உதடுகளில் உன் பெயர்

தூது செல்வதாரடி
உடன் வரத் தூது செல்வதாரடி
வான் மதி மதி மதி மதி அவரென் பதி
என் தேன் மதி மதி மதி கேள் என் சகி
உடன் வரத் தூது செல்வதாரடி
படம் – சிங்காரவேலன்
பாடல் – பொன்னடியான்
பாடியவர் – எஸ்.ஜானகி
இசை – இசைஞானி இளையராஜா
பாடலின் சுட்டி – http://youtu.be/NX9B1s71ILs

காதற் குளத்தில் விழுந்து முழுகி காப்பாற்ற யாருமின்றித் தவிக்கும் ஒரு காதலி அவளுடைய காதலுக்குத் தூதாக யாரை அனுப்புவது என்று புரியாமல் தத்தளிக்கிறாள். அதுதான் மேலே சொல்லியிருக்கும் பாடல்.

காதலுக்குத் தூதாக யாரை அனுப்புவது என்பதே ஒரு பெரிய பிரச்சனை. ”தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாளோ தலைவி” என்று கண்ணதாசன் கூட முன்பு எழுதினார். ஆனால் அது காதல் தூதைச் சரியாகச் சொல்லுமா?

அதற்கு முன்பு அன்னத்தை தூது விட்டாள் தமயந்தி என்று புகழேந்திப் புலவன் நளவெண்பாவில் எழுதினான்.
மேகத்தைத் தூது விட்டதைப் பற்றி காளிதாசன் வடமொழியில் எழுதினான்.
கண்ணையும் கண்ணையும் தூது விட்டு அண்ணலும் நோக்கி அவளும் நோக்கி காதலில் விழுந்ததை கம்பனும் எழுதினான். சுந்தரமூர்த்தி நாயனாரோ காதலுக்கு ஈசனாரையே தூது விட்டார்.

இப்படி தூதாக ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை அனுப்பியிருக்க காளமேகம் அத்தனையும் ஒன்றுக்கும் உதவாதது என்று ஒதுக்கி விடுகிறான். சும்மா ஒதுக்கவில்லை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணத்தோடுதான் ஒதுக்குகிறான். அந்தக் காரணங்களைப் பட்டியலிட்டு நமக்காக ஒரு பாட்டையும் ஒதுக்குகிறான்.

தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி

என்ன? ஒன்றும் புரியவில்லையா? கொஞ்சம் பிரித்துப் பிரித்துச் சொல்கிறேன். புரிகின்றதா என்று பாருங்கள்.

தாதிதூ தோதீது – தாதி தூதோ தீது – தாதி(பணிப்பெண்) செல்லும் தூது தீயது
தத்தைதூ தோதாது – தத்தை தூதோதாது – தத்தை தூது ஓதாது – கிளியானது தூதைச் சிறப்பாகச் சென்று ஓதாது
தூதிதூ தொத்தித்த தூததே – தூதி தூது ஒத்தித்த தூததே(தூது அதே) – தோழி செல்லும் தூது தள்ளிப்போடப்பட்டுக் கொண்டேயிருக்கும் தூதாகி விடும்
தாதொத்த துத்தி தத்தாதே – தாது ஒத்த துத்தி தத்தாதே – பூந்தாதை ஒத்த பசலை நிறம் கொண்ட தேமல் என் மேல் படராது
தேதுதித்த தொத்து தீது – தே துதித்த தொத்து தீது – தே(இறைவனை) துதித்துத் தொற்றிக் கொள்வதும் தீதே

என்னடா கொடுமை இது?
தாதியையும் தூது அனுப்பக் கூடாது.
கிளியை அனுப்பினால் சொன்னதையே சொல்லி உளறிவிடும்.
தோழியை அனுப்பினால் எதுவும் காலத்தில் ஆகாது.
தெய்வத்தையே துதித்துக் கொண்டிருந்தால் ஒரு பயனும் இராது.

அப்படியானால் என்னதான் செய்வது? எதுதான் நல்லது? அதுதான் பாடலின் கடைசி வரி.

தித்தித்த தோதித் திதி – தித்தித்தது ஓதித் திதி – தித்திப்பான காதலன் பெயரையே ஓதிக் கொண்டிருப்பேனாக!

இதைத்தான் பின்னாளில் “உதடுகளில் உனது பெயர் ஒட்டிக் கொண்டது. அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது” என்று நா.காமராசன் தங்கரங்கன் படத்துக்காக எழுதினார். அந்தப் பாட்டின் ஒளிச்சுட்டி கிடைக்கவில்லை. பி.சுசீலாவும் ஜெயச்சந்திரனும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் இசையமைப்பில் பாடிய அந்தப் பாடலின் ஒலிச்சுட்டி இதோ – http://www.thiraipaadal.com/album.php?ALBID=ALBOLD000838

அன்புடன்,
ஜிரா

116/365