கருணை உள்ளமே!

இரண்டாயிரத்துச் சொச்ச ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழந்தை பிறந்தது. உலகத்துப் பிள்ளைகளெல்லாம் பாலுக்கழுத போது இந்தப் பிள்ளை மனிதரைப் பிடித்த ஊழுக்கழுதது.

அந்தப் பிள்ளை வளர்ந்தாலும் குழந்தை உள்ளத்தோடுதான் இருந்தது. நல்லதைச் சொன்னது. அல்லதைத் தவறென்று கைவிடச் சொன்னது. நோய் பிடித்து நொந்தவர்களைக் குணப்படுத்தி வாழ்வித்தது. இறைவன் பெயர் சொல்லி பணம் செய்தல் தவறென்று போதித்தது.

நல்லதைச் சொன்னவரும் நல்லதைச் செய்தவரும் அல்லோரின் வெறுப்புக்கு ஆளாவது அன்றும் நடந்தது. கட்டி இழுத்து வரப்பட்டு முள் பதித்த சாட்டையால் முதுகில் குருதிக் கோடுகள் வரையப்பட்டன. முள்ளால் முடிசெய்து தலையில் அழுத்தி மூளை வரை குத்தப்பட்டது. பெருமரத்துக் கட்டைகளில் சுமக்க முடியாத சிலுவை செய்து தோளில் ஏற்றப்பட்டது.

தசை கிழிய குருதி வழிய உலகம் கதறக் கதற ஊர்வலம் கொண்டு போகப்பட்டான் அந்த ராஜகுமாரன். ஆம். பரிசுத்த ஆவி தந்த பிதா சுதன் அவன். ஏசு என்று இன்று நம்மால் அழைக்கப்படுகின்ற பரலோக சாம்ராஜ்யத்து அரசன் தான் அன்று கொடுமைக்கு ஆளான அந்த தேவகுமாரன்.

இத்தனை கொடுமைகளைப் பட்டாலும் அதைச் செய்தவர்களைச் சபியாது “ஆண்டவரே இவர்கள் செய்கின்ற பாவம் அறியாதவர்கள். இவர்களை மன்னியுங்கள்” என்று வேண்டியதாம் அந்தக் கருணையுள்ளம்.

கல்வாரி மலையிலே குற்றமிழைத்த இரு திருடர்கள் நடுவினிலே சிலுவையில் ஏற்றப்பட்டு உயிர் போகும் தருணத்திலும் “ஏலி ஏலி லாமா சபாச்தானி, ஆண்டவரே ஆண்டவரே என்னை ஏன் கைவிட்டீர்” என்று மட்டும் கேட்டது அந்த எளிய நெஞ்சம். உயிர் போய் விட்டதா என்று சோதிக்க அந்த நெஞ்சிலே ஒருவன் ஈட்டியை இறக்கினானாம்! ஐயோ! பாவிகளே! ஏன் செய்தீர் அந்தக் கொடுமை! நினைத்தால் இன்று கூடக் கலங்குகிறதய்யா நெஞ்சம்!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வானை வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று வள்ளுவன் எழுதியதை உலகில் முதலில் நிரூபித்தான் அந்த ராஜகுமாரன். தேவகுமாரனாய் மண்ணுக்கு வந்து மாண்டவன் பரலோகத்துக்கே அரசனாய் மீண்டு வந்தான். அப்படி ஆண்டவராகிய ஏசு கிருஸ்து உயிர்த்தெழுந்த நன்னாளுக்கு ஈஸ்டர் என்று பெயரிட்டு உலகம் கொண்டாடுகிறது.

உலகமெங்கிலும் பலமொழிகள் புகழ்பாடும் ஆண்டவர் ஏசுகிருஸ்துவின் மேல் தமிழிலும் பாடல்கள் உண்டு. தமிழ்த் திரைப்படங்களிலும் பாடல் உண்டு.

