கட்டிடமா? கட்டடமா?

  • படம்: வேலைக்காரன்
  • பாடல்: தோட்டத்துல பாத்தி கட்டி
  • எழுதியவர்: மு. மேத்தா
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். பி. ஷைலஜா, சாய்பாபா
  • Link: http://www.youtube.com/watch?v=ivOk24GPZlI

கட்சிகளும் வாங்கி இங்கே கட்டிடங்கள் வெச்சிருக்கு,

கஷ்டப்படும் ஏழைக்கெல்லாம் கட்டாந்தரைதானிருக்கு!

’கட்டிடம்’ என்ற வார்த்தையைதான் பேச்சில், எழுத்தில் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம், மிகச் சிலர்மட்டும் ‘கட்டடம்’ என்று எழுதுகிறார்கள். இவற்றுள் எது சரி?

இரண்டுமே சரிதான், நீங்கள் எந்த அர்த்தத்தில் சொல்லவருகிறீர்கள் என்பதைப்பொறுத்து வார்த்தை மாறும்.

முதலில், கட்டடம், கட்டிடம் ஆகிய வார்த்தைகளைப் பிரித்துப் புரிந்துகொள்வோம், அப்புறம் பிழையே வராது.

முத்து + அணி = முத்தணி என்று புணர்கிறதல்லவா, அதுபோல, கட்டு + அடம் = கட்டடம்.

’கட்டு’ என்பது எல்லாருக்கும் தெரிந்த வார்த்தை, அதென்ன ‘அடம்’? இப்பவே எனக்குக் கல்யாணம் கட்டிவெச்சாதான் ஆச்சு என்று ஒருவர் விழுந்து புரண்டு அடம் பண்ணுகிறாரா?

ஒன்றன்மீது ஒன்றாகப் பொருள்களை வைக்கும்போது, அதை ‘அடுக்குதல்’ என்கிறோம், இதே காரணத்தால் Apartmentகளுக்குத் தமிழில் ‘அடுக்ககம்’ என்று பெயர் உண்டு. ‘அடுக்கு மல்லி’ என்ற மலருக்கும் இதே காரணத்தால் அமைந்த பெயர்தான்.

அடுக்குதல், அடுக்ககம், அடுக்கு மல்லி ஆகியவற்றின் வேர்ச்சொல்தான் இந்த ‘அடம்’. செங்கற்களை / மற்ற கட்டுமானப் பொருள்களை அடுக்கிக் கட்டப்படுவது கட்டடம்.

அடுத்து, முத்து + இனம் = முத்தினம் என்று புணர்கிறதல்லவா, அதுபோல, கட்டு + இடம் = கட்டிடம். அதாவது, கட்டுகின்ற இடம், அல்லது கட்டுவதற்கான இடம், கட்டுமானப் பொருள்களைச் சேகரித்துவைத்திருக்கும் இடம்.

ஆக, ‘கட்டடம்’ என்பது Building, ’கட்டிடம்’ என்பது Construction Site.

இன்னொரு கோணம், ’கட்டு இடம்’ என்பதை வினைத்தொகையாகவும் பார்க்கலாம், இதுபற்றி ஏற்கெனவே ‘நாலு வரி நோட்’டில் பேசியிருக்கிறோம்: https://4varinote.wordpress.com/2012/12/28/027/

வினைத்தொகை முக்காலத்துக்கும் பொருந்தும், ஆக, கட்டு இடம் என்பதற்குக் கட்டுகின்ற இடம், கட்டிய இடம், கட்டப்போகும் இடம் என்று அர்த்தம் வரும். அந்த விதத்தில் பார்த்தால், ‘கட்டிடம்’ என்ற சொல்லையும் Buildingஐக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தலாம். மு. மேத்தா இந்தப் பாடலில் குறிப்பிடுவதுபோல!

***

என். சொக்கன் …

28 03 2013