மன்னிப்பு எனும் மாண்பு

காதலர்களுக்குள் காதல் இருக்கும். அந்தக் காதலுக்குள் என்னவெல்லாம் இருக்கும்?

கூடல், பாடல், நாடல், ஊடல் எல்லாமிருக்கும்.

இந்த ஊடல் வந்துவிட்டால் போதும்… எப்படியாவது மன்னிப்பு கேட்டுக்கொள்ள மனம் தவிக்கும். மன்னிப்பு கிடைக்கும் வரை ஊடல் தீர்வதில்லை. மன்னிப்பு கிடைத்த பின் கூடல் விடுவதில்லை. இந்த மன்னிப்பெல்லாம் உள்ளங்கள் ஒத்திணைந்த காதலர்களிடத்தில்தான் வேலைக்காகும்.

ஆனால் எப்படியெல்லாம் மன்னிப்பு கேட்கலாம்? எதற்கெல்லாம் மன்னிப்பு கேட்கலாம்? காலங்காலமான விதம்விதமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள் திரைப்படக் காதலர்கள்.

ஒரு நாள் சிரித்தேன்
மறுநாள் வெறுத்தேன்
உனைக் கொல்லாமல் கொன்று புதைத்தேன்
மன்னிப்பாயா மன்னிப்பாயா
படம் – விண்ணைத் தாண்டி வருவாயா
பாடல் – தாமரை
பாடியவர்கள் – ஏ.ஆர்.ரஹ்மான், ஷ்ரேயா கோஷல்
இசை – ஏ.ஆர்.ரஹ்மான்

காதலின் கூடலில் சிரிப்பும் ஊடலில் வெறுப்பும் வரும். அதுதான் கூடிய ஒருநாளில் சிரித்தேன் என்றும் ஊடலாடிய மறுநாளில் வெறுத்தேன் என்றும் பாடல் வரிகளாயிற்று.

எப்போதும் கூட இருக்க முடியாத பிரிவு என்னும் சித்திரவதை மிகுந்து ஒருவரையொருவர் கொல்லும் காதலை இதயத்தில் புதைத்தால் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டியதுதானே.

இந்த மன்னிப்பெல்லாம் எல்லாக் காதலிலும் உண்டு. எங்கும் இல்லாத புதுமையான மன்னிப்பை ஒரு காதலி கேட்கிறாள். ஆம். இருமலர்கள் படத்திற்காக பி.சுசீலாவின் குரலில் அந்தக் காதலி மன்னிப்பு கேட்கிறாள்.

மன்னிக்க வேண்டுகிறேன்
உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்
என்னைச் சிந்திக்க வேண்டுகிறேன்
கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
மன்னிக்க வேண்டுகிறேன்
படம் – இருமலர்கள்
பாடல் – வாலி
பாடியவர்கள் – பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன்
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

இது ஒரு சீண்டல் மன்னிப்பு. அவளுக்கு அவன் மேல் காதல். அவன் அவளைப் பார்க்க வேண்டும். அவளைப் பற்றியே சிந்திக்க வேண்டும். அவள் கண்களைக் கண்களால் நோக்க வேண்டும். இப்படியெல்லாம் சீண்டிச் சீண்டி காதல் செய்வதால் அவளை அவன் மன்னிக்க வேண்டுமாம். நல்ல கூத்தாக இருக்கிறது அல்லவா.

இப்படி மன்னிப்பு கேட்டால் காதலன் சும்மாயிருப்பானா? அவன் மன்னிப்பதற்குப் பேரம் பேசுகிறான்.

தித்திக்கும் இதழ் உனக்கு
என்னென்றும் அது எனக்கு
நாம் பிரிவென்னும் ஒருசொல்லை மறந்தாலென்ன

இப்படிப் பேரம் பேசி மன்னித்தாலும் அது இன்பத்தில்தான் முடியும் என்று அந்தக் காதலர்களுக்குத் தெரியும்.

இன்னொரு காதலன். அவனுக்கொரு காதலி. அடிக்கடி சண்டை. முதலில் அவன் தவறு செய்தான். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டான். அவள் மன்னிக்கவில்லை. இருவரும் பிரிந்தனர். சில காலம் சென்று அவளுக்கு தவறு புரிந்தது. அவனைச் சேர நினைத்தாள். அவன் எப்படி மன்னிப்பு கேட்டாளோ அதே வரிகளால் இவளும் மன்னிப்பு கேட்டாள். பிறகென்ன. பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ!

மன்னிக்க மாட்டாயா
உன் மனமிரங்கி
நீயொரு மேதை
நானொரு பேதை
நீ தரும் சோதனை
நான் படும் வேதனை போதும்
மன்னிக்க மாட்டாயா
படம் – ஜனனி
பாடல் – நேதாஜி
பாடியவர்கள் – பி.சுசீலா, கே.ஜே.ஏசுதாஸ் (தனித்தனிப் பாடல்கள்)
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

நல்ல வேளை. காதலர்களுக்கு மன்னிப்பு என்றொரு சொல் இருக்கிறது. வாழ்க மன்னிப்பு! வளர்க மன்னிப்பு!

பதிவில் இடம் பெற்ற பாடல்களின் சுட்டிகள்.

ஒரு நாள் சிரித்தேன் – http://youtu.be/4XXPy_VmCME
மன்னிக்க வேண்டுகிறேன் – http://youtu.be/BkzwCuG3HP0
மன்னிக்க மாட்டாயா – http://youtu.be/JYVMapK0ChU
ஜனனி திரைப்படம் பற்றிய ஒரு பார்வை – http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=4723

அன்புடன்,
ஜிரா

108/365