தேவன் கோயிலிலே யாவரும் தீபங்களே
பாவிகள் யாருமில்லை பேதங்கள் ஏதுமில்லை
மேரியின் பூமணி மேவிய கோயிலிலே
முத்தினமே ரத்தினமே சித்திரமே சிறுமலரே
படம் – வெள்ளை ரோஜா
பாடல் – வாலி
பாடியவர் – மலேசியா வாசுதேவன்
இசை – இசைஞானி இளையராஜா
பாடலின் சுட்டி – http://youtu.be/9hgnW6jbwTU

இந்தப் பாடல் ஆண்டவருடைய அன்பும் அருளும் உலகத்து உயிர்கள் அனைத்துக்கும் உரியது என்று சொல்கிறது. செய்த தவறுகளை உணர்ந்து திருந்தி ஆண்டவரிடத்தில் மன்னிப்பு கேட்டால் பாவிகள் யாருமில்லை என்பதும் உண்மைதானே. அதற்கும் ஒரு பாடல் தமிழ்த்திரைப்படத்தில் உண்டு.

தேவனே எம்மைப் பாருங்கள்
என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்
ஆயிரம் நன்மை தீமைகள்
நாங்கள் செய்கின்றோம் நீங்கள் அறிவீர் மன்னித்தருள்வீர்
ஓ! மை லார்ட் பிளீஸ் பர்டன் மீ!
படம் -ஞான ஒளி
பாடல் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர் – டி.எம்.சௌந்தரராஜன்
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
பாடலின் சுட்டி – http://youtu.be/kucQ0fIi7-k

நாம் செய்த குற்றங்களை உணர்ந்து ஆண்டவரிடத்தில் மண்டியிட்டு வணங்கினால் உள்ளத்து வருத்தத்தை நீக்கி நம்மைத் திருத்தி நல்வழிப் படுத்துவார். அப்படி உள்ளம் உயிரும் அன்பில் ஊறி வாழும் போது நாமெல்லாம் ஆண்டவரின் திருச்சபையில் மணம் பரப்பிப் பூத்துக் குலுங்கும் மலர்களாகிறோம். வேத நாதத்தை உலகெல்லாம் எடுத்துச் சொல்லி ஒலிக்கும் மணிகளாகி புன்னகைக் கோலமிட்டு ராகங்கள் பாடி வாழ்வெல்லாம் தோத்திரம் பாடி ஆனந்தம் கொள்வோம்.

தேவன் திருச்சபை மலர்களே
வேதம் ஒலிக்கின்ற மணிகளே
போடுங்கள் ஓர் புன்னகைக் கோலம்
பாடுங்கள் ஓர் மெல்லிசை ராகம்
படம் – அவர் எனக்கே சொந்தம்
பாடல் – பஞ்சு அருணாச்சலம்
பாடியவர் – இந்திரா & பூரணி
இசை – இசைஞானி இளையராஜா
பாடலின் சுட்டி – http://youtu.be/J-GYxlC_iZw

ஆண்டவரே, மந்தையில் போகும் ஆடுகள் பாதை அறியாதவை. போகுமிடம் தெரியாதவை. ஒருவாய் புல்லுக்காக கல்லும் முள்ளும் நிறைந்த நிலத்தின் போகின்றவை. ஆனால் மேய்ப்பவன் அவைகளை வழிநடத்துவது போல நீரே மேய்ப்பராய் இருந்து எங்களை வழிநடத்துவீராக!

மேய்ப்பவன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்
மன்னன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்
மேரிமாதா தேவமகனைக் காப்பது எப்படியோ
தேவதூதன் நம்மை எல்லாம் காப்பது அப்படியே!
படம் – கண்ணே பாப்பா
பாடல் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர் – இசையரசி பி.சுசீலா
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
பாடலின் சுட்டி – http://youtu.be/4XiCi3Fa-Aw

அன்புடன்,
ஜிரா

118/365