ஆயிரம் நிலவு

ஒருவர் நீண்ட காலம் வாழ்ந்ததைப் பெருமையுடன் ஆயிரம் நிலவு கண்டவர் என்று கூறி கொண்டாடும் வழக்கம் உண்டு. . அதென்ன ஆயிரம் நிலவு ?  சந்திரன் பூமியை ஒரு சுற்று சுற்றிவர ஆகும் காலம் சுமார் 27 நாட்களாகும் ஒரு வருடத்தில் 13 முறை  நிலவு பார்த்து 80  வயது ஆனதும் 1000 பிறைக்கு மேல்  கண்டிருப்பார்கள். கீதையில் கிருஷ்ண பரமாத்மா ‘சகஸ்ரஜீவிகள்’ என்று சொல்லி தான் அவர்களை வணங்குவதாகக்  கூறுகிறார்.

இதை சொல்லும் திரைப்பாடல் ஒன்று. உறவாடும் நெஞ்சம் படத்தில் பஞ்சு அருணாசலம் எழுதி இளையராஜா இசையில் SPB – ஜானகி பாடிய அருமையான பாடல் ஒரு நாள் உன்னோடு ஒருநாள்.

http://www.inbaminge.com/t/u/Uraavaadum%20Nenjam/Oru%20Naal%20Unnodu.eng.html

பாலூட்டி வளர்த்த கிளி என்ற படம் முதலில் வெளியானாலும் இதுதான் ராஜா -SPB கூட்டணியில் முதலில் பதிவான பாடல். Greenidge – Haynes போல இந்த இருவரும் அதன்பின்னர் பலமான partnership ல் பல அருமையான பாடல்கள் தந்தனர். இதற்கு இந்த பாடலே ஆரம்பம். அதனால்தானோ என்னோவோ SPB சரணம் பாடுவதற்கு முன் வரும் இசை அருமையாய் ஒரு ரெட் கார்ப்பெட் போடும். சரி அதை @rexarul விவரித்தால் இன்னும் அழகாக இருக்கும். நாம் பாடல் வரிகளை கவனிப்போம்

காதலனும் காதலியும்  பாடும் பாடல்

ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்

என்று பெண் சொல்ல ஆண் தன்  சந்தோஷத்தை பாடுகிறான்

மஞ்சளின் மகராணி.. குங்குமப் பெருந்தேவி
உன்னால் பொன் நாள் கண்டேனே
கண்ணில் சொர்க்கத்தின் நிழலைக் கண்டேனே
உன் முகம் பார்த்து மலர்ந்தேனே
உன் நிழல் தேடி வளர்ந்தேனே

தொடர்ந்து பெண் வள்ளுவன் சொன்ன குணம் நாடி குற்றமும் நாடி பாணியில்

உன்னிடம் நான் கண்ட பெருமைகள் பல உண்டு
கோபம்.. வேகம்.. மாறாதோ
மாறும் நன்னாள் எந்நாள்.. காண்பேனோ

என்று சொல்ல அவன் அவளிடம் சரணடையும் வரிகள்

புன்னகையாலே எனை மாற்று
பொன்னழகே நீ பூங்காற்று

சரி. எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்தபின் தொடர்ந்து விஷ் லிஸ்ட் பேசும் பாடல் வரிகள்

மங்கல நாண் வேண்டும்.. மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் தீபம் நானாக

என்று பெண் கேட்கிறாள். அப்போது தான் கவிஞர் ஆண் சொல்லுவதாக இந்த ஆயிரம் நிலவு பற்றி சொல்லுகிறார்

காவியம் போலே வாழ்ந்திருப்போம்
ஆயிரம் நிலவைப் பார்த்திருப்போம்

ஆணும் பெண்ணும் தெளிவாக பேசி முடிவெடுத்து காவியம் போல நீண்ட நாள் வாழலாம் என்று சொல்லும் அழகான வரிகள்.

மோகனகிருஷ்ணன்

101/365