விருந்தினர் பதிவு : தீர்ந்த தாகம்

கல்லூரிப் பருவம் வரை தீவிர ரஹ்மான் ரசிகனாக இருந்த என்னை இளையராஜாவின் பக்தனாக மாற்றிய பாடல்களுள் ஒன்று, ‘கேளடி கண்மணி, பாடகன் சங்கதி!’

மனம் சரியில்லாத ஒரு நாள் இந்தப் பாடலைக் கேட்டபோது மயிலிறகால் வருடிய இதம் கிடைத்தது. அதிலிருந்து எப்போது மனம் பாரமாக இருந்தாலும் நான் தேடும் சுமைதாங்கி இந்தப் பாடல்தான். சிந்து பைரவி ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல். குறிப்பாக இரண்டாம் இடையிசைச்சரத்தில் வரும் குழலோசை – Ultimate. ராஜாவின் இசையும் வாலியின் வரிகளும் இணைந்து மனதை இலேசாக்கும். பிரியமானவரின் தோளில் சாய்ந்துகொண்டு கவலைகளை மறப்பது போன்ற அனுபவத்தைக் கொடுக்கும்.

பல வருடங்களாக இப்பாடலின் ஒரு வரியில் சந்தேகம் இருக்கிறது. கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி என்று ஒரு வரி வரும்.

இந்த வரி ஒரு Universal Truth. கங்கை நீரால்தான் தாகத்தைத் தீர்க்க முடியுமே தவிர கானல் நீரால் ஒருபோதும் முடியாது. இது எப்படிக் கவிதையாகும்?

கதையின்படி மனைவியால் சந்தோஷத்தை இழந்த நாயகன் வழியில் சந்திக்கும் ஒரு பெண்ணிடம் தன் மன பாரத்தை இறக்கி வைக்கிறான். வாழ்க்கைத்துணையை கங்கை நீருக்கும், வழித்துணையைக் கானல் நீருக்கும் அல்லவா ஒப்பிட்டிருக்க  வேண்டும்? கவிதைக்குப் பொய் அழகு என்பதால் கங்கை நீரால் தீராத தாகம் கானல் நீரால் தீர்ந்ததடி என்றிருந்தால் ‘இல் பொருள் உவமை’ மாதிரி எவ்வளவு கவித்துவமாக இருந்திருக்கும்!

என்றேனும் கவிஞர் வாலியைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தால், இந்தக் கேள்வியைதான் முதலில் கேட்பேன்!

கார்த்திக் அருள்

இசை ரசிகர், திரைப்பட ரசிகர், புது மொழிகளைக் கற்றுக்கொள்ளப் பிடிக்கும், கே. பாலச்சந்தர், இளையராஜா, எஸ். பி. பாலசுப்ரமணியம் மூவரையும் ரொம்ப பிடிக்கும்!

தமிழ்மீது ஆர்வம், வாசிப்பும் எழுத்தும் பேரார்வம், பேரானந்தம்!

வலைப்பதிவு: http://www.chummaaorublog.wordpress.com