ஆகுபெயர்

  • படம்: ராஜாதிராஜா
  • பாடல்: எங்கிட்ட மோதாதே
  • எழுதியவர்: பொன்னடியான்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: மனோ, கே. எஸ். சித்ரா
  • Link: http://www.youtube.com/watch?v=f7hoMEG9SXU

சுண்டல் பயறை ஊற வெச்சு, காலையிலே தின்றுவிட்டு,

தண்டால் எடு, குண்டால் எடு, பஸ்கி எடு, குஸ்தி போடு,

வேட்டி எடுத்து, வரிஞ்சு கட்டி, மீசையத்தான் முறுக்கி முறுக்கி,

சிலம்பை எடுத்துச் சுழற்று சுழற்று, ஆம்பளையா வளரு வளரு!

நேற்று வீட்டில் பச்சைப் பட்டாணி சுண்டல் செய்திருந்தார்கள். பொறியலுக்கும் சுண்டலுக்கும் என்ன வித்தியாசம் என்று யோசித்தபடி சாப்பிட்டேன்.

பத்தாங்கிளாஸ் இலக்கணப் புத்தகத்தில் ‘ஆகுபெயர்’ என்று ஒரு பாடம் இருந்தது. அதாவது, ஒன்றின் பெயர் இன்னொன்றுக்கு ஆகிவருவது.

இதற்குப் பிரபலமான உதாரணம், ‘ஊர் சிரித்தது’. உண்மையில் சிரித்தது ஊர் அல்ல, அதில் உள்ள மக்கள், ஆனால் அது ஊரே சிரித்ததாகச் சொல்லப்படும்.

இதேபோல், ‘ரோஜா பயிரிட்டிருக்கிறேன்’ என்று ஒருவர் சொன்னால், அவர் மண்ணில் ரோஜாவை விதைத்துள்ளார் என்று அர்த்தம் இல்லை, அவர் செடியைப் பயிரிட்டுள்ளார், அதில் பூக்கும் ரோஜாப்பூ அந்தச் செடிக்கே பெயராக ஆகிவருகிறது.

ஆகுபெயர்களில் பல வகைகள் உண்டு. சினையாகுபெயர், இடவாகுபெயர், பண்பாகுபெயர் என்று அது ஒரு பெரிய லிஸ்ட்.

அந்தப் பட்டியலில் ஒரு வகை, தொழிலாகுபெயர். ஒரு தொழில் அதனால் உருவாகும் பொருளுக்குப் பெயராக மாறுவது.

உதாரணமாக, ‘சுண்டல்’ என்ற வார்த்தையையே எடுத்துக்கொள்வோம், அது பெயர்ச்சொல் (Noun) அல்ல, வினைச்சொல் (Verb), இதன் அர்த்தம், ஒரு பொருளை நீர் வற்றும்படி சுருக்குவது, ‘பாலைச் சுண்டக் காய்ச்சினான்’ என்று சொல்கிறோம் அல்லவா, அதுதான் இது.

ஆக, பச்சைப் பட்டாணியைச் சூடாக்கி நீரை வற்றவைத்துச் சுண்டச் செய்வது என்ற தொழில், அதனால் கிடைக்கும் உணவுப்பொருளுக்கே பெயராகிவிட்டது. ’சுண்டல்’ என்பது தொழிலாகுபெயர்.

சுண்டல்மட்டுமில்லை, வறுவல், பொரியல், அவியல், மசியல், துவையல், பொங்கல் எல்லாமே Verbகள்தாம். அதனால் கிடைக்கும் உணவுப்பொருள்களுக்கும் அதே பெயரைச் சூட்டிவிட்டோம்!

அடுத்தமுறை யாராவது ‘கடலைச் சுண்டல் செய்தேன்’ என்று சொன்னால், ‘கடலையே வற்றவைத்தாயா? நீ என்ன பெரிய அகத்தியரா?’ என்று கேட்டுவிடுங்கள் :>)

***

என். சொக்கன் …

14 03 2013

103/365