விருந்தினர் பதிவு : கண்ணதாசனின் அந்தாதி

சமீபத்தில் ரிப்பீ(பா)ட்டு  பதிவில் @mokrish அவர்கள் பாடல்களில் ஒரே சொல் இருமுறை பயன்படுத்துவதை குறிப்பிட்டிருந்தார்.  அப் பதிவின் எதிரொலிதான் இப்பதிவுக்கு தூண்டுகோல்…

திரைப்படம்:   மூன்று முடிச்சு

பாடல் 1:      ஆடி வெள்ளி தேடி உன்னை..

பாடலாசிரியர்: கவியரசு கண்ணதாசன்

குரல்கள்:     ஜெயசந்திரன் / வாணி ஜெயராம்

இசை:        மெல்லிசை மன்னர் M.S. விஸ்வநாதன்

சுட்டி:         ( http://www.youtube.com/watch?v=BCE9JC_gil8 )

ஆடி வெள்ளி தேடி உன்னை

நான் அடைந்த நேரம்,

கோடி இன்பம் நாடி வந்தேன்

காவிரியின் ஓரம்

ஓரக் கண்ணில் ஊறவைத்த

தேன் கவிதைச் சாரம்

ஓசையின்றி பேசுவது

ஆசை எனும் வேதம்

வேதம் சொல்லி மேளம் இட்டு….

இந்த பாடலின் வரிகளை சற்று உற்று நோக்கிப் பாருங்கள். கவிஞரின் பாவனை புரியும்.

பாடலின் முதற் பகுதியின் ஈற்றுச் சொல்(ஓரம்) அடுத்த பந்தியின் முதற் சொல்லாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வகை செய்யுள்/ பாடல் அந்தாதி என அழைக்கப்படும்.

அந்தம் (கடைசி) + ஆதி (முதல்) = அந்தாதி

அந்தாதி இலக்கியம் தமிழ் சிற்றிலகியங்களிலும், செய்யுள்களிலும் பற்பல இடங்களில் காணப்படுகிறது. பக்திப்பாடல்களை மனப்பாடம் செய்யும் இலகுவான ஆயுதமாக கருதியே அந்தாதி இலக்கியம் உருவாகியது என்பது ஆராட்சியாளர்களின் கருத்து.

ஓர் செய்யுளின் ஈற்று வரிசையின் அடி, சீர் அசை அல்லது எழுத்து அடுத்த செய்யுளின் முதல் வரிசையில் அமைவது அந்தாதி வகைகளில் அடங்கும்.  இரு செய்யுள்களுக்கு இடையே அந்தாதி அமைந்தால், அந்தாதிச் செய்யுள் எனவும் இரு அடிகளுக்கு இடையே அமைந்தால்,அது அந்தாதித்தொடை எனவும் அழைக்கப்படும்.  காரைக்கால் அம்மையார் அந்தாதி செய்யுள்களில் முன்னோடி அதனால் அவரது படைப்புக்கள் ஆதி அந்தாதி என குறிப்பிடப்படுகிறது.

அந்தாதி எனும் சொல் “முரண்தொடை” (oxymoron) பாணிக்கும் ஓர் நல்ல உதாரணம். முரண்தொடை பற்றி நண்பர் என். சொக்கன் சிலவாரங்களுக்கு முன்பு ‘சுருக்கமான விளக்கம்” பதிவில் விபரித்திருந்தார்.

நிற்க. மறுபடியும் கவிஞருக்கு வருவோம்!

கவியரசு கண்ணதாசன் மூன்று முடிச்சு திரைப்படத்தில் இரு பாடல்களுக்கு அந்தாதி இலக்கியத்தை பிரயோகம் செய்துள்ளார்

பாடல் 2: வசந்த கால நதிகளிலே

சுட்டி:  http://www.youtube.com/watch?v=7Q55nVGOofo

வசந்த கால நதிகளிலே

வைரமணி நீரலைகள்

நீரலைகள் நீரினிலே

நெஞ்சிரண்டும் நினைவலைகள்

நினைவலைகள் தொடர்ந்து வந்தால்

நேரமெல்லாம் கனவலைகள்

கனவலைகள் தொடர்வதர்க்கு

காமனவன் மலர்க்கணைகள்…….

இப்பாடலின் சரணங்களில், அந்தாதி தொடை, அந்தாதிச் செய்யுள்  இரண்டையும் பயன்படுத்தி உள்ளார். அதுமட்டுமல்ல இப் பாடலை காதலனுக்கும் காதலிக்கும் இடையே நடைபெறும் ஓர் போட்டியாக (banter) அமைத்து சொற்களில் விளையாடியது மட்டுமல்லாமல் பாடலின் ஆரம்ப சொல்லையே அதே பாடலின் இறுதிச் சொல்லாகவும் (வசந்த கால) வைத்து முற்றுப்புள்ளியிட்டுள்ளார்.

மனவினைகள் யாருடனோ

மாயவனின் விதி வலைகள்

விதிவலையை முடிவு செய்யும்

வசந்த கால நீரலைகள்.

கவிஞருக்கு நிகர் கவியரசரே !  பாடலை நீங்களும் கேட்டு பாருங்களேன்!!

பிற்குறிப்பு: மேற் குறிப்பிட்ட பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் சங்கீத அந்தாதி பயன்படுத்தியுள்ளதாக தகவல். சங்கீதம் தெரிந்தவர்கள் விளக்கம் தருவீர்களா?

சபா-தம்பி

சபா-தம்பி பிறந்து வளர்ந்தது இலங்கையில். கால் நூற்றாண்டு காலத்துக்குமுன்னால் ஆஸ்திரேலியாவில் குடியேறியவர், தற்போது பெர்த் நகரத்தில் வசிக்கிறார். தமிழார்வம் ஏராளம், ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆங்கிலத்தில்மட்டுமே எழுதிவந்திருக்கிறார், கண்ணதாசனும் #4VariNoteம் தந்த ஊக்கத்தில் இந்த முதல் தமிழ்ப் பதிவை எழுதியுள்ளார். இந்த ஒன்று, பல நூறாக, பல ஆயிரமாகத் தொடர வாழ்த்துவோம்.

Twitter: @SabaThambi