ஆனந்தம், ஆரம்பம்!

ஆண்களுக்குக் காதல் வந்தால் என்னாகும்? அதைப் பாடலில் சொல்ல முடியுமா? நினைத்தேன் துடித்தேன் பலமுறை அழுதேன் தொழுதேன் மனத்தில் உழுதேன் என்றெல்லாம் எழுதுவது அக்காலம். இக்காலத்துக் கவிஞர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்று அறிந்து கொள்ள ஒரு எண்ணம் வந்தது.

நண்பர்களிடம் பிடித்த பாடல் எது என்று கேட்ட போது நிறைய பேர் கும்கியைக் கை காட்டினார்கள். அதிலும் குறிப்பாக அய்யய்யய்யோ ஆனந்தமே பாடலை. டி.இமான் இசையமைத்த அந்தப் பாடலை நானும் கேட்டிருக்கிறேன். பார்த்திருக்கிறேன்.

அதை வரிவரியாகத் திரும்பவும் கேட்டேன். கவிஞர் யுகபாரதியின் எளிய வரிகள் ஒரு எளிய பாத்திரத்தின் காதலுக்கு மிகப் பொருத்தமாகவே இருந்தது.

அய்யய்யயோ ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே – என்ற எளிய தொடக்கமே அழகு.

அவன் யானை வளர்ப்பவன். காட்டில் இருக்கிறான். அதனால் சிந்தனையில் ஐரோப்பாவும் அமெரிக்காவும் வரவில்லை. இயற்கையான காட்சிகளில் காதலைச் சொல்கிறான். அந்த வரிகளில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை.

நூறுகோடி வானவில் மாறிமாறிச் சேருதே
காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கிப் போகுதே

இந்த வரியிலும் இரண்டாவது வரி மிகச் சிறப்பானது. ஏன் தெரியுமா?

காதல் உள்ளத்துக்குள்ளே ஏதோ ஒரு இடம் தெரியாத மர்மப்புள்ளியில் தொடங்குவது போலத்தான் இருக்கும். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக படர்ந்து ஆளையே மூழ்கடித்து விடும். அப்படி நடப்பதை என்ன செய்தாலும் தடுக்கவே முடியாது.

சின்னச் சின்னத் தூறல்களாக எண்ண அலைகள் சிதறிச் சிதறிப் பெருவெள்ளமாகி அந்த வெள்ளத்தில் அவன் மூழ்கிப் போனான் என்று செல்கிறது கற்பனை. இது காதலில் உண்டாகும் உண்மை நிலையும் கூட.

இதை மிக எளிமையாக ”காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கிப் போகுதே” என்று சொன்ன கவிஞர் யுகபாரதியை பாரட்டத்தான் வேண்டும்.

இன்றைக்கு நேற்றா ஆண் இப்படியிருக்கிறான்? இல்லை. எப்போதுமே ஆண் இப்படித்தான். காதல் வந்தால் புலம்பலிலேயே மூழ்கிப் போய்விடுவான்.

இதே சூழ்நிலை சங்ககாலத்தான் ஒருவனுக்கும் வந்தது. ஆம். அவனுக்கும் வந்தது காதல். தன்னை மறந்தான். தந்தை தாய் மறந்தான். தன் கடமை மறந்தான். தன்னைச் சுற்றியுள்ளதையெல்லாம் மறந்தான். உலகை மறந்தான். காதலுக்குள் தன்னைத் தொலைத்தான்.

நண்பர்கள் கண்டித்தனர். ஆற்றும் கடமையே ஆண்மைக்கழகு என்று அறிவுறுத்தினர். அவன் கேட்டானா? இல்லையே. செந்தமிழில் சொல் செதுக்கி சொல்லியவர்க்குத் தன்னிலையை விளக்கமாகச் செப்பி விட்டான்.

கையில்லாதவன் ஒருவன். அவனுக்குச் சொந்தமாய் ஒரு உருண்டையளவு வெண்ணெய். அந்தக் கட்டி வெண்ணெய் சட்டியில் இல்லை. வெட்டுப்பாறையில் இருக்கிறது. பொழுதோ உச்சிப்பகல். முதலில் இளகுகிறது வெண்ணய். பிறகு நெய்யாய் உருவிப் பரவுகிறது. அதைக் காப்பாற்ற விரும்புகிறான் அந்தக் கையில்லாதவன். அது முடியுமா?

அந்த வெண்ணெய் நெய்யாகிப் பரவுவததைப் போல காதல் அவன் மீது பரவிக்கொண்டிருக்கிறது. கையில்லாதவன் அந்த வெண்ணையைக் கண்களாப் பார்த்தே காப்பாற்ற முடியுமா? முடியவே முடியாது. வெண்ணெய் உருகுவதைத் தடுக்கும் வழி(கை) இல்லாதவனாய் மூழ்கிப் போகிறான். காதலில் மூழ்கிப் போகிறான்.

இடிக்கும் கேளிர் நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று மன் தில்ல
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கு அரிதே
நூல் – குறுந்தொகை
திணை – குறிஞ்சி
கூற்று – தலைவன்
எழுதியவர் – வெள்ளிவீதியார்

வெள்ளிவீதியாரும் யுகபாரதியும் எடுத்துச் சொன்ன எடுத்துக்காட்டுகள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் பொருள் ஒன்றுதான்.

காதல் வந்தால் அதில் ஆண் மூழ்கித்தான் போவன். அப்படி மூழ்குவதுதான் சுகமானது. இன்பமானது. வாழ்க்கைக்கும் ரசமானது. அப்படி மூழ்காத ஆணுக்கு இன்பமில்லை. இல்லறமில்லை. வாழ்க்கையில் எதுவுமேயில்லை.

அய்யய்யோ பாடலின் ஒளிச்சுட்டி – http://youtu.be/xh8PByTv9kw

அன்புடன்,
ஜிரா

093/365