மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன?

 • படம்: ரிக்‌ஷாக்காரன்
 • பாடல்: அழகிய தமிழ் மகள் இவள்
 • எழுதியவர்: வாலி
 • இசை: எம். எஸ். விஸ்வநாதன்
 • பாடியவர்கள்: டி. எம். சௌந்தர்ராஜன், பி. சுசீலா
 • Link: http://www.youtube.com/watch?v=EzB3M2LpQZM

பாலில் விழும் பழம் எனும், போதை பெறும் இளம் மனம்,

அள்ளத்தான், அள்ளிக் கொள்ளத்தான்!

காதல் நிலா முகம் முகம், கண்ணில் உலா வரும் வரும்,

மெல்லத்தான், நெஞ்சைக் கிள்ளத்தான்!

இந்த வரிகளில் ’நிலா முகம்’ என்று படித்தவுடன், ‘நிலாவைப் போன்ற முகம்’ என்று நாம் புரிந்துகொள்கிறோம், வேறொரு பாடலில் ‘பட்டுக் கன்னம்’ என்று வருகிறது, உடனே ‘பட்டுப் போன்ற மென்மையான கன்னம்’ என்று நாம் கோடிட்ட இடங்களை நிரப்பிவிடுகிறோம்.

அந்தக் கோட்டுக்கு ஓர் இலக்கணப் பெயர் இருக்கிறது, ’தொகை’.

இங்கே ‘தொகை’ என்றால் நூற்று எழுபத்தேழு ரூபாய் அறுபது பைசா அல்ல. தொக்கி நிற்பது, அதாவது ஒளிந்து நிற்பது என்று பொருள்.

உதாரணமாக, ’அண்ணன் தம்பி’ என்று சொன்னால், அது ‘அண்ணனும் தம்பியும்’ என்று விரியும், ஆக, ‘உம்’ என்கிற பதம் நடுவில் ஒளிந்திருக்கிறது, இது ‘உம்மைத் தொகை’.

அதுபோல, ‘நிலா முகம்’, ‘பட்டுக் கன்னம்’, ‘மான் விழி’, ‘தேன் மொழி’, ‘முத்துப் பல்’ எல்லாம் ‘உவமைத் தொகை’.

பொதுவாக உவமையில் 4 விஷயங்கள் இடம்பெறும்:

 • உவமேயம்
 • உவமை
 • ஒற்றுமை
 • உவம உருபு

உவமேயம் என்பதுதான், நிஜமான பொருள், அதற்கு இன்னொன்றை உவமையாகச் சொல்கிறோம். இந்த உவமைக்கும் உவமேயத்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கவேண்டும், அதைக் குறிப்பிடுவதற்கு வரும் கூடுதல் சொல் ‘உவம உருபு’.

’கிர்’ரென்று இருக்கிறதா? ஒரு சின்ன உதாரணம் சேர்த்தால் புரிந்துவிடும். மிஸ்டர் Xஐப் பார்த்து மிஸ்டர் Y சொல்கிறார், ’நீ பெரிய வீரன், நெப்போலியன்போல!’

இங்கே X என்பவர்தான் பொருள், அதாவது உவமேயம், நெப்போலியன் என்பது அவருக்கு உவமை, வீரம் என்பது ஒற்றுமை, ‘போல’ என்பதுதான் உவம உருபு.

இதே உதாரணத்தை ‘நிலா முகம்’க்குக் கொண்டுவருவோம்:

 • உவமேயம் : முகம்
 • உவமை : நிலா
 • ஒற்றுமை : வட்ட வடிவம் (அல்லது) வெளிச்சம் (அல்லது) வேறு ஏதோ
 • உவம உருபு : ??

இந்தச் சொல்லின் பொருள் ‘நிலா போன்ற முகம்’, ஆனால் அதைச் சொல்லும்போது ‘போன்ற’ என்ற உவம உருபு மறைந்து நிற்கிறது, ஆகவே இதை ‘உவமைத் தொகை’ என்பார்கள்.

இதுபோல் உவமைகளாகக் கொட்டிப் பாட்டு எழுதி முடித்தபின், அந்தக் கவிஞர் Cheque வாங்குவாரில்லையா, அதுவும் ‘உவமைத் தொகை’தான் :>)

***

என். சொக்கன் …

26 03 2013

115/365