வழவழா, கொழகொழா

ஏலே கீச்சான் வந்தாச்சு
நம்ம சூச பொண்ணும் வந்தாச்சு
ஏஏஏ ஈசா வரம் பொழிஞ்சாச்சு

ரேடியோவில் இந்தப் பாடல் ஓடிக் கொண்டிருந்தது. சென்னையின் விளக்கெண்ணெய்த்தனமான நெருக்கடியில் காரோட்டும் போது பாடல்கள்தான் துணை. கடல் படத்திற்காக மதன் கார்க்கி எழுதிய பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துப் பாடிக் கொண்டிருந்தார்.

ஒனக்காக வலையொன்னு வலையொன்னு விரிச்சிருக்கேன்
நான் தவமிருக்கேன்
நீ விழுவேன்னு விளக்கெண்ண ஊத்திக்கிட்டு முழிச்சிருக்கேன்
நான் அரக்கிறுக்கேன்

அட! பாட்டிலும் விளக்கெண்ணெய். சென்னையின் வாகன நெருக்கடியை விளக்கெண்ணெய் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே பாட்டிலும் விளக்கெண்ணெய்.

அந்தக் கடற்கரைக் காதலன் காதலியின் வருகைக்காக கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு காத்திருக்கின்றானாம்.

கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றினால் பார்வை தெளிவாகும் என்றொரு நம்பிக்கை இருக்கிறது. இது பழமொழிகளிலும் பல பாடல்களிலும் வந்துள்ளது.

சரி. விளக்கெண்ணெய் என்றால் என்ன? இது எத்தனை பேருக்குத் தெரியும்? விளக்கெண்ணெய் குடித்தால் வயிறு சுத்தமாகும் என்பதையும் விளக்குக்கு ஊற்றும் எண்ணெய் என்பதையும் தவிர மேலதிகத் தகவல்கள் பெரும்பாலானோர்க்குத் தெரிந்திருக்காது.

சிறுவயதில் பட்டிக்காட்டுத் தொடர்பு நிறைய இருந்ததால் விளக்கெண்ணெய் மிகமிகப் பழக்கமான ஒன்றாக எனக்கு இருந்தது. விளக்கெண்ணெய் பற்றி ஒரு குறுந்தகவலைச் சொல்லி விட்டு விளக்கெண்ணெயில் மூழ்குவோம்.

வண்டி மசி என்று சொல்வார்கள். அதாவது மாட்டு வண்டியில் சக்கரத்தை மாட்டி கடையாணி இட்டிருப்பார்கள் அல்லவா, அங்கு உயவுப் பொருளாகப் பயன்படுவதுதான் வண்டி மசி. இன்றைக்கு Grease எப்படிப் பயன்படுத்தப்படுகிறதோ அது போலப் பயன்பட்டதுதான் வண்டி மசி.

வைக்கோலைத் தீயிட்டுக் கொளுத்திய சாம்பலில் விளக்கெண்ணெய்யைக் கலந்தால் கிடைப்பதுதான் வண்டி மசி. இது மிகச்சிறந்த இயற்கையான உயவுப்பொருள். எந்த விதத்திலும் சுற்றுப்புறச் சூழலுக்குத் தீங்கிழைக்காத உயவுப் பொருள்.

சரி. விளக்கெண்ணெய்க்கு வருவோம். ஆமணக்கு விதைகளிலிருந்து எடுக்கப்படுவதுதான் விளக்கெண்ணெய். நல்லெண்ணெய் கடலெண்ணெய் போல ஆட்டி எடுக்கப்படுவதல்ல விளக்கெண்ணெய். அதைச் செய்யும் முறையே வேறு.

என்னுடைய சிறுவயதில் எங்கள் தோட்டங்களில் ஆமணக்குச் செடிகள் நிறைய இருந்தன. அவைகளில் முட்களைக் கொண்ட கொத்துக் கொத்தான காய்கள் நிறைய தொங்கும். பச்சையாக இருக்கும் போது காய்கள் தொடுவதற்கு மெத்தென்று இருக்கும். ஆனால் அவை காய்ந்ததும் முள்ளாய்க் குத்தும்.

