அழுத்தினால் அர்த்தம் மாறும்

  • படம்: பாண்டித்துரை
  • பாடல்: கானக் கருங்குயிலே
  • எழுதியவர்: வாலி
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா
  • Link: http://www.youtube.com/watch?v=louBm1tC5iA

கானக் கருங்குயிலே, கச்சேரிக்கு வா, வா!

கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூவா!

முத்துப்போலே மெட்டுப்பாட

முத்துமாலை கட்டிப்போட வந்தேனே!

இந்தப் பாடலை ஏற்கெனவே கேட்டிருந்தாலும், இன்னொருமுறை கேளுங்கள், எஸ். பி. பாலசுப்ரமணியமும் ஸ்வர்ணலதாவும் ‘Kaa’னக் கருங்குயிலே என்று பாடுகிறார்களா? அல்லது, ‘Gaa’னக் கருங்குயிலே என்று பாடுகிறார்களா?

‘Kaa’தான், ‘Gaa’ அல்ல!

வேறு பல பாடல்களில் இதே ‘கானக் குயிலே’ என்ற வரி வந்திருக்கிறது, ஆனால் அங்கெல்லாம் ‘Gaa’னக் குயில்தான், ‘Kaa’னக் குயில் அல்ல.

‘கானம்’ என்ற வார்த்தை வடமொழியிலிருந்து வந்தது, ‘Gaana’ என்றால் பாடுதல், ஆக, ‘பாட்டுப் பாடும் குயில்’ என்ற அர்த்தத்தில் பயன்படுத்தினால் ‘Gaa’னக் குயில் என்பதுதான் சரியான உச்சரிப்பு.

ஆனால் SPB, ஸ்வர்ணலதா இருவரும் உச்சரிப்பில் தவறு செய்யாத சிறந்த பாடகர்கள். இசையமைத்தவரும் இதுமாதிரி நுட்பமான விஷயங்களைக் கவனிக்கிறவர். அப்புறம் எப்படி இந்தப் பிரச்னை?

காரணம் இருக்கிறது, ‘Kaa’னக் குயில், ‘Gaa’னக் குயில், இரண்டுமே சரியான உச்சரிப்புகள்தாம், நீங்கள் எந்தப் பொருளில் எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதைப்பொறுத்து அது மாறுபடும்.

‘Gaa’னக் குயில் என்றால், பாடும் குயில், சரி.

‘Kaa’னக் குயில் என்றால், கானம் / கானகம் / காட்டுக் குயில் என்று பொருள்.

சந்தேகமாக இருக்கிறதா? ‘கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி’ என்ற ஔவையார் பாடலை நினைவுக்குக் கொண்டுவாருங்கள். அங்கே ‘கானம்’ என்றால் பாடல் என்பதா பொருள்?

மயில் பார்க்க அழகாக இருக்கும், ஆனால் அதன் குரல் (அகவல்) கேட்கச் சகிக்காது. அதைப்போய் ‘பாட்டு மயில்’ என்று ஔவைப்பாட்டி எழுதியிருப்பாரா?

ஆக, இது ‘Gaaன மயில்’ அல்ல, ‘Kaaன மயில்’, காட்டு மயில்.

அதேபோல், SPBயும் ஸ்வர்ணலதாவும் பாடியது ‘Kaaனக் கருங்குயிலே’, அதாவது, காட்டில் வாழும் கருங்குயிலே என்கிற அர்த்தத்தில்தான். ஒருவேளை வாலி ‘பாட்டுப் பாடும் கருங்குயிலே’ என்ற அர்த்தத்தில் எழுதியிருந்தால், அவர்கள் ‘Gaaனக் கருங்குயிலே’ என்று பாடியிருப்பர் என்பது என் துணிபு.

***

என். சொக்கன் …

17 03 2013

106/365