சாலை கடந்த குமரிகள்

  • படம்: இதயம்
  • பாடல்: ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லை
  • எழுதியவர்: வாலி
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: இளையராஜா, தீபன் சக்கரவர்த்தி, எஸ். என். சுரேந்தர்
  • Link: http://www.youtube.com/watch?v=0ZwRNKNk8TI

காலேஜ் அழகியும் கான்வென்ட் குமரியும் தியேட்டர் போகிறார்,

டாக்ஸி ட்ரைவரும் பார்த்துப் பார்த்துதான் மீட்டர் போடுவார்,

காலை, மாலைதான் வேலை பார்க்கவர் மகிழ்ச்சி கொள்கிறார்,

வாலைக் குமரிகள் சாலை கடக்கையில் வாயைப் பிளக்கிறார்!

என்னதான் 75% ஆங்கிலம் கலந்து பாட்டு எழுதினாலும்கூட, தன்னையும் அறியாமல் சில மரபுச் சொற்களை ஆங்காங்கே நுழைத்துவிடுவார் வாலி. அந்தவிதத்தில், இந்தப் பாடலில், ‘வாலை’க் குமரி.

இதே சொல்லை பாரதியாரும் பயன்படுத்தியிருக்கிறார், ‘வாலைக் குமரியடி, கண்ணம்மா, மருவக் காதல் கொண்டேன்!’

குறும்பான பெண்ணை ‘வால் குமரி’ என்று சொல்லலாம், அதென்ன ‘வாலைக் குமரி’?

பெண்களின் வயதைப் பொறுத்து பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்று ஏழுவிதமாகப் பிரிப்பார்கள், கேள்விப்பட்டிருக்கிறோம்.

இதேபோல், இன்னொரு வகைபாடும் இருக்கிறது: வாலை, தருணி, பிரவுடை, விருத்தை.

  • வாலை = 15 வயதுவரை உள்ள பெண்கள்
  • தருணி = 16 முதல் 30 வயதுக்குள் உள்ள பெண்கள்
  • பிரவுடை = 31 முதல் 55 வயதுக்குள் உள்ள பெண்கள்
  • விருத்தை = 55 வயதுக்குமேல் உள்ள பெண்கள்

ஆக, ‘வாலைக் குமரி’ என்றால் பதினைந்து வயதுப் பெண் (அல்லது அதைவிடச் சிறியவள்) என்று அர்த்தம். Underage காதல் ரொம்பத் தப்பாச்சே, யு டூ வாலி? அதைவிட, யு டூ பாரதி?

கவலை வேண்டாம், இதே வார்த்தையில் இரு கவிஞர்களுக்கும் ஒரு Loop Hole இருக்கிறது, அதன்மூலம் பிரச்னையில் சிக்காமல் வெளிவந்துவிடுவார்கள்.

’வால்’, ‘வாலை’ என்ற சொற்களுக்குத் தமிழில் ‘சுத்தமான’ என்ற பொருளும் உண்டு. ஹமாம் போட்டுக் குளித்துவிட்டு வந்த சுத்தமான பெண்கள் (அல்லது, தூய்மையான எண்ணங்களைக் கொண்ட / களங்கமில்லாத பெண்கள்) சாலை கடந்தனர், அதைப் பார்த்த மற்றையோர் வாயைப் பிளந்தனர், அம்மட்டே!

போகட்டும், ‘மருவ’க் காதல் என்கிறாரே பாரதியார், அதென்ன மருமம்?

தமிழில் ‘மருவுதல்’ என்றால் இது, அது என்று வித்தியாசமே பார்க்காதபடி இரண்டறக் கலத்தல் என்று அர்த்தம். காதலுக்கு மிகப் பொருத்தமான அடைமொழி, பாரதின்னா சும்மாவா? 🙂

***

என். சொக்கன் …

02 03 2013

091/365