காந்தன்

ஜெயகாந்தன் –  எழுத்திலும் பேச்சிலும் எப்போதும் இருக்கும் தெளிவும் வீச்சும் ஒரு வசீகரிக்கும் கம்பீரம். இவர் கதைகள் திரைப்படமாக்கப்பட்டபோது அவரே திரைக்கதை வசனம் மற்றும் பாடல்களையும் எழுதினார். உரைநடை போல அமைந்த பாடல் வரிகள் இவர் ஸ்டைல்

எந்த முடிவும் எடுக்க முடியாமல் நிற்கும் ஒரு பெண் பழைய நினைவுகளை அசைபோடும் நிலை பற்றி இவர் எழுதிய ஒரு பாடல். சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற படத்தில் MSV இசையில் வாணி ஜெயராம் பாடும்  பாடல். https://www.youtube.com/watch?v=ORxnMjKDGFE

ஒரு  உண்மை சம்பவத்தை வைத்து அக்கினிப் பிரவேசம் என்று சிறுகதை எழுதினார். அது பரபரப்பாக பேசப்பட்டது . அவரே அதை மையமாக வைத்து சில நேரங்களில் சில மனிதர்கள் என்று ஒரு நாவலாக எழுதினார் . அதில் ‘சிறுகதை ஆசிரியரை’ ஒரு கதைப் பாத்திரமாக உலவவிட்டார் .சிறுகதை அதை சுற்றி ஒரு நாவல் அதற்கு ஒரு திரைக்கதை பின் இதன் Sequel ஆக கங்கை எங்கே போகிறாள் என்று ஒரு நாவல் – இப்படி  இந்த களம், கதைமாந்தர்களுடன் ஒரு நெடுநாள் உறவுடன் இருந்த ஒரு படைப்பாளி பாடலையும் கதையின் தொடர்ச்சியாக பார்த்ததில் வியப்பில்லை.

வேறு இடம் தேடிப்போவாளோ

இந்த வேதனையில் இருந்து மீள்வாளோ

நூறு முறை இவள் புறப்பட்டாள்

விதி நூலிழையில் இவள் அகப்பட்டாள்

என்று வரும் பாடல்.

மழை என்றால் செழிப்பு ஆனால் இவள் என்ன சொல்கிறாள்?

பருவ மழை பொழிய பொழிய

பயிரெல்லாம் செழிக்காதோ

இவள் பருவ மழையாலே வாழ்க்கை

பாலைவனமாகியதே

மழை பெய்ததானால் பாலைவனமான அவள் வாழ்வு பற்றி வலியுடன் சொல்லும் வார்த்தைகள் இது  கதையின் முக்கிய நிகழ்வான அந்த மழை நாளைப்பற்றி தெளிவான வரிகள். ‘இவள் பருவ மழை’ என்னும் நயம்

தொடர்ந்து  ஒரு Introspection – எதனால் இந்த தனிமரம் போன்ற நிலை என்று யோசிக்கிறாள்

தருவதனால் பெறுவதனால்

உறவு தாம்பத்யம் ஆகாதோ

இவள் தரவில்லை பெறவில்லை

தனி மரமாய் ஆனாளே

சிறு  வயதில் செய்த பிழை

சிலுவையென சுமக்கின்றாள்

திரைப்படம் இந்த பாடலுடன் முடிவடையும் (அந்த நாட்களில் படத்தின் இறுதியில் வரும் ஒரு இசையை MSV இந்தப்பாடலின் இறுதியில் சேர்த்திருப்பார் கவனியுங்கள் )

கடைசியில் Inception படத்தில் வரும் Totem போல சில வரிகள்

இவள் மறுபடியும் உயிர்ப்பாளோ

மலரெனவே முகிழ்ப்பாளோ

ஒரு மழை நாளில் நடந்த நிகழ்வு, தனிமரமான கதை , அவள் சிறு வயதில் செய்த பிழை, என்று எல்லாம் சொல்லி சட்டென்று ‘இவள் மறுபடியும் உயிர்ப்பாளோ மலரெனவே முகிழ்ப்பாளோ’ என்று ஒரு நன்னம்பிக்கை முனையை விவரித்து  கதையை தொடர ஒரு lead கொடுக்கும் திறமை….

சூப்பர் ஸ்டாருக்கு வைரமுத்து எழுதிய ‘பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா’ என்ற வரிகள் இவருக்கும் பொருத்தமாகவே  இருக்கும்.

மோகனகிருஷ்ணன்

110/365