உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா

தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி ஒன்று – நாயகனும் நாயகியும் மோதலில் சந்தித்து பின் இரண்டாவது ரீலில் ஏதாவது ஒரு  தருணத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதலாகி கசிந்துருகி நலமாக வாழவேண்டும். மோதலுக்கு காரணம் வலுவாக இருக்கவேண்டிய அவசியமில்லை. எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த மோதல் கட்டத்தில் நாயகன் அவளை கேலி செய்து பாடிய பாடல்கள் (Eve Teasing ) என்று ஒரு வகை. இதில் சில பாடல்களை பார்ப்போம்  .

வழக்கம் போல் முதலில் கண்ணதாசன். என் கடமை படத்தில் ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க என்ற பாடல்.

ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க இன்று

ஏன் இந்த கோபம் கொஞ்சம் நில்லுங்க

தன்னந்தனியாக போகாதீங்க

உங்க தளதள உடம்புக்கு ஆகாதுங்க

வழி துணையாக வாரேனுங்க

இந்த வாலிப மனசை மிஸ் பண்ணாதீங்க

ஆசையுடன் பார்த்தால் மோசம் இல்லேங்க

ஆதரவை கேட்டால் பாவம் இல்லேங்க

நாட்டுக்கு நாடு வீட்டுக்கு வீடு

நடப்பது தானே ஓடாதீங்க 

கடைசி வரியில் ‘நடப்பதுதானே ஓடாதீங்க என்ற குறும்பு. அந்த நடப்பதுதானே முந்தைய வரியின் தொடர்ச்சியாக வேறு பொருளில்!

அந்த நாளின் இன்னொரு ஈவ் டீசிங் பாடல். இதுவும் கண்ணதாசன் அன்னை இல்லம் படத்தில் http://www.youtube.com/watch?v=zmAm5qmqq8M

நடையா இது நடையா

ஒரு நாடகம் அன்றோ நடக்குது

இடையா இது இடையா

அது இல்லாதது போல் இருக்குது

கடற்கரை காத்து அடிக்குது

காத்துல சேலை நடிக்குது

முன்னாலே வரச்சொல்லி அழைக்குது

முகத்திலே கடுகு வெடிக்குது


காதலிக்க நேரமில்லை படத்தில் ஒரு பிரபலமான பாடல் http://www.youtube.com/watch?v=TflAsec3GSc

உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா

சம்மதம் வருமா சந்தேகம்தானா

சேலாட்டம்  கண்ணும் நூலாட்டம் இடையும் திண்டாட்ட படலாமா

கண்ணாலே வார்த்தை சொன்னாலும் போதும் முன்னாலே வருவேனே

கல்யாண தேரில் உல்லாச ஊரில் ஊர்வலம் வருவேனே

இந்த மூன்று பாடல்களிலும் அவள் நடை இடை என்ற கிண்டல் இருந்தாலும் ஒரு Decent Proposal ஆக அமைந்த வரிகள் பெண்ணைப் பெற்றவர்கள்  தேடி வந்து சம்மதம் கொடுத்தால் ஆச்சரியமில்லை.

வாலி எழுதிய பாடல்களும் உண்டு. குழந்தையும் தெய்வமும் படத்தில் தமிழும் ஆங்கிலமும் கலந்து ஒரு பாடல். முந்தைய பாடல்களை போல் இல்லாமல் இது வெறும் கிண்டல் Mode ல் அமைந்த பாடல்

http://www.inbaminge.com/t/k/Kuzhandhaiyum%20Theivamum/Enna%20Vegam%20Nillu%20Baama.eng.html

என்ன வேகம் நில்லு பாமா என்ன கோபம் சொல்லலாமா

என்னை விட்டு கண்ணை விட்டு ஓடலாமா

உன்னைவிட்டு உள்ளம் என்ன வாடலாமா

Sunday picture , monday beach , tuesday circus ,wednesday dramaa

நாம போவோம் jolly-ஆக வாமா

நாணம் என்பதென்ன நீயும் பார்த்ததில்லை

உன்னைப் பார்த்த பின்னே நானும் பார்த்ததில்லை

கடவுள் என்ன செய்வான் பெண்ணை படைத்து நின்றான்

பெண்ணைப் படைத்த பின்னே கண்ணை மூடிக் கொண்டான்

உன்னை விட்டு உள்ளம் என்ன வாடலாமா

Contemporary ஆனால் வரம்பு மீறாத கிண்டல். இதயம் படத்தில் ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான் பாடலில் சின்னப்பையன்களை வாட்டும் பெண்கள் பற்றி பாடுகிறார். பஸ் கிஸ் என்று இன்றைய sms போல வரிகள்  பூஞ்சிரிப்பில் மோனலிசா போலிருந்தும் கல்மனசா என்ற நக்கல். ஒரு conventional டியுனில் அழகான தமிழ் வார்த்தைகளையும் சென்னை நகரில் வழக்கில் இருக்கும் வார்த்தைகளையும் கோர்த்து ஒரு ஜாலம்.

ஈவ் டீசிங் பாடல்கள் தரம் எப்போது சரிந்தது என்று ஒரு புள்ளி தெரியவில்லை. அக்கா பெத்த முக்கா துட்டே என்று பாடல் வர ஆரம்பித்து, இந்த வகை பாடல்களில் இருந்த அழகு குறைந்தது என்றே தோன்றுகிறது. வாலியும் வரம்பு மீறி எழுதவேண்டிய கட்டாயம். ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதியது அவர் இந்த வகையில் எழுதிய மற்ற சில பாடல்களை பதிவில் சொல்ல மனம் வரவில்லை.

கங்கை அமரன் ‘ஓ ரங்கா ஸ்ரீ ரங்கா’ என்ற அர்த்தமற்ற ஒரு பாடலை எழுதினார். அதில்

பொம்பளைக்கு வேணும் அச்சம் மடம் நாணம்

இல்லையென்று போனாலே வம்பிழுக்கத்தோணும்

என்ற, இன்றும் சொல்லப்படும் ஒரு வாதத்தை வைக்கிறார்.

நிஜத்தில் ஈவ் டீசிங் என்பது மோசமாகி வரும் வேளையில் கவிஞர்களுக்கு ஒரு கடமை உண்டு என்று தோன்றுகிறது. படத்தில் வரும் காட்சி நாயகியின் உடை, இன்றைய நிலை என்று காரணங்கள் சொல்லாமல் கண்ணியாமாக எழுதவேண்டிய கடமை உண்டு.

மோகனகிருஷ்ணன்

092/365