என் அரிய கண்மணியே!

திரைப்பாடல் எழுதும் கவிஞர்களில் பெரும்பான்மை ஆண்கள். ஆண்டாள், ஔவையார் என்று ஆரம்பித்து கணக்கெடுத்தாலும் ரோஷனாரா பேகம், தாமரை, தேன்மொழி, ரோகிணி என்று பாடல் எழுதும் பெண் கவிகள் மிகச்சிலரே .விரல் விட்டு எண்ணிவிடலாம். அதனால் பாடல்கள் பொதுவாக ஆண் பார்வையிலே இருக்கிறதா? பெண்ணை அலங்காரம் செய்து வர்ணித்து புகழ்ந்து என்று பாடல்கள் வருவது இதனால்தானா?

அவள் ஆடையும் கொலுசும் இதழும் சிரிப்பும் சிணுங்கலும் மட்டுமே பாட்டில் வந்ததா? அவளை தெய்வமாக்கி வேப்பிலையும் சூலமும் தீச்சட்டியும் கையில் கொடுத்து வழிபட்டதா? இந்த இரண்டு புள்ளிகளுக்கு இடையில் பெண்ணைப்பற்றி அவள் பார்வையில் அவள் நினைப்பை  சொன்ன பாடல்கள் உண்டா? இன்று உலக மகளிர் தினம். இதற்கு விடை தேடலாமா?

நிறைய பாடல்கள் இருந்தாலும் எனக்கென்னவோ இந்த ஒரு பாடல் பெண்ணின் பெருமையை அழகாகச் சொல்வது போல் இருக்கிறது சித்தி படத்தில் சுசீலா குரலில் காலமிது காலமிது என்ற  கண்ணதாசன் பாடல். MSV இசையில்.  https://www.youtube.com/watch?v=Kc1VUudalsA

http://www.inbaminge.com/t/c/Chithi/Kaalamithu%20Kalamithu.eng.html

தாலாட்டுப் பாடல்களில் பொதுவாக  குழந்தையின் அருமை, அதன் விளையாட்டுப்பொருட்கள், மாமன் பெருமை, குலப் பெருமை போன்றவை கூறப்படுகின்றன. ஆனால் கண்ணதாசன் பெண்ணின் வெவ்வேறு நிலைப்பற்றி சொல்லும் ஒரு பாடலை தாலாட்டாக அமைக்கிறார்.

பெண்ணாகப் பிறந்தவர்க்கு கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம் இறப்பில் ஒரு தூக்கம்
இப்போது விட்டு விட்டால்  எப்போதும் தூக்கம் இல்லை
என்னரிய கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு

பெண்களின் பருவக் காலங்களை ஏழு நிலைகளாக வகுத்ததை சாலை கடந்த குமரிகள் பதிவில் நண்பர் @nchokkan விளக்கியிருந்தார். ஆனால் இந்தப்பாடலில் கண்ணதாசன் பெண் வாழ்வின் நிலைகளை புதிதாக வகுக்கிறார். ஒரு பெண் தன் வாழ்வின் வெவ்வேறு பருவங்களில் என்னென்ன  காரணங்களால் தூக்கத்தை இழக்கிறாள் என்று அழகாக விளக்கும் பாடல்.

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே

முதல் நிலையாக குழந்தை. பேதை பருவத்திற்கு முந்தைய நிலை

நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும் தெள்ளுதமிழ்ப் பாடல்

பொம்மை வைத்து விளையாடிக்கொண்டிருந்த பெண் குழந்தைக்கு பிரசித்தி பெற்ற Playschool. அட்மிஷன். அதன்பின் அந்தப்பெண் குழந்தை நாள் முழுவதும்  பள்ளியில். அப்புறம் Twinkle Twinkle, Baba Blacksheep என்று அள்ளும்  ஆங்கிலத்தில் பாடி , crayons ஹோம் வொர்க் Assignment என்று தூக்கம் தொலைக்கும் என்கிறார்

அடுத்து பதின்ம வயது பருவம். பெதும்பை மங்கை மடந்தை என்ற பழைய நிர்ணயங்களின் கலவை

எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி
ஈரேழு மொழிகளுடன் போராடச் சொல்லுமடி தீராத தொல்லையடி

நாலு முதல் பதினாறு வயது வரை – படிக்கும் பருவம். இன்றைய மதிப்பெண்கள் துரத்தும் பாடத்திட்டமும் Facebook,  மொபைல் போன் , வீடியோ கேம்ஸ் என்ற மற்ற பல கவனச்சிதறல்களும் எப்படி தூங்கவிடும் ?

தொடர்ந்து பாடலை கேளுங்கள்

மூன்றாவது Stage  காதல் வயப்பட்ட பெண் தொலைக்கும் தூக்கம் சொல்லும் 4 வரி

மாறும் கன்னி மனம் மாறும் கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும்போது தூக்கம் என்பதேது
தான் நினைத்த காதலனை சேர வரும்போது
தந்தை அதை மறுத்து விட்டால் கண்ணுறக்கம் ஏது

அடுத்து நான்காவது நிலை  கல்யாண மாலை கொண்டாடும் பருவம்

மாலையிட்ட தலைவன் வந்து
சேலை தொடும்போது
மங்கையரின் தேன் நிலவில்
கண்ணுறக்கம் ஏது

அஞ்சாவது நிலை தாய்மை நிலை

ஐயிரண்டு திங்களிலும்
பிள்ளை பெறும்போதும்
அன்னை என்று வந்தபின்னும்
கண்ணுறக்கம் போகும்

முதுமை என்னும் ஆறாவது நிலை

கை நடுங்கிக் கண் மறைந்து காலம் வந்து சேரும்
காணாத தூக்கமெல்லாம் தானாகச் சேரும்

இப்போதே தூங்கி விடு நீ வளரும்போது உன்னை தூங்க விட மாட்டார்கள் என்று சொல்லி அந்த காரணங்களை அடுக்கி பெண்ணின் பெருமையெல்லாம் சொல்லி – ஒரு தாலாட்டில் இவ்வளவு சொல்லமுடியுமா?

கவிஞர் இன்று நம்முடன் இருந்து இந்த பாடலை எழுதியிருந்தால் இன்னொரு நிலையும்  சொல்லி இருப்பார். படித்து அதற்கேற்ற வேலையில் சேர்ந்து எல்லா துறைகளிலும் சாதனைகள் புரியும் பெண்கள் பற்றியும் சொல்லியிருப்பார் .

பெண்களுக்கு வாழ்த்துகள்

மோகனகிருஷ்ணன்

097/365