விருந்தினர் பதிவு : கேளாமல்

பாடல்: கேளாமல் கையிலே …

படம்: அழகிய தமிழ்மகன்

பாடலாசிரியர்: தாமரை

இசை: இரகுமான்

இயக்கம்: பரதன்

 

ஆண்டாள், வெள்ளிவீதியார், வெண்ணிக்குயத்தியார் என்று பல்வேறு பெண்பாற் புலவர்களைக் கொண்ட நம் தமிழ் மொழியில்,திரைப்பாடல் என்னும் துறையில் மட்டும் ஏனோ பெண்கள் பங்களிப்பு அதிகம் இருந்ததில்லை. இந்த குறையை நீக்க மலர்ந்தவர்தான் தாமரை. கொங்கு தமிழும், குளிரும் மாற்றி மாற்றி கொஞ்சும் கோவை நகரில் பிறந்து வளர்ந்த்தாலோ என்னவோ இவருடைய வரிகள் சிறுவாணி நீராய் இனிக்கும்.

 

தமிழகத்தின் வருங்கால முதல்வர் என்பதற்குரிய தகுதி உடையவராக அவரது இரசிகர்களால் கருதப்படும் இளைய தளபதி விசய் அவர்களும், உடுக்கை உடலால் உளத்தை உருக்கும், உத்தராகந்து உதிர்த்த உத்தமி சிரேயா அவர்களும், அழகிய நியூசிலாந்து கிராமங்களில் நடனமாடும்படி படமாக்கப்பட்ட பாடல் இது.

 

இந்த பாடலின் ஒவ்வொரு அடியுமே குறிப்பிடும்படி அமைந்திருந்தாலும், நீள-நேர காரணங்களால் இரண்டு இடங்களைப் பற்றி மட்டும் இப்பதிவில் பார்ப்போம்.

 

1)

 

பார்த்தும் பாராமலே ஓடும் மேகங்களே,

ஏதோ நடக்கின்றதே குதித்துப் போவதேன் ? நில்லுங்களேன்.

பார்த்தும் பாராமலே ஓடும் மேகங்களே !

 

தலைவனும் தலைவியும் ஏதோ செய்துகொண்டிருக்கிறார்கள். மேலே வானத்தில் செல்லும் மேகங்கள் இதனை கண்டும் காணாமலும் ஓடிக் கொண்டிருக்கின்றன.  தமிழ் இலக்கணத்தில், இயல்பாய் நிகழும் ஒரு நிகழ்ச்சியின் மேல் கவிஞர் தன் கற்பனையை ஏற்றிப் பாடுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும். (தமிழ் இலக்கணம் பற்றி மேலும் ஆழமாக அறிய வாங்கிப் படியுங்கள் கொத்தனார் நோட்ஸ், கொத்தனார் நோட்ஸ், கொத்தனார் நோட்ஸ்,  டிடிங்) .

 

இந்த அழகான வரிகளை மெட்டில் உட்கார வைப்பதற்காக இரகுமான் உச்சரிப்பில் கொஞ்சம் சிதைத்து விட்டார். ஆனால் இயக்குனரோ, பாடலாசிரியரின் கற்பனையை தெளிவாக உள்வாங்கிக் கொண்டு, மிகப் பொருத்தமாக இங்கு ஒரு முத்தக்காட்சியை வைக்கிறார்.  அதாவது காதலன் காதலியை முத்தமிட முயல்கிறான், இதனை கண்டும் காணாமலும் மேகங்கள் ஓடுகின்றன. காதலி வெட்கத்துடன் மேகங்களை ஓடாமல் நிற்கச் சொல்லுகின்றாள். அப்படி நின்றாலாவது காதலன் முத்தமிடுவதை தவிர்க்கலாம் என்று நினைக்கிறாள். ஆனால் மேகங்கள் ஓடி விடுகின்றன. அதனால் காதலியும், “நனைந்த பிறகு நாணம் எதற்கு” என்று, மேகங்களும் நின்று பார்க்கப்போவதில்லை என்று உணர்ந்து, முத்தமிட்டு வைக்கிறாள். கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சி /முத்தம் என்று நடிக்க எந்த தயக்கமும் இல்லை என சிரேயாவும் தாராளமாக வெட்கப்புன்னகையுடன் நடித்து கொடுத்திருக்கிறார்.

 

 

2)

 

மேற்கு திசையை நோக்கி நடந்தால்

இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா ?

 

இந்த வரியை முதன் முதலில் கேட்ட போதே, மிகவும் ஈர்த்து விட்டது. கிழக்கில் கதிரவன் உதிப்பதால், கிழக்கு நோக்கி நடந்தால் காலையும், மேற்கு நோக்கி நடந்தால் இரவும் சீக்கிரம் வருமா, என்று தலைவி கவித்துவமாய் ஏங்குகிறார். ஆனால் மீண்டும் மீண்டும் கேட்டு யோசித்த போது, இதில் பிழை உள்ளதாகவே தெரிகிறது.

 

இரவு வர வேண்டும் என்று பெண் ஏங்குகிறாள் எனில், அங்கு இருப்பது  பகல் பொழுது என்று அறிந்து கொள்ளலாம். நாள் என்பது கிழக்கில் தொடங்குவதால், நாம் சப்பான் நாட்டை Land of Rising Sun என்கிறோம். நம்மூரில் காலை/மாலை என்றால் சப்பானில் (கிழக்கில்) மாலை/இரவு இருக்கும். ஆதலால் இந்த வரியில் நயம் மிகுந்திருந்தாலும் பொருட்பிழை உள்ளது. இது,

 

கிழக்கு திசையை நோக்கி நடந்தால்

இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா ?

 

என்று இருக்க வேண்டும். இல்லையேல்,

 

மேற்கு திசையை நோக்கி நடந்தால்

இனிக்கும் இரவு இன்னும் நீளுமா ?

 

என்று இருக்கலாம். ஆனால் இரவு நேரத்தில் நடன காட்சி அமைப்பது சிரமமாகியிருக்கும்.

 

Video Link : http://www.youtube.com/watch?v=WCekqEGzeTM

சங்கர்

சங்கர் சேமிப்பியல் பொறியாளராக (File Systems Engineer) பணியாற்றி வருகிறார். இறை நம்பிக்கை அற்றவர். தேவதைகள் (அமலா, சுருதிகாசன் முதலானோர்) நம்பிக்கை உற்றவர். கிரந்தம்தவிர் கூட்டத்தில் ஒரு சிறுவன். கட்டற்ற மென்பொருட்கள் (Free Software), கவிதைகள், திரைப்பாடல்கள் மற்றும் தமிழ் இலக்கண ஆர்வலர். பின்னொருநாளில் தமிழ் வழியில் அறிவியலில் முனைவர் பட்டம் பெற கனவு காண்பவர்.

டுவிட்டர்: twitter.com/psankar
வலைப்பூ: psankar.blogspot.com