நூற்றியெட்டில் கொஞ்சம்

முன்பொரு கட்டுரையில் கண்ணதாசன் எழுதிய அறுபடைவீடுகளைப் பற்றியும் மற்றொரு பதிவில் தமிழகத்தில் இருக்கும் பிரபல முருகன் ஆலயங்களைப் பற்றியும் பார்த்தோம்.

தமிழ்த் திரையிசையில் பக்திப் பாடல்களில் மற்ற கவிஞர்களை விட கண்ணதாசனின் பங்களிப்பே நிறைய உள்ளது. இதற்குக் காரணம் ஏ.பி.நாகராஜன், கே.சங்கர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், சாண்டோ சின்னப்பாத் தேவர் போன்றவர்கள் கவியரசரை மிகச் சிறப்பாக பக்திப் படங்களில் பயன்படுத்திக் கொண்டதுதான்.

முருகன் கோயில்களைப் பற்றி எழுதிய கண்ணதாசன் வைஷ்ணவஸ்தலங்களைப் பற்றி எழுதாமல் இருப்பாரா? எழுதியிருக்கிறார். இறையருட் கலைச்செல்வர் கே.சங்கர் இயக்கிய சுப்ரபாதம் திரைப்படத்தில் ஒரு பாடலில் பிரபலமான தென்னாட்டின் வைஷ்ணவஸ்தலங்களைப் பற்றி எழுதியுள்ளார். நூற்றியெட்டு திவ்ய ஷேத்திரங்களின் பெயர்களும் பாடலில் வராவிட்டாலும் பிரபல ஸ்தலங்களைப் பாட்டில் வைத்திருக்கிறார் கண்ணதாசன்.

அனந்தசயனனுக்கே எப்போதும் அடிமை கொண்ட ஒரு குடும்பம். அந்தச் சயனனுக்கு ஒரு கோயிலைக் கட்ட வேண்டுமென்று குடும்பத்தலைவனுக்கு ஒரு ஆசை. ஆசையை வைத்துக் கொண்டு பூசையைச் செய்யலாம். செங்கலைச் செய்ய முடியுமா? அப்படிச் செய்த செங்கற்களை அடுக்கி சுண்ணாம்பையும் பூசமுடியுமா?

அதற்குள் பல சோதனைகள். அவனுடைய தம்பி சிறை செல்கிறான். தம்பி மனைவி சுயநினைவிழக்கிறாள். என்னதான் செய்வான் அந்த நாராயணதாசன்?! பாடுகிறான். வைகுந்தன் குடியிருக்கும் கோயில்களுக்கெல்லாம் ஓடுகிறான். துன்பங்களுக்கெல்லாம் விடை தேடுகிறான். அந்தச் சூழலில் வரும் பாடலைத்தான் கண்ணதாசன் எழுத மெல்லிசை மன்னர் இசையமைக்க சீர்காழி கோவிந்தராஜனும் வாணி ஜெயராமும் பாடியிருக்கிறார்கள்.

இதே படத்தில் இன்னொரு பாடலில் வடக்கில் உள்ள சில விஷ்ணுஸ்தலங்களையும் அவைகள் தொடர்பான கதைகளையும் பாட்டாகச் சொல்லியிருக்கிறார் கவியரசர். அதை இன்னொரு கட்டுரையில் பார்ப்போம். இப்போது இந்தப் பாடலில் வரிகளுக்கு வருவோம்.

திருக்கோயில் கட்ட எண்ணி
பொறுப்போடு வந்த என்னை
வெறுப்போடு பார்த்தாயே பெருமாளே
பலர் சிரித்தாலும் விடமாட்டேன் திருமாலே

காஞ்சி நகர் வரதராஜா
உன் கருணை பெருமை என்ன லேசா
வாஞ்சையுடன் எனக்கு அருள
காஞ்சி வரதா நீ விரைந்தோடி வருக

திருப்பணி செய்வதற்கு உடந்தை
நீ திருக்கோயில் கொண்டிருக்கும் குடந்தை
தினம்தோறும் சேவை செய்ய வரவா
ரங்க ஸ்ரீ வில்லிபுத்தூரின் தலைவா

பூலோக வைகுந்தவாசா
புகழ் ஓதும் ஸ்ரீ ரங்கநாதா
ஸ்ரீ ரங்கநாதா ஸ்ரீ ரங்கநாதா
திருவரங்கத்து ரங்கநாதா
என் சேவைக்குத் துணைபுரிய வா வா

அனந்த பத்மநாபா
ஆனந்த விஷ்வரூபா
திருவனந்தை பத்மநாபா
உனக்குச் சிங்காரக் கோயில் கட்ட வா வா

குருவாயூர் தன்னில் ஒரு குழந்தை
நடக்கக் கொஞ்சுதம்மா இரண்டு சலங்கை
வர வேண்டும் ஸ்ரீ கிருஷ்ண பாலா
நிறைந்த வரத்தோடு ஆனந்த லாலா

பழமை நிறைந்த திருப்பதியே
எங்கள் அழகர்மலைக் கருணைநிதியே
சோளிங்கர் ஆள்கின்ற முகமே
பாவம் தொலைவதற்கு நீராடும் குளமே