என்னுடைய அத்தைப் பாட்டியிடம் ஒருமுறை ஆமணக்கு எண்ணெய் எடுப்பதைப் பார்க்க வேண்டும் என்று சொன்னேன். உடனே அவர் அதற்கு ஏற்பாடு செய்து விட்டார்.

வீட்டின் முற்றத்தில் (காரைவீடு என்று எங்கள் பக்கம் சொல்வோம்) ஆமணக்கு நெற்றுகள் கொட்டப்பட்டன. ஆட்களை வைத்து நெற்றுகளிலிருந்து ஆமணக்கு முத்துகள் எடுக்கப்பட்டன. இந்த முத்துகள் சிறியதாக முட்டை வடிவத்தில் பழுப்பு நிறத்தில் இருக்கும். அதன் மேல் கருப்பு நிறத்தில் கோடுகளும் புள்ளிகளும் நிறைய இருக்கும்.

அதற்குப் பிறகு ஒரு அம்மியில் ஆமணக்கு முத்துகள் வைத்து நசுக்கப்பட்டன. இப்படி நசுக்கப்பட்ட முத்துகளைச் சேகரித்து ஒரு பெரிய பானையில் நீரோடு சேர்த்து கொதிக்க வைத்தார்கள். அது கொதிக்கக் கொதிக்க ஆமணக்கு எண்ணெய் மேலாக மிதந்து வந்தது. அதை அப்படியே தெளிவாக அகப்பையில் எடுத்து இன்னொரு பானையில் ஊற்றி வைத்துக் கொண்டார்கள்.

இப்படிக் காய்ச்சி எடுக்கப்படும் ஆமணக்கு எண்ணெய்தான் விளக்கெண்ணெய் எனப்படுகிறது. இது அந்தக் காலத்தில் விளக்கெரிக்க மட்டுமல்லாமல் கண்மை தயாரிக்கவும் பயன்பட்டது.

வெறும் ஆமணக்கு முத்து நஞ்சு. ஆனால் அதை நசுக்கிக் காய்ச்சி எடுக்கப்படும் எண்ணெய் மருந்தாகிறது. எங்கேயாவது கையைக் காலை இடித்துக் கொண்டு வந்தால் ஆமணக்கு இலையை வதக்கி அதை அடிபட்ட இடத்தில் சூட்டோடு சூடாக வைத்து வெள்ளைத்துணி வைத்து கட்டி விடுவார்கள். வயலில் நடக்கும் போது எங்கேயாவது விரலை இடித்துக் கொண்டு வந்த எனக்கும் ஆமணக்கு இலை வதக்கிய கட்டு போடப்பட்டிருக்கிறது.

ஆமணக்கைப் பற்றியும் விளக்கெண்ணெயைப் பற்றியும் இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். இப்படித்தால் எதோ ஒரு பாடலைக் கேட்டு விட்டு அதிலுள்ள ஒரு சொல்லைப் பிடித்துக் கொண்டு மனம் எங்கெங்கோ சுற்றியலைந்து விட்டு வருகிறது.

அதற்குப் பிறகு ஆமணக்கைப் பார்க்க மனம் விரும்பியது. இணையத்தில் தேடி அதன் புகைப்படங்களைப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டேன். இப்போதைக்கு அவ்வளவுதான் முடியும். 🙂

ஆமணக்கே போற்றி போற்றி
விளக்கெண்ணெய்யே போற்றி போற்றி

ஆமணக்கு பற்றிய விக்கி சுட்டி – http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
ஏலே கிச்சான் பாடலின் ஒளிச்சுட்டி – http://youtu.be/f-tbXVrPJZ0

அன்புடன்,
ஜிரா

102/365