நிலவு ஒரு பண்ணாகி…

ஒரு சில பாடல்களைக் கேட்கும் போது சில வரிகள் ஏற்கனவே எங்கேயோ கேட்டது போல இருக்கும். வேறுவேறு கவிஞர்கள் எழுதும் போதே இப்படித் தோன்றுகிறதே, ஒரே கவிஞர் எழுதினால் எங்கேயாவது ஒரே கருத்தை இரண்டு பாடல்களில் சொல்லியிருக்க மாட்டார்களா?

சொல்லியிருக்கிறார்கள். அந்தந்த கதைக்கு ஏற்றவாறு விதம்விதமாகச் சொல்லியிருக்கிறார்கள். அவற்றில் ஒரு எடுத்துக்காட்டை இன்று பார்க்கப் போகிறோம்.

அவன் ஒரு கவிஞன். இருந்தால் என்ன? அவனைக் கேலியும் கிண்டலும் செய்து முடக்குவதற்கு அவன் பிறந்த சாதி போதுமே. ஆம். அவன் ஒரு நாவிதன் மகன். மயிர் மழிக்கும் தொழிலில் இருந்தாலும் அவனுக்கு உயிர் கொழிப்பதோ தமிழ்க் கவிதைகளில். அப்படி அவன் எழுதிய கவிதைகளை எல்லாரும் ஏய்க்க… கேட்பதற்கென்றே ஒருத்தி வந்தாள்.

கோயில்மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ
பாஞ்சாலி பாஞ்சாலி

ஆம். அவள் பெயர் பாஞ்சாலி. அவனுடைய பாடல்களெல்லாம் இருளாமல் போகாமல் காப்பாற்றும் பொருளாக வந்தாள். இசையாக வந்தாள். அதைக் கவியரசர் கண்ணதாசன் இப்படி அடுத்தடுத்த வரிகளில் எழுதுகிறார்.

பாடலொருகோடி செய்தேன்
கேட்டவர்க்கு ஞானமில்லை
ஆசைக்கிளியே வந்தாயே பண்ணோடு
நான் பிறந்த நாளில் இன்று நல்ல நாளே

இத்தனை காலம் ஞானமின்றி அவன் பாடல்களை ஏய்த்தவர்களை மன்னித்து விடுகிறான். ஏன்? பண்ணோடு வந்தாள் வண்ணப் பெண். அப்படி அவள் வந்த நாள்தான் அவன் பிறந்த நாளிலிருந்து வந்த நாட்களிலிலெல்லாம் நல்ல நாளாம். அடேங்கப்பா.

நான் சொல்லிக் கொண்டிருக்கும் பாடல் உங்களுக்கெல்லாம் தெரிந்த பாடல்தானே? கிழக்கே போகும் இரயில் திரைப்படத்தில் இடம் பெற்ற “கோயில்மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ” பாடல். மலேசியா வாசுதேவனும் எஸ்.ஜானகியும் அழகாகப் பாடியிருப்பார்கள்.

அடுத்து நான் சொல்லப் போகும் பாடலும் உங்களுக்குத் தெரிந்த மிகப்பிரபலமான கவியரசர் பாடலே.

அவனுக்கு வேலையில்லை. அவளுக்கோ துணையில்லை. ஊர் விட்டு ஊர் பிழைக்க வந்தவர்கள் அவர்கள். எப்படியோ நட்பாகி உள்ளுக்குள் காதலாகி அந்தக் காதலும் உள்ளத்துக்குள்ளேயே இருந்தது. உதட்டில் வரவில்லை.

வேலையின்மை அவனைச் சொல்ல விடவில்லை. கேட்கவும் இவளுக்குத் துணிவில்லை. அவரவர்க்கு ஆன வழி அவரவர்க்கு திறந்தே இருக்கும் என்பது உண்மையல்லவா. அவர்களுக்கும் வழி திறந்தது. தில்லியில் ஒரு அழகான பூங்கா. பேசிக் கொண்டிருந்தவர்களுக்குள் ஒரு போட்டி.

அவள் சந்தங்களைச் சொல்ல வேண்டும். அந்தச் சந்தங்களுக்கு ஏற்றவாறு அவன் சொந்தமாய்க் கவிதைகளைச் சொல்ல வேண்டும். அவள் மெட்டுகளை எடுத்து விட விட இவனும் கவிதை வரிகளை எடுத்து விட்டான். அந்த வரிகளிலே அவன் விருப்பத்தையும் சொன்னான்.

சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்

வாழ்க்கை என்னும் சங்கீதம் சுவையாவதற்கு சந்தமாக ஒரு பெண் வரத்தானே வேண்டும். சந்தத்துக்குப் போட்டியாக கவிதை சொல்லும் போது தன்னுடைய கருத்துகளையும் சொன்னதை அடுத்தடுத்த வரிகளில் அந்தக் காதலன் சொல்லிவிடுகிறான்.

கொடுத்த சந்தங்களில்
என் மனதை நீ அறிய நான் உரைத்தேன்

மெல்லிசை மன்னர் இசையமைப்பில் வறுமையின் நிறம் சிவப்பு திரைப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியும் எஸ்.ஜானகியும் பாடிய “சிப்பி இருக்குது முத்தும் இருக்குது” பாடல்தான் மேலே குறிப்பிடப்பட்ட பாடல்.

சென்ற பாட்டில் காதலி பண்ணோடு வந்தாள். இந்தப் பாட்டில் சந்தமாக வந்தாள். பண்ணும் சந்தமும் வெவ்வேறு சொற்களாக இருந்தாலும் ஒரே பொருளைக் குறிப்பதுதானே.

ஆக வாழ்க்கை இன்பமான சங்கீதமாக இருக்க வேண்டுமென்றால் சந்தமாக/பண்ணாக ஒருத்தி வரத்தானே வேண்டும். அதைச் சரியாகத்தானே கவியரசர் சொல்லியிருக்கிறார்.

இந்தக் கருத்தை இன்னொரு பாட்டில் வாலிபக் கவிஞர் வாலியும் சொல்லியிருக்கிறார். பூக்காரி திரைப்படத்துக்காக டி.எம்.சௌந்தரராஜனும் எஸ்.ஜானகியும் பாடிய பாடல் அது.

காதலின் பொன் வீதியில்
நானொரு பண்பாடினான்
பண்ணோடு ஒருத்தி வந்தாள்
என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்

இந்த மூன்று பாடல்களிலும் ஒரு அதிசய ஒற்றுமையைக் கண்டேன். மூன்று பாடல்களையும் பாடியது மூன்று வெவ்வேறு பாடகர்கள். ஆனால் பாடகி ஒருவரேதான். ஆம். மலேசியா வாசுதேவனோடும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடும் டி.எம்.சௌந்தர்ராஜனுடனும் இணைந்து மூன்று பாடல்களையும் பாடியது எஸ்.ஜானகி.

பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

கோயில்மணி ஓசைதன்னைக் கேட்டதாரோ – http://youtu.be/W96yUMjxF70
சிப்பி இருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க – http://youtu.be/5JS0fPN3_hA
காதலின் பொன்வீதியில் நானொரு பண்பாடினேன் – http://youtu.be/GdLyvLfuoYU

அன்புடன்,
ஜிரா

120/365