்து ஒர் மிருகக்காட்சி சாலையையே மேடைக்கு கொண்டு வருகிறார். S.P.பாலாவின் குரல், மேலும் மெருகூட்டுகிறது. கடந்த எழுபதுகளின் நடுப்பகுதிகளில் சக்கை போட்ட பாடல்களில் ஒன்று.

 

விகடகவி விகடம் சொல்லை தழுவியது.

புத்திகூர்மையுடன் நகைச்சுவையும் சேர்ந்த செய்யுள் விகடகவி எனப்படும். இத்துடன் அப் பாடல்களை பாடிய பாவலனும் விகடகவி எனப்படுவர். அரச சபையில் வேடிக்கையாக பேசி சிரிக்க சிந்திக்க செய்வதற்காகவே அரண்மனைகளில் விகடகவியை நியமிப்பது உலகெங்கிலும் ஒர் வழக்கம். ஆங்கிலத்தில் கோட் ஜெஸ்டர் (court jester) என்பர்.

உங்கள் நினைவுகளை உங்கள் பள்ளிப்பிராயத்துக்கு அழைத்து செல்கிறேன்……

தெனாலி ராமன் வினோதக் கதைகள் நினைவில் வருகிறதா?

தனது வீட்டில் கன்னம் வைத்த கள்வரை உபயோகித்தே தனது மரக்கறி தோட்டத்திற்கு தண்ணீர் இறைத்த வீரன். புத்திகூர்மயுள்ள ராமன் மற்றும் குதிரயை பட்டினி போட்டு…அதே தான்….

இராமக்கிறிஷ்ணா எனும் ராமன் வாழ்ந்தது தெனாலி எனும் ஆந்திரா பிரதேசத்திலுள்ள ஊரில் அதனால் அவரது பெயர் தெனாலி ராமன் என சுருங்கியது. தெ. ராமன் பற்றிய கதைகள் தமிழ் நாட்டிலும், இந்தியகண்டம் முழுவதும், ஏன், பாக்கு நீரினையை கடந்து வட இலங்கையிலும் பிரசித்தி பெற்றவை.

நான்கு நூற்றாண்டுகளுக்கு முன் ஆந்திர அரச சபையில் அரண்மனை விகடகவியாக பணிபுரிந்த தெனாலி ராமன் பிரசித்தி பெற்ற அறிவு கூர்மையுள்ள விகடகவி. இவர் ஆந்திரா பிரதேசத்தில் வாழ்ந்ததற்கு பல சான்றுகள் உண்டு. விகடவரம் பெற்ற கதையே அவரது புத்தி கூர்மையினால் கிடைத்த பரிசு என குறிக்கப்பட்டுள்ளது.

‘விகடகவி’ பற்றிய இன்னுமொரு சமாச்சாரம்.

இச்சொல்லை முன் இருந்து பின்னும், பின்னிருந்து முன்னும் படித்தாலும்”விகடகவி” தான். இத்தகைய சொற்களை/ சொற்தொடரை இலக்கணத்தில் மாலை மாற்று என்பர். ஆங்கிலத்தில் பலின்ரோம்(palindrome). இலக்கத் தொடர்களும் மாலை மாற்றில் அமைவதுண்டு.

தமிழில் மாலை மாற்று சொற்கள்:  திகதி, குடகு,

மாலை மாற்று சொற்தொடர்கள்: தேரு வருதே, தோடு ஆடுதோ

ஆங்கில மாலை மாற்று சொற்கள்/ சொற்தொடர்கள்: Level, Malayalam, refer, noon, able was I saw elba?, a nut for a jar of tuna இத்தியாதி

பொதுவாக மாலை மாற்று சொற்தொடரில் நிறுத்தற்குறிகள், இடைவெளிகள், எழுத்து வேறுபாடுகள் கவனிக்கப்படுவதில்லை

மாலை மாற்று செய்யுள்கள் தமிழ் இலக்கியங்களிலும், புராணங்களிலும் காணப்படுகிறது.

கி.பி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த நான்கு நாயன்மார்களில் ஒருவரான சம்பந்தமூர்த்தி நாயனார் 10 மாலை மாற்றுத் திருப்பதிகங்களையும் ஒரு மாலை மாற்றுத் திருக்கடைக் காப்பும் பாடியுள்ளார்.

அப் பாடல்களில் ஒன்று:

யாமாமாநீ யாமாமா  யாழீகாமா காணகா

காணகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

(முன் இருந்து பின்னும், கடைசி எழுத்திலிருந்து முன்னும் ஒவ்வொரு எழுத்தாக படித்துப் பாருங்கள் புரியும்)

மேற் கூறிய திருப்பதிகத்தின் பொருள் கூறுவதற்கு எனது தமிழறிவு குட்டை. கீழ் குறிப்பிட்ட இணயத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கம் உள்ளது. இதோ அந்த சுட்டி: http://www.visvacomplex.com/MaalaiMaaRRu4.html

நிற்க!

இன்றைய திகதியை கவனித்துப் பாருங்கள்!!!

31.3.13

நன்றியுடன்

சபா-தம்பி

பிற்குறிப்பு:

1.      (மேற் கொடுத்த திரைபாடலில் வரும் கல்யாண மாலைக்கும், மாலை மாற்றுக்கும் ஏதாவது தொடர்பு? ஏனெனில் பாடலில் மணமக்கள் மாலை மாற்றும் காட்சி ஒன்று உண்டு. கேட்பதற்கு கவியரசு எம்மிடையே இல்லை, இயக்குனர் சிகரம்? எந்தச் சுண்டெலி  அந்த ராஜ பூனைக்கு கேள்விமணி கட்டுவது?? 🙂

2. தமிழ் மற்றும் லத்தீன், சமஸ்கிருதம், குர்ரான்(அரபிக்) எபிரேயு ஆகியவற்றிலும் மாலை மாற்றுக் கோவை செய்யுள்கள் உண்டு. மிகவும் பழமை வாய்ந்த மாலை மாற்று (கி.பின் 79 இல்) இத்தாலிய நாட்டின் பொம்பே நகர் தகர்ந்த சாம்பல் சுவடுகளில் இருந்து மீட்கப்பட்டது.

இப்பதிவுக்கு தகவல் சேர்க்கும்போது கிடைத்த விக்கி: http://en.wikipedia.org/wiki/Palindrome

***

சபா-தம்பி பிறந்து வளர்ந்தது இலங்கையில். கால் நூற்றாண்டு காலத்துக்குமுன்னால் ஆஸ்திரேலியாவில் குடியேறியவர், தற்போது பெர்த் நகரத்தில் வசிக்கிறார். தமிழார்வம் ஏராளம், ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆங்கிலத்தில்மட்டுமே எழுதிவந்திருக்கிறார், கண்ணதாசனும் #4VariNoteம் தந்த ஊக்கத்தில் தமிழிலும் எழுதத் தொடங்கியுள்ளார்.

Twitter: @SabaThambi