புதுப்புது அர்த்தங்கள்

இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போவது கவுண்டர் பாட்டு. சாதியைக் குறிக்கும் கவுண்டர் அல்ல. இது ஆங்கில Counter.

கவி பாடலாம்” என்று ஒரு மிக அருமையான நூலை கி.வா.ஜ அவர்கள் எழுதியிருக்கிறார். பாட்டெழுதுவதற்குத் தமிழில் இலக்கணங்களையும் வகைகளையும் எளிய தமிழில் விளக்கங்களோடும் எடுத்துக்காட்டுகளோடும் சொல்லியிருக்கிறார். தமிழ் ஆர்வலர்களுக்கு அந்த நூல் ஒரு வரம்.

இலக்கணங்கள் ஆண்டாண்டு காலமாக இருக்க புதுமைகள் புகுந்த வண்ணம் இருக்கிறது. இலக்கணம் என்பதையே விட்டு விட்டு புதுக்கவிதை பழக்கத்துக்கு வந்தது. மரபுக்கவிதையையே மறக்க வைத்து விட்டு புதுக்கவிதை பிரபலமாயிருக்கிறது என்றால் அதன் எளிமையைப் புரிந்து கொள்ள முடிகிறது.

பிறகு ஹைக்கூ என்றொரு வகை. இப்படியாக வகை வகையாக வந்த வகைகளில் ஒன்றுதான் Counter வகை. இது பெரும்பாலும் புதுக்கவிதை முறையிலேயே எழுதப்படுகிறது.

மரபில் தெளிவான இலக்கணங்களோடு கவுண்டர் வகை பாடல்கள் விளக்கப்பட்டிருக்காவிட்டாலும் மரபுக்கவிதையிலும் இந்த வகைப் பாடல்களை எழுத முடியும்.

சரி. பாடலின் இலக்கணத்தைப் பார்ப்போம்.

கவுண்டர் முறையில் ஒரு பாடலை எழுதினாலும் அதை இரண்டு பாடல்களாகப் பிரித்து விடலாம். ஒவ்வொரு பாடலும் தனித்தனியாகவும் பொருள் கொடுக்கும். சேர்ந்தும் பொருள் கொடுக்கும். புரியவில்லையா? ஒரு திரைப்படப் பாடலையே எடுத்துக்காட்டாக வைத்து விளக்குகிறேன். புரியும்.

இதுவரையில் தமிழ்த் திரையிசையில் Counter முறையில் ஒரேயொரு பாடல்தான் வந்திருக்கிறது. அந்தப் புதுமையைப் புகுத்திய பெருமை இசைஞானி இளையராஜாவையே சேரும். அவர் அப்படிப் புகுத்திய புதுமைக்குச் சொற்களைப் புகுத்தி கவி சமைத்த பெருமை கவிஞர் வாலியையே சேரும்.

கவுண்டர் முறைப் பாடல்களில் வரிகளைச் சீர்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஒற்றைப்படைச் சீர்களையும் இரட்டைப்படைச் சீர்களையும் தனித்தனியாக பிரித்தால் இரண்டு பாடல்கள் கிடைத்துவிடும். இதுதான் Counter.

நான் குறிப்பிடப் போகும் திரைப்படப்பாடலில் பல்லவி முழுக்க முழுக்க கவுண்டர் முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த முறையில் பாடல்களைப் படம் பிடிப்பதிலும் சிரமம். அதற்கான தக்க சூழ்நிலை வேண்டும். ஆகையால் எளிமையாக ஒரு காதல் பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

என் கண்மணி உன் காதலி
இள மாங்கனிஉனைப் பார்த்ததும்
சிரிக்கின்றதே சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நானமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ

என் மன்னவன் உன் காதலன்
எனைப் பார்த்ததும் ஓராயிரம்
கதை சொல்கிறான் கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ

இது பாடலின் முதற்பகுதி. அதாவது ஆணும் பெண்ணுமாகப் பாடும் பல்லவியும் அனுபல்லவியும். இதில் பல்லவியை மட்டும் எடுத்துக் கொண்டு ஆராய்வோம்.

ஆண்
என் கண்மணி உன் காதலி
இள மாங்கனிஉனைப் பார்த்ததும்
சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன்

பெண்
என் மன்னவன் உன் காதலன்
எனைப் பார்த்ததும் ஓராயிரம்
கதை சொல்கிறான் கதை சொல்கிறான்

இந்த வரிகள் முழுதாகச் சேர்ந்து பொருள் தருகின்றன. சரி. இப்போது நாம் சொன்ன சீர் பிரிப்பு வேலைக்கு வருவோம். ஓற்றைப்படைச் சீர்களையும் இரட்டைப்படைச் சீர்களையும் பிரித்து இரண்டு பாடல்களாகத் தந்திருக்கிறேன்.

பாடல்-1

ஆண்: என் கண்மணி இளமாங்கனி சிரிக்கின்றதேன்
பெண்: என் மன்னவன் எனைப் பார்த்ததும் கதை சொல்கிறான்

பாடல்-2

ஆண்: உன் காதலி உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதேன்
பெண்: உன் காதலன் ஓராயிரம் கதை சொல்கிறான்

இந்த இரண்டு பாடல்களையும் அப்படியே எடுத்துக் கொண்டாலும் பொருள் கிடைக்கும். இதுதான் Counter முறையில் எழுதப்படும் முறை. இந்தப் பாடலைப் பார்க்கும் போது பல்லவியைப் படமாக்குவதற்குப் பட்ட சிரமம் புரியும்.

சரி. இப்பிடியெல்லாம் பாடல் எழுதச் சொல்லி இசையமைக்கத்தான் வேண்டுமா? இந்த மெட்டிலேயே மிக எளிமையாக ஒரு காதல் பாடலை எழுதச் சொல்லிப் படமாக்கியிருக்கலாமே! வெகுசில இசையமைப்பாளர்கள்தான் புதுமையை விரும்பி முயற்சி செய்கின்றவர்கள். அந்த வகையில் இளையராஜாவும் சேர்த்திதான்.

பாடலின் சுட்டி – http://youtu.be/cLJluxRG9g0
பாடியவர்கள் – இசையரசி பி.சுசீலா & பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம்
படம் – சிட்டுக்குருவி

அன்புடன்,
ஜிரா

087/365