கனவுக்கு மேலாடை

திரைப்பாடல்களில் ‘CATALOGUE’ பாடல்கள் என்று ஒரு வகை உண்டு என்று எனக்கு அடிக்கடி தோன்றும். சில குறிப்பிட்ட அம்சங்களுடன் இருக்கும் இந்தப்பாடல்களை அடையாளம் காண்பது சுலபம் . ஒரு வர்ணனை ஒரு பொருள், ஒரு தீம் , ஒரு வேண்டுகோள் என்று எதையாவது எடுத்துக்கொண்டு உள்ளதையெல்லாம் லிஸ்ட் போல சொல்லும் பாடல்கள். வரிகள் வெறும் வார்த்தை விளையாட்டாக இல்லாமல் கவிதை நயத்தோடு இருக்கும். ஒரு வார்த்தை பாடல் முழுவதும் பலமுறை வரும்.

சுரதா – உவமை கவிஞர் என்று பெயர் பெற்றவர். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். பின்னர் அதையும் சுருக்கி சுரதா என்று அறியப்பட்டவர்

இவர் நாணல் படத்தில் Catalogue பாடல் எழுதியிருக்கிறார். காதலனும் காதலியும் நடத்தும் ஒரு உரையாடல் போல, ஒரு கேள்வி பதில் session போல  வி குமாரின் இசையில் ஒரு அருமையான பாடல் .http://www.inbaminge.com/t/n/Naanal/Vinnukku%20Meladai.eng.html

விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
கண்ணுக்கு மேலாடை காக்கும் இரு இமைகள்
கனவுக்கு மேலாடை தொடர்ந்து வரும் தூக்கம்

எது மேலாடை என்று சொல்லும் லிஸ்ட். விண்ணுக்கு ஏன் பருவ மழை மேகம்? அது விண்ணை மறைத்து மேலாடையாய் விளங்குவதாலா? வீணைக்கு அழகு நாதம். அதை உள்ளே மறைத்து வைத்திருக்கும் நரம்புகளின் கூட்டம்தான் மேலாடையா? கவிஞருக்கு என்ன yardstick? எது அழகு சேர்க்கிறதோ அதுவா? கனவுக்கு சொல்லும் மேலாடை அருமை.

மண்ணுக்கு மேலாடை மரத்தின் நிழலா  வண்ண மயிலா என்று கேள்வி கேட்டு அவரே பதில் சொல்லி தொடர்ந்து மனதிற்கு மேலாடை வளர்ந்து வரும் நினைவு என்று சொல்லும் நயம். மனதிற்கு அழகு வளர்ந்து வரும் நினைவு – இதில் வளர்ந்து வரும் என்பது GROWING UP ஐ குறிப்பதா?

பின்னாளில் இது போல நிறைய பாடல்கள். வாலியின் மதுரையில் பறந்த மீன்கொடி என்ற பாடல் இந்த வகைதானே? வைரமுத்துவின் வருகைக்குப் பின் இந்த வகையில் நிறைய பாடல்கள்.

  • சின்ன சின்ன ஆசையெல்லாம் சொல்லும்  பாடல்,

  • கண்ணுக்கு மையழகு கவிதைக்குப் பொய்யழகு  வரிசைப்படுத்தும் பாடல்,

  • தஞ்சாவூரு மண்ணையெடுத்து என்று சிற்பம் செய்த  பாடல்.

  • சத்தம் இல்லாத தனிமை என்று ஆரம்பித்து சுமார் ஐம்பது விஷயங்கள் கேட்கும்  பாடல்

  • கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்று தொடங்கி அர்த்தங்கள் ஆயிரம் சொல்லும் பாடல்

ஆனால் சுரதாவே இதற்கு முன்னோடி. பாடல் வரிகளுக்கு உவமை என்னும் மேலாடை போட்டு அழகு பார்த்த கவிஞர்

மோகனகிருஷ்ணன்

095/365