விருந்தினர் பதிவு : மீனும் வலையும்

படைப்பாளிகளுக்குள் தீவிரக் குடுமிப்பிடிகள் எல்லாத் துறைகளிலும் சகஜம். எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் என்று நேரடி மோதல்கள், மறைமுக மோதல்கள், சீண்டல்கள் என எல்லா வட்டத்திலும் இதற்கு உதாரணங்கள் உண்டு.

கானாபிரபா குறிப்பிடும் இந்த விஷயம் எவ்வளவு தூரம் நிஜம் என்று தெரியவில்லை.

இசைஞானி இளையராஜாவின் குடும்ப நிறுவனம் “பாவலர் கிரியேஷன்ஸ்” தயாரிப்பில் வந்த படம் “ராஜாதி ராஜா”. இருந்தாலும் கங்கை அமரன் தவிர, பிறைசூடனும், பொன்னடியானும் பாடல்களிலே தம் பங்களிப்பை வெளிப்படுத்தினர், குறிப்பாக “எங்கிட்ட மோதாதே” பாடல் அன்றைய எதிராளி சந்திரபோஸ் இற்கு குட்டு வைக்கவும் பயன்பட்டிருக்கலாம் என்று நண்பர்களிடையே அப்போது பேசிக்கொண்டோம். சந்திரபோஸ் தன் பங்கிற்கு “வில்லாதி வில்லனையும் தோற்கடிப்பேன் நான் ராஜாதிராஜனையும் ஜெயிச்சிடுவேன்” என்று பதிலுக்கு பாட்டைப் போட்டார். < நன்றி: கவிஞர் பொன்னடியானும் இசைஞானி இளையராஜாவும் >

இப்படி சில விஷயங்கள் அந்தந்த சந்தர்ப்பங்களை ஒட்டி நம் ஊகங்களின் அடிப்படையில் நமக்கு அவலாய் அமையும்.

சரி, விஷயத்திற்கு வருவோம்!

கவிஞர்களிடையே கூட அந்தக் காலந்தொட்டு சுவாரசியச் சீண்டல்கள் இருந்ததுண்டு. ரொம்பவெல்லாம் பின்னோக்கிப் பிரயாணிக்க வேண்டாம். இதோ இருபதே இருபது ஆண்டுகள் பின்னே போவோம்.

தொண்ணூறுகளில் வெளிவந்த ஜெண்டில்மேன், காதலன் இரண்டு படங்களிலும் வந்த பாடல்களில் கவிப்பேரரசரும், வாலிபக் கவிஞரும் செய்து கொண்ட செல்லச் சீண்டல்களைப் பாருங்களேன்.

”ஒட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ” பாடலில் வரும், “கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது; பெண்ணே நான் தூண்டில் போட்டால் விண்மீனும் தப்பாது”

என்று முன்னவர் எழுதிய இந்த வரிகளுக்குப் பின்னவர் இப்படி எதிர்க் கேள்வி தொடுக்கிறார்…

செம்மீன்கள் மாட்டுகின்ற வலைகொண்டு வீசினால் விண்மீன்கள் கையில் வருமோ?

இது பின்னவர் காதலன் படத்தின் “முக்காலா முக்காப்புலா” பாடலினிடையே செருகியது.

”சிச்சுவேஷனைச் சொல்லுய்யா, இந்தா பாட்டை எடுத்துக்கோ, பேமெண்டு குடுய்யா போகணும்”, என்று எழுதுபவன் வியாபாரி. இப்படி ஏதேனும்  சுவாரசியம் சேர்ப்பவன்தானே நிஜமான படைப்பாளி!

இது எங்கோ எப்போதோ படித்தது. இதுபோல இன்னும் பின்னோக்கிப் பயணித்தால் கவியரசர் காலத்தில் இன்னமும் நிறைய சுவாரசியங்கள் கிடைக்கலாம்.

கிரி

என்னா சார் பெரிய அறிமுகம். கடந்த முப்பத்ந்தைந்து வருடங்களாக தமிழ் இலக்கியத்தில் உழல்பவர்; ழார் பத்தாய், ஜின்முன்கின் போன்றவர்களின் இந்திய வாரிசு’ன்னு எதுனா போடுங்க சாமி…

ஹிஹி… ஜோக்கு.
நம்மைப் பத்தி நாமே என்னத்த சொல்ல சாமி? இது பதிவு எழுதறதைவிட கொடுமையான விஷயமா இருக்கே?
எனிவே இந்தாங்கோ…..

”என்னத்த சொல்ல” என்பதைத் தவிர தன்னைப் பற்றி சொல்ல ஏதுமில்லை எனக் குறிப்பிடும் கிரி கடந்த இருபது வருடங்களாக சென்னைவாசி, ஐந்து வருடங்களாக தமிழ்வலைவாசி. “பேசுகிறேன்” என்று மொக்கை போடச் செய்வார். “பாடுகிறேன்” என்று பிறரை ஓடச் செய்வார். 

நல்லவர், வல்லவர் என்று மட்டும் தன்னைப் பற்றி குறிப்பிட்டால் போதும் என்று கேட்டுக் கொண்டார்.