தொண்டு செய்யும் அடியார்கள் தமக்கு உன் சோதனை போதுமடா
சோதனை தீர்த்து உன் பாதமலர்களில் எங்களைச் சேர்த்திடடா
கொண்டது கொள்கை என்றது ஈன்றவர் கூறுதல் கேளுமடா
கோயில் திறந்திடவில்லை எனில் வைகுண்டத்தில் சேர்த்திடடா
வைகுண்டத்தில் சேர்த்திடடா வைகுண்டத்தில் சேர்த்திடடா

நரசிம்மா நரசிம்மா நரசிம்மா
வைகுந்தா வைகுந்தா வைகுந்தா
ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா

மைவண்ண மேனி கொண்ட ஸ்ரீ நாதா
திருமகள் தன்னை மார்பில் வைத்த மலர் மார்பா
மெய்க்கூந்தல் வேதவல்லி தலைமகனே
கனல் நிறைந்திருக்கும் அலமேலு வளர்ந்தவனே

எத்தனையோ உலகில் வடிவெடுத்தாய்
அன்று எல்லா வடிவினிலும் பெண்ணெடுத்தாய்
பித்துப் பிடித்து பெண்ணை அறியாயோ
இன்று சித்தம் தெளிந்தது என்று அருள்வாயோ

பாண்டுரங்கா பண்டரிநாதா பன்னக சயனா மணிவண்ணா
பத்மாநாபனே வீரராகவா ஆதிகேசவா ஸ்ரீகிருஷ்ணா
ரிஷிகேசா ஸ்ரீரங்கா திருமாலே நரசிம்மா
ரிஷிகேசா ஸ்ரீரங்கா திருமாலே நரசிம்மா

இந்தப் பாடலில் காஞ்சிபுரம், குடந்தை, திருவில்லிபுத்தூர், திருவனந்தபுரம், திருவரங்கம், திருப்பதி, அழகர்மலை, சோளிங்கர்(திருக்கடிகை) ஆகிய திவ்யதேசங்களும் குருவாயூர் என்னும் அபிமானஸ்தலமும் பாடப்பட்டுள்ளன.

இவ்வளவு சொல்லியாகி விட்டது. அதென்ன நூற்றியெட்டு திவ்யஸ்தலங்கள் என்ற தகவலையும் பார்த்து விடுவோம். பொதுவாக ஒரு கோயில் ஏழு புண்ணியங்களைக் கொண்டிருக்க வேண்டும். ஷேத்ரம் வநம் நதி ஸிந்து புரம் புஷ்கரிணி ததா விமானம் ஸப்த புண்யஞ்ச யத்ர தேஸ என்பவை அந்த ஸ்பத(ஏழு)புண்ணியங்கள்

இப்படி ஏழு புண்ணியங்களைக் கொண்ட ஒரு கோயிலில் அஷ்டமாக.. அதாவது எட்டாவதாக ஒரு புண்ணியமும் சேர்ந்தால் அந்தக் கோயில் திவ்யதேசன் எனப்படும்.

அந்த எட்டாவதான புண்ணியம் எது? அது ஆழ்வார்களின் மங்களாசாசனம். கல்லால் ஆயிரம் கோயில்கள் கட்டலாம். ஆனால் அன்புள்ள ஒருவன் சொல்லால் பாடலைக் கட்டி இறைவனைத் தொழும் போதுதான் அந்த இடம் ஏற்றம் பெறும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

இந்த நூற்றியெட்டு திவ்யதேசங்களில் இரண்டு பாற்கடலும் பரமபதமும். அவை பூலோகத்தில் இல்லை. பூலோகத்தில் இருப்பவை நூற்றியாறுதான். இந்த நூற்றியாறு திவ்யதேசங்களுக்கும் அன்புள்ள நெஞ்சத்தோடும் அறமுடைய சிந்தையோடும் சென்றோரைப் பத்மநாப ஸ்ரீதரனே மற்ற இரண்டு திவ்யதேசங்களுக்கும் அழைத்துச் செல்வான் என்பது நம்பிக்கை.

இந்த நூற்றியாறு திவ்யதேசங்களில் பன்னிரண்டு ஸ்தலங்கள் வடநாட்டிலும் மிச்சமுள்ள தொன்னூற்றாறு ஸ்தலங்கள் தென்னாட்டிலும் அமைந்துள்ளன. வடக்கே உள்ள பன்னிரண்டிலும் ஒன்று நேபாளத்தில் அமைந்துள்ளது.

பொதுவாக தமிழ்த்திரைப்படங்களில் வைஷ்ணவ திவ்யதேசங்களைப் பற்றி வரும் பாடல்கள் மிக அரிது. மிகமிக அரிது. அந்தச் சூழ்நிலையில் இப்படி இத்தனை திவ்யதேசங்களை தன்னுள் கொண்டு வந்த இந்தப் பாடலும் மிக அரியது. மற்றுமொருமுறை கண்ணதாசனுக்கு நன்றி.

108 திவ்யதேசங்களின் பட்டியல் – http://ta.wikipedia.org/wiki/108_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
பாடலின் சுட்டி – http://youtu.be/16j5oViE9u0

ஷாந்தாகாரம் புஜக சயனம் பத்மநாபம் சுரேஷம்
விஷ்வாதாரம் ககன சதுர்ஷம் மேகவர்ணம் சுபாங்கம்
லஷ்மிகாந்தம் கமல நயனம் யோகிபிர்த்யான கம்யம்
வந்தே விஷ்ணும் பவ பய ஹரம் சர்வலோக ஏகநாதம்

நாராயணா! நாராயணா! நாராயணா!

அன்புடன்,
ஜிரா