இவர்கள் சந்தித்தால்…

பல வருடங்களுக்கு முன் ஒரு வார இதழில்  ‘இவர்கள் சந்தித்தால் என்றொரு தொடர் வந்தது. வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்தவர்கள், ஒரே துறையில் போட்டியில் இருக்கும் பிரபலங்கள் மாறுபட்ட குணாதிசயம் கொண்ட இரு பிரபலங்கள் சந்தித்துக் கொண்டால் எப்படி இருக்கும் என்பது கற்பனை கலந்த நகைச்சுவையாக வந்த பகுதி.

இது இப்போதும் தொலைகாட்சியிலும் இணையதளங்களிலும் தொடரும் ஒரு கற்பனை. பெரியார்-பிரோமனந்தா, சந்தனக் கடத்தல் வீரப்பன் – ஒசாமா பின்லேடன், தியாகராஜ பாகவதர் – டி. ராஜேந்தர் உள்ளிட்ட பலர் நேரில் கலந்துரையாடுவது போல அமைக்கப்படும். சென்ற வருடம் வந்த The Avengers என்ற ஹாலிவுட் திரைப்படம்  Marvel Comics ல் வந்த வெவ்வேறு காமிக்ஸ் கதாபாத்திரங்களை ஒரே படத்தில் இணைத்து வசூலில் ‘சும்மா அதிருதில்ல’ என்று மிரட்டியது. மகாபாரதத்தில் அனுமன் பீமனை சந்தித்தது போல் ஒரு காட்சி உண்டு.

இது போல ஒரு திரைப்பாடல் உண்டு. இயக்குனர் அகத்தியன் எழுதி் தேவா  இசையில் SPB -சித்ரா -தேவா பாடிய ஒரு பாடல் படத்தின் பெயர் சொன்னாலே இந்த பாடலில் சந்திக்கும் இரண்டு கதாபாத்திரங்கள் யார் என்று புரிந்துவிடும் – படம் கோகுலத்தில் சீதை . தலைப்பே பாதி கதை சொல்கிறதே!

சீதை கோகுலத்தில் வந்து சேர்ந்தால் எப்படி இருக்கும்? கண்ணன் பற்றி இவள் என்ன நினைப்பாள்? கோகுலம் வந்த சீதையைப் பற்றி குழலூதும் கண்ணன் என்ன நினைக்கிறான்? கேளுங்கள்  http://www.youtube.com/watch?v=asOAL4mgqyE

கோகுலத்து கண்ணா கண்ணா சீதை இவள் தானா
மானுமில்லை ராமனில்லை  கோகுலத்தில் நானா
சோகமில்லை சொந்தம் யாரும் இல்லை

சீதைக்கு ஒரே Confusion . “இதென்ன இடம்? நாங்கள் வானவாசம் வந்த இடம் போல இல்லையே ?  ராமனையும் காணோம் மானையும் காணோம். ஏதோ மகளிர் கல்லூரி வாசல் போல் ஒரே பெண்கள் கூட்டம். ஒ இது கங்கைக்கரைத்தோட்டமா? அதான் ஒரே கன்னிப்பெண்கள் கூட்டமா? நடுவில் இருப்பவன் கண்ணனா ? இது கோகுலமா ? ஆடைகளை எடுத்து ஒளித்து -என்ன விளையாட்டு இது ” என்று அவள் நினைப்பதைச்  சொல்லும் வரிகள்

ஆசைக்கொரு ஆளானவன் ஆனந்தத்தின்  கூத்தானவன்

கோபியர்கள் நீராடிட கோலங்களை கண்டான்  அவன்

ஆடை அள்ளி கொண்டான் அவன் அழகை அள்ளி தின்றான் அவன்

ஆனாலும் பூஜைக்கு கண்ணன் வந்ததும் சீதை என்ன செய்கிறாளாம்?

கண்ணா உன்னை நாள் தோறுமே

கை கூப்பியே பாடுவேன்

சரி மாயக்கண்ணன் நிலை என்ன ? இதுவரை நடந்தது என்று ஒரு preamble சொல்கிறான். நீ காண்பது மாயை நான் சொல்வதைக் கேள் என்கிறான்

ஆசைக் கொரு ஆளாகினான் கீதை எனும் நூலாகினான்

யமுனை நதி நீராடினான் பாண்டவர்க்கு  போராடினான்

ஆடை அள்ளி கொண்டாடினான் திரௌபதிக்கு தந்தாடினான்

பெண்களுடன் கூத்தாடினான் பெண்ணை  கண்டு கைகூப்பினான்’

ஆனால் சீதையை கோகுலத்தில் பார்த்தவுடன் என்ன சொல்கிறான்? அவள் வருகையினால் வாழ்க்கையே பிருந்தாவனம் ஆகிறதாம். அதனால் அவளை வணங்கினான் என்று கவிஞர் சொல்கிறார்

கதை காட்சி என்று பொருத்தி ஒரு interesting கற்பனை. கதை எழுதியவரே பாடலும் எழுதியதால் கதையோடு தொடரும் சிந்தனை.

ஆனால் எனக்கு ஒரு வரி புரியவில்லை. சீதை கோகுலத்தில் நின்று பாடும்போது ஏன் ‘ராவணனின் நெஞ்சில் காமம் இல்லை’ என்று பாடுகிறாள்? புரிந்தவர்கள் சொல்லுங்கள்

மோகனகிருஷ்ணன்

104/365