24 நிமிடங்கள்

  • படம்: மே மாதம்
  • பாடல்: மின்னலே, நீ வந்ததேனடி
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
  • Link: http://www.youtube.com/watch?v=e4cgBHU26DQ

சில நாழிகை, நீ வந்து போனது,

என் மாளிகை, அது வெந்து போனது,

மின்னலே, என் வானம் உன்னைத் தேடுதே!

’நாழிகை’ என்பது பழந்தமிழர் பயன்படுத்திய நேர அளவுகளில் ஒன்று. இன்றைய கணக்குப்படி 24 நிமிடங்களுக்குச் சமம்.

ஆக, ஒரு நாளில் 24 மணி நேரங்கள், 24 * 60 நிமிடங்கள், 24 * 60 / 24 = 60 நாழிகைகள். இதைப் பகலுக்கு 30, இரவுக்கு 30 என்று பிரித்துள்ளார்கள்.

நம்முடைய மணிக்கணக்கின்படி, அதிகாலை 6 AMக்கு, முதல் நாழிகை தொடங்குகிறது, 6:25க்கு இரண்டாம் நாழிகை, 6:49க்கு மூன்றாம் நாழிகை, and so on.

இதனைக் கணக்கிடுவதற்காக, ‘நாழிகை வட்டில்’ என்ற ஒரு கருவியையும் தமிழர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். Hour Glass போன்ற அமைப்பு, அதில் நீர் அல்லது மணலை நிரப்பியிருப்பார்கள், அது முழுவதும் வடிந்து கீழே வந்து சேர்வதற்கு ஆகும் நேரம், ஒரு நாழிகை, 24 நிமிடங்கள்.

கம்ப ராமாயணத்தில் பிரதான வில்லனாகிய ராவணனைவிட அதிகம் பேசப்பட்ட ஓர் எதிர்மறைப் பாத்திரம் உண்டு: அந்த ராவணனின் மகன் இந்திரஜித் என்கிற மேகநாதன்.

இந்திரஜித்தின் வில்வன்மையைச் சொல்ல வரும் கம்பர், ‘நாழிகை ஒன்று, வளையும் மண்டலப் பிறை என நின்றது அவ்வரிவில்’ என்கிறார். இந்த அட்டகாசமான வர்ணனையைப் புரிந்துகொள்வதற்கு, நாம் கம்பரின் கண்களில் நின்று கற்பனை செய்யவேண்டும்.

வில்லை எடுக்கிறான் இந்திரஜித், அதில் அம்பு தொடுக்கிறான், அதனால் வில் வளைகிறது, அந்த அம்பை எய்கிறான்.

இப்போது, அவனுடைய கை தோளுக்குப் பின்னே செல்கிறது, இன்னோர் அம்பை எடுக்கிறான், அதே வில்லில் தொடுக்கிறான், எய்கிறான்.

ஆனால், இந்திரஜித் அடுத்த அம்பை எடுத்துத் தொடுப்பதற்குள் வளைந்த வில் நிமிர்ந்து நேராகிவிடுமல்லவா?

அதுதான் இல்லை, முதல் அம்பு வில்லில் இருந்து விடுபட்டுச் சென்ற அதே வேகத்தில் அடுத்த அம்பை எடுத்துத் தொடுத்துவிடுகிறான், ஆகவே, வளைந்த வில் அப்படியே வளைந்தே நிற்கிறது. அதிலேயே தொடர்ந்து மூன்றாவது, நான்காவது அம்புகளைச் செலுத்திக்கொண்டே இருக்கிறான்.

இடைவெளியில்லாமல் இப்படி அம்புகளைத் தொடர்ந்து எய்த காரணத்தால், இந்திரஜித்தின் வில் ஒரு நாழிகைப் பொழுதுக்கு, அதாவது 24 நிமிடங்களுக்கு நிமிராமல் வளைந்தே காணப்பட்டதாம், அதைப் பார்ப்பதற்குப் பிறைச் சந்திரன்போல் தோன்றியதாம்.

சர்வதேச அளவில் 60 நிமிட ‘மணி’யை நாம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதால், 24 நிமிட ‘நாழிகை’ நம்முடைய தினசரிப் பேச்சில் அதிகம் இடம்பெறுவதில்லை. ஆனால், தமிழர்கள் நாளை 24 நிமிடக் கூறுகளாகப் பிரித்ததில் ஏதோ ஒரு காரணம் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

Time Managementபற்றிப் பேசும் நிபுணர்கள் நமது நேரத்தைச் சரியானபடி பயன்படுத்திக்கொண்டு வேலைகளைச் செய்வதற்குப் பல உத்திகளை முன்வைக்கிறார்கள். அதில் பிரபலமான ஒன்று, Pomodoro Technique.

இந்த உத்தியைப்பற்றி விரிவாகப் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உண்டு, இங்கே அது அவசியமில்லை என்பதால் சுருக்கமாகச் சொல்கிறேன்: ஒரே வேலையைத் தொடர்ந்து நெடுநேரம் செய்தால் சோர்வாகும், அதற்காக அடிக்கடி வேலைகளை மாற்றிக்கொண்டிருந்தால் எதையும் உருப்படியாகச் செய்யமாட்டோம். ஆகவே, ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில், எந்த இடையூறும் இல்லாமல் ஒரே வேலையைச் செய்வது, அதன்பிறகு சிறு ஓய்வு எடுத்துக்கொண்டு, மீண்டும் அதே நேர இடைவெளியில் அதே வேலையைத் தொடர்வது, அல்லது அடுத்த வேலையைச் செய்வது…

இப்படி ஒவ்வொரு நாளையும் அந்தக் குறிப்பிட்ட நேர இடைவெளிகளாகப் பிரித்துக்கொண்டு வேலை செய்தால், எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்துமுடித்துவிடலாம் என்பதே இந்த உத்தியின் அடிப்படை. பல பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களில் இந்த முறை பயன்படுத்தப்பட்டுப் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. பல லட்சம் பேர் இதனால் பயன் பெற்றுள்ளதாகச் சொல்கிறார்கள்.

Pomodoro Technique சொல்லும் அந்த ”Perfect” நேர இடைவெளி, 25 நிமிடம். கிட்டத்தட்ட ஒரு நாழிகை 🙂

***

என். சொக்கன் …

27 02 2013

088/365