நிஜம் நிழலாகிறது

அபூர்வ சகோதரர்கள் படத்தின் பாடல்கள் பற்றி ட்விட்டரில் பேச ஆரம்பித்தபோது நண்பர் @prabhukala  ‘ராஜா கைய வெச்சா’ பாடல் இளையராஜாவை மனதில் வைத்து எழுதியது என்று சொன்னார். பாடல்களில் இது போல் வேறு வரிகள் உண்டா ?

திரைப்பாடல் வரிகள் திரையில் வரும் கதை நாயகன் நாயகி அல்லது மற்ற பாத்திரங்களின் குரலாகவே அமையும். ஆனால் சில நேரங்களில் கவிஞன் தன் கருத்தை முன் வைத்தும் படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு Larger-than-life கலைஞனை முன்னிலைப்படுத்தியும் பாடல் வரிகள் அமைப்பது உண்டு. கவிஞர்கள் விரும்பி செய்ததா அல்லது ஒரு வேறு காரணங்களால் திணிக்கப்பட்டதா என்ற விவாதம் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும். அதை விடுங்கள்

‘பாடல் பெற்ற மேன்மக்கள்’ என்றால் நினைவுக்கு வரும் பெயர்கள்

  • மக்கள் திலகம் MGR முன் தீர்மானிக்கப்பட்ட பாதையில் செல்ல பல பாடல் வரிகளை ஒரு vehicle ஆக்கினார். இதை கண்ணதாசன் வாலி தவிர வேறு சிலரும் எழுதினர்

  • பின்னாளில் ரஜினிகாந்த் / கமல்ஹாசன் பிம்பம் பற்றி பல வரிகள்.- வாலி வைரமுத்து கைவண்ணத்தில்.

  • இளையராஜா இசையமைத்த பல படங்களின் தலைப்பில் ஆரம்பித்து பாடல்கள் வரை அவர் பெயரை ஆராதனை செய்த ஒரு காலம் உண்டு. எல்லாமே ராசாதான். கவிஞர்கள் தவிர அவரே தன்னை முன்னிலைப்படுத்தி பாடல்கள் எழுதினார்.

முதலில் கவியரசு. தன்னை காவியத்தாயின் இளையமகன் என்று சொல்லிகொள்ளும் கவிஞர் தன்னைப்பற்றி சொல்லும் வரிகள்