தூக்கம் எங்கே?

ஊருசனம் தூங்கிருச்சு
ஊதகாத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏனோ புரியலயே

பொதுவாக இரவு இரண்டு விதமான மனிதர்களைத் தூங்க விடாது. ஒருவர் நோயாளி. இவர் உடல் உபாதையினால் சரியாகத் தூக்கமில்லாமல் தவிப்பார். இன்னொருவர் காதலில் விழுந்தவர். இவர் காதல் நினைவுகள் கொடுக்கும் உபாதையால் தூக்கமில்லாமல் தவிப்பார்.

ஆனால் மேலே சொன்ன பாடலைப் பாடியவள் நோயாளியல்ல. அவள் ஒரு காதலி. அவள் எண்ணமெல்லாம் காதலன். நினைக்க நினைக்க எண்ணங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. எண்ணங்கள் ஒவ்வொன்றும் இனிக்க இனிக்க நினைப்புகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் அவளுக்கு அது புரியவில்லை. தூக்கம் வரவில்லையே என்று பாடுகிறாள்.

பாடல் – ஊரு சனம் தூங்கிருச்சே
படம் – மெல்லத் திறந்தது கதவு
பாடல் வரிகள் – கங்கை அமரன்
பாடியவர்கள் – எஸ்.ஜானகி
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் – இசைஞானி இளையராஜா
இயக்கம் – ஆர்.சுந்தர்ராஜன்

எப்பேர்ப்பட்ட இனிமையான பாடல். எஸ்.ஜானகியின் குரலில் உணர்வுகள் பொங்கும் அருமையான பாடல்.

இந்தத் தூக்கம் தராத காதல் ஏக்கத்தை இன்னொரு பெரிய கவிஞரும் திரைப்படம் வராத காலத்திலேயே எழுதியிருக்கிறார். அது பல ஆண்டுகள் கழித்து திரைப்படத்திலும் வந்தது.

மோனத்திருக்குதடி இவ்வையகம் மூழ்கித் துயினிலே
நானொருவன் மட்டிலும் இங்கு பிரிவென்பதோர் நரகத்துழலுவதோ

இப்போது புரிந்திருக்குமே அந்தப் பாடல். ஆம். தீர்த்தக் கரையினிலே என்று தொடங்கும் பாரதியாரின் பாடல்தான். பின்னாளில் வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் மெல்லிசை மன்னர் இசையமைப்பில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி வெளிவந்தது. இந்தப் பாடலும் திரையிசையில் இனிமை நிறைந்த உணர்வு மிக்க பாடல்தான்.

இந்த உணர்வுகள் இன்று நேற்றா இருக்கின்றன? இல்லை. நூற்றாண்டுகளுக்கும் மேலாய்… ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாய்… காதல் என்ற உணர்ச்சி மனிதரைப் பிடித்த நாளில் இருந்து இருக்கிறது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்த சங்கத் தமிழில் மேலே பார்த்த இரண்டு பாடல்களின் வரிகளும் அப்படியே இருக்கின்றன. பயன்படுத்திய சொற்கள் மாறியிருக்கின்றன. ஆனால் கருத்து அதே கருத்துதான். காதல் உணர்வுகள் கொடுக்கும் தூக்கமின்மை.

நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கண் முனிவின்று
நனந்தலை யுலகமுந் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே
நூல் – குறுந்தொகை
எழுதியவர் – பதுமனார்
திணை – நெய்தல் திணை
கூற்று – (தோழிக்கு) தலைவியின் கூற்று

நள்ளென்றன்றே யாமம் சொல் அவிந்(து)
இனிது அடங்கினரே மாக்கண் முனிவு இன்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே

இன்னும் விளக்கமாகச் சொல்கிறேன். இரவோ நள்ளிரவு (நள்ளென்றன்றே). விலங்குகள் எல்லாம் ஒலியெழுப்பாமல் அடங்கி உறங்கின. இந்த மிகப்பெரிய உலகத்து மனிதர்கள் எந்த இடைஞ்சலும் இன்றி துஞ்சுகின்றார்கள். நான் மட்டும் துயிலின்றி தவிக்கிறேனே!

இப்போது தமிழில் கிடைத்ததில் பழைய இலக்கியங்கள் கடைச்சங்க இலக்கியங்கள். இவைகளுக்கு முன்னால் எழுதப்பட்டு காணமல் போன இலக்கியங்களிலும் காதலர்க்கள் தூக்கமில்லாமல் தவிப்பது உறுதியாக எழுதப்பட்டிருக்கும்.

தீர்த்தக்கரையினிலே…. தெற்கு மூலையில்… செண்பகத் தோட்டத்திலே….

ஊருசனம் தூங்கிருச்சே பாடலின் சுட்டி – http://youtu.be/GuIAzKphNY4
தீர்த்தக்கரையினிலே பாடலின் சுட்டி – http://youtu.be/V43cycEi3Gw

அன்புடன்,
ஜிரா

105/365