சலாம் குலாமு!

  • படம்: பிரியமுடன்
  • பாடல்: ஆகாசவாணி, நீயே என் ராணி
  • எழுதியவர்: அறிவுமதி
  • இசை: தேவா
  • பாடியவர்: ஹரிஹரன்
  • Link: http://www.youtube.com/watch?v=M3vlijwhkrE

நிலா, நிலா, என் கூட வா!

சலாம், சலாம், நான் போடவா?

சதா, சதா, உன் ஞாபகம்,

சுகம், சுகம், என் நெஞ்சிலே!

தமிழில் எத்தனையோ பாடலாசிரியர்கள் உண்டு. ஆனால் அறிவுமதிக்கு ஒரு சிறப்பு, தமிழோடு ஆங்கிலத்தைக் கலந்து கட்டிய பாடல் வரிகள்தான் ‘ஹிட்’டாகும் என்கிற சூழலில், ’நான் ஆங்கில வார்த்தைகளைச் சேர்த்துப் பாடல் எழுதமாட்டேன்’ என்று தைரியமாக அறிவித்தவர். அதனால் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தபோதும் அவர் சளைக்கவில்லை, இன்றுவரை மிக நல்ல தமிழ்ப் பாடல்களைமட்டுமே எழுதியவர் என்கிற தனிப் பெருமையும் மரியாதையும் அவருக்கு உண்டு.

அதனால்தான், இந்த ‘ஆகாசவாணி’ பாடல் அறிவுமதி எழுதியது என்று ஒரு நண்பர் சொல்லக் கேட்டபோது, என்னால் சட்டென்று நம்பமுடியவில்லை. காரணம், ‘ஆகாசவாணி’ என்பதே வடமொழிச் சொல் என்பது ஒருபக்கமிருக்க, பாடலின் நடுவில் ‘நிலா’வுக்கு எதுகையாக ‘சலாம்’ என்கிற உருதுச் சொல்லைப் பயன்படுத்தியிருப்பார் கவிஞர்.

அறிவுமதி ஏன் அப்படிச் செய்யவேண்டும்? ‘நிலா’வுக்கு இணையான நல்ல தமிழ்ச் சொற்களா இல்லை?

‘சலாம்’ என்பது வேற்றுமொழிச் சொல்தான். ஆனால், தமிழ் இலக்கியத்தில் அதற்கு இடம் ஏற்கெனவே உண்டு. அதை ஏற்படுத்தித் தந்தவர், திருப்புகழ் தந்த சந்தக் கவி அருணகிரிநாதர்.

‘அவா மருவு’ என்று தொடங்கும் அந்தத் திருப்புகழ் பாடலின் நிறைவு வரிகள் இவை:

சுராதிபதி, மால், அயனொடு மாலும் சலாம் இடு

சுவாமிமலை வாழும் பெருமாளே!

’அசுரர்’ என்றால் நமக்கு அர்த்தம் தெரியும், அதற்கு எதிர்ப்பதம் சுரர் (அநியாயம், நியாயம்போல), அதாவது, தேவர்கள், அவர்களுடைய அதிபதி (தலைவன்) தேவேந்திரன், மால் என்றால் திருமால், அயன் என்றால் பிரம்மா, இவர்கள் எல்லாரும் சேர்ந்து, சுவாமிமலையில் வாழும் முருகனை வணங்குகிறார்கள், அதாவது, அவனுக்குச் ’சலாம் போடு’கிறார்கள் என்று அருணகிரிநாதர் எழுதுகிறார்.

திருப்புகழில் வந்த ‘சலாம்’, அறிவுமதியால் கொஞ்சம் திரைப்புகழும் பெற்றாலென்ன? தப்பில்லை!

***

என். சொக்கன் …

23 03 2013

112/365