அழகுக் கோலம்

  • படம்: புருஷ லட்சணம்
  • பாடல்: கோல விழியம்மா
  • எழுதியவர்: காளிதாசன்
  • இசை: தேவா
  • பாடியவர்: கே. எஸ். சித்ரா
  • Link: http://www.youtube.com/watch?v=4aMwDU2lQ0M

கோல விழியம்மா, ராஜ காளியம்மா,

பாளையத் தாயம்மா, பங்காரு மாயம்மா,

முத்து மாரியம்மா, பத்ர காளியம்மா,

முண்ட கன்னியம்மா, எங்க சென்னியம்மா!

பக்தி ரசம் நிறைந்த சினிமாப் பாடல் இது. நூற்றியெட்டு அம்மன் பெயர்களை மிக அழகாக மெட்டில் பொருத்தி (அல்லது, நூற்றியெட்டு அம்மன் பெயர்களைத் தொகுத்து மெட்டமைத்து) அவர்கள் எல்லாரையும் அழைத்துக் கதாநாயகி இறைஞ்சுவதாகக் காட்சி அமைப்பு.

இதில் என்னை மிகவும் ஈர்த்த விஷயம், அந்த அம்மன் பெயர்கள், பெரும்பாலானவை மிக அழகான தமிழ்ப் பெயர்கள்.

நான் பார்த்தவரை தமிழ்நாட்டில் பல ஆலயங்களில் இறைவன், இறைவிக்கு அருமையான தமிழ்ப் பெயர்கள் உண்டு. கூடவே அவற்றை வடமொழிப்படுத்தி ஒரு பெயரும் வைத்திருப்பார்கள், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இந்த வடமொழிப்பெயர் பிரபலமாகிவிடும், அந்தச் சாமிக்கு ஒரு தமிழ்ப் பெயர் இருப்பதையே மக்கள் மறந்துவிடுவார்கள்.

வடமொழிப் பெயர் / சொற்கள் பிரபலமாவதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால் இதன்மூலம் நாம் இழப்பது, அற்புதமான தமிழ்ச் சொற்களை.

உதாரணமாக, இந்தப் பாடலின் முதல் அம்மன் பெயரை எடுத்துக்கொள்ளுங்கள், ’கோல விழி அம்மன்’.

நமக்குத் தெரிந்து ‘கோலம்’ என்றால் வீட்டு வாசலில் போடுவது. ’அரிசி மாவுக் கோலத்தைப் போன்ற விழிகளைக் கொண்ட அம்மன்’ என்று ஓர் இறைவிக்குப் பெயர் வைப்பார்களா? எங்கேயோ இடிக்கிறது!

அகராதியைப் பார்த்தால் தெரியும், ‘கோலம்’ என்ற சொல்லுக்குத் தமிழில் ‘அழகு’ / ‘அலங்கரிப்பு’ / ‘தோற்றம்’ போன்ற பொருள்களும் உண்டு.

உதாரணமாக,

  • திருப்பாவையில் ஆண்டாள் எழுதியது: ‘கோல விளக்கே, கொடியே விதானமே!’
  • சீதை கல்யாணத்தின்போது கம்பன் எழுதியது: ‘தன்னையே அனையது ஓர் கோலம் தாங்கினான்.’
  • மாலை நேரத்து வானத்தைப் பாரதிதாசன் எழுதியது: ‘குன்றின்மீது நின்று கண்டேன், கோலம், என்ன கோலமே!’

’கோலம்’ என்கிற வார்த்தையை இதே பொருளில் கோயில்களில் நிறையப் பார்க்கலாம், இறைவனின் நின்ற திருக்கோலம், இருந்த திருக்கோலம், கிடந்த திருக்கோலம் என்பார்கள்.

சினிமாப் பாடலாசிரியர்களுக்கு ரொம்பப் பிடித்த வார்த்தை இது, ‘ஒரு கோலக்கிளி சோடி தன்னைத் தேடுது’ என்றால், அழகான கிளி தனக்கு ஓர் இணையைத் தேடுகிறது என்று அர்த்தம்.

எல்லாம் சரி, நம்முடைய இன்றைய பேச்சுவழக்கில் ‘கோலம்’க்கு இந்தப் பொருள் உண்டா?

நிச்சயம் உண்டு. குழந்தை முகத்தில் எதையாவது பூசிக்கொண்டு வந்து நின்றால், ‘என்ன கோலம் இது?’ என்று கேட்கிறோம். யாராவது அரைகுறையாக வேலை செய்தால், ‘அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்காதே’ என்கிறோம், ’மாப்பிள்ளையும் பெண்ணும் திருமணக் கோலத்தில் வந்து நின்றார்கள்’ என்கிறோம். ‘ஊர்முழுவதும் விழாக்கோலம் பூண்டது’ என்கிறோம்.

நல்லவேளையாக, அத்தனை சுலபத்தில் நாம் ஒரு சொல்லை / பொருளை இழப்பதில்லை!

***

என். சொக்கன் …

11 03 2013

100/365