தேசிங்கு ராஜா!

வரலாற்றுப் பின்னணியில் இப்போதெல்லாம் படங்கள் வருவதேயில்லை. ஆனாலும் காதற் பாடல்களில் நாயகனை வீரமுள்ளவனாகக் காட்ட வரலாற்று நாயகர்களாகக் குறிப்பிடுவதும் உண்டு. அதிலும் அதிகமாக குறிப்பிடப்பட்டது கட்டபொம்மனாகத்தான் இருக்கும். பாரி வள்ளலும் ராஜராஜசோழனும் திருமலை மன்னனும் கூட பாட்டில் வந்திருக்கிறார்கள்.

இப்படி இவர்கள் வந்த பிறகு புதிதாக யாரையாவது குறிப்பிட வேண்டும் என்று நா.முத்துக்குமாருக்கு தோன்றியிருக்கலாம். அதனால் தேசிங்குராஜாவை அழைத்து வந்து விட்டார்.

தேசிங்குராஜா தேசிங்குராஜா
திருதிருதிருன்னு முழிப்பது ஏன்
தஞ்சாவூரு ராணி தஞ்சாவூரு ராணி
குறுகுறுன்னு பார்ப்பதென்ன
படம் – டும் டும் டும்
பாடல் – நா.முத்துக்குமார்
பாடியவர்கள் – ஹரிஷ் ராகவேந்திரா, சுஜாதா
இசை – கார்த்திக் ராஜா
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=JHTZ43dRtLc

சரி. யார் இந்த தேசிங்கு ராஜா? எந்த ஊர் ராஜா? அதை விளக்கமாகச் சொல்ல சிறிய வரலாற்றுப் பாடம் எடுக்க வேண்டும்.

18ம் நூற்றாண்டிலே செஞ்சியை ஆண்ட சிற்றரசன் தேசிங்கு ராஜா. இன்றைய செஞ்சியில் நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டிய கோட்டைகளும் இடிபாடுகளும் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. ஆனால் நாயக்கர்கள் ஆட்சி மறைந்த பிறகும் செஞ்சியில் சுவாரசியமான வரலாற்று நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.

தென்னாட்டையும் பிடிக்க வேண்டும் என்று ஔரங்கசீப்புக்குக் கனவு. அதனால் அடிக்கடி தாக்குதல்கள். மதுரை, தஞ்சை மற்றும் செஞ்சி நாயக்கர் ஆட்சிகள் வீழ்ந்தன. மராட்டிய சிவாஜியின் மகன் ராஜாராம் ஔரங்கசீப்பிடம் இருந்து தப்பித்து செஞ்சிக் கோட்டைக்கு வந்து பதுங்கியிருந்தார்.

இராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த சொரூப்சிங் தலைமையில் ஔரங்கசீப்பின் படை செஞ்சிக்கோட்டையைத் தாக்குகிறது. கிட்டத்தட்ட பதினோறு மாத முற்றுகைக்குப் பின்னர் செஞ்சிக்கோட்டை வீழ்ந்தது. அந்த வெற்றியைப் பாராட்டி செஞ்சி ஆட்சியை சொரூப்சிங்குக்கே கொடுத்து விடுகிறார் ஔரங்கசீப்.

அந்த சொரூப்சிங்குக்கும் ராதாபாய்க்கும் பிறந்த மகன் தான் தேஜ்சிங். அதாவது தமிழர்கள் உச்சரிப்பில் தேசிங்கு.

வடக்கில் அதற்குள் ஔரங்கசீப் ஆட்சி முடிந்து ஷாஆலம் ஆட்சி தொடங்கியிருந்தது. அவரிடம் ஒரு குதிரை வந்தது. பரிகாரி என்று பெயரிடப்பட்ட குதிரை அழகும் கம்பீரமும் சேர்ந்த உயர்ந்த வகை. ஆனால் அதை யாரும் அடக்கி ஓட்ட முடியவில்லை.

குதிரைப் பயிற்சியில் சிறந்திருந்த சொரூப்சிங் அழைக்கப்பட்டார். சொருப்சிங்காலும் அந்தக் குதிரையை பழக்க முடியவில்லை. ஆனால் அதை முடித்துக் காட்டினான் பதினெட்டு வயது தேஜ்சிங். அந்த வெற்றிக்குப் பரிசாக தேஜ்சிங்குக்கு பரிகாரியே கிடைத்தது. அதுமட்டுமல்ல, தேஜ்சிங்கின் ராஜபுத்ர இனத்திலிருந்தே பெண்ணெடுத்து திருமணமும் செய்து வைத்தார் ஷாஆலம்.

அந்த பெண்ணின் பெயர் ராணிபாய். இவருடைய பெயரில் உருவானதுதான் இன்றைய ராணிப்பேட்டை என்று சொல்கிறார்கள். தலையைச் சுற்றுகிறதா? வரலாற்றுச் சம்பவங்களைச் சுருக்கமாகச் சொன்னால் கொஞ்சம் சுற்றத்தான் செய்யும். 🙂

மிகச் சிறுவயதிலேயே ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை வந்தது தேஜ்சிங்குக்கு. அவனுடைய நண்பன் முகமதுகான் தேஜ்சிங்குக்கு எல்லா வகையிலும் துணையாக இருந்தான். அவனிடமும் ஒரு குதிரை இருந்தது. அதன் பெயர் நீலவேணி. அதன் மேல் முகமதுகானுக்கு உயிர்.

எல்லாம் நன்றாகப் போவது போலத்தான் இருந்தது ஆர்க்காட்டு நவாப் பிரச்சனையைத் தொடங்கும் வரை. ஆர்க்காட்டு நவாய் யார் வரி கேட்பதற்கு என்று போர் தொடங்கியது.

எத்தனையோ திரைப்படங்களிலும் கதைகளிலும் வருவது போன்ற காட்சிதான். முகமதுகானுக்குத் திருமணம் வைத்த நாளில் போர் முரசு கொட்டியதாம். ஆகையால் திருமணத்தை நிறுத்தி விட்டு போருக்குப் புறப்பட்டானாம் முகமதுகான்.

கொடும் போர் நடந்தது. போரில் வீர மரணம் அடைந்தான் தேஜ்சிங். அவனது மனைவி ராணிபாய் தீப்பாய்ந்து உயிர் விட்டார். முகமதுகானும் போரில் உயிரிழந்தான். அவனுடைய குதிரை நீலவேணியும் கொல்லப்பட்டது.

நீலாம்பூண்டி என்னும் சிற்றூரில் தேஜ்சிங்கின் சமாதி உள்ளது. அருகிலேயே முகமதுகானுக்கும் அவனுடைய குதிரை நீலவேணிக்கும்.

அன்புடன்,
ஜிரா

111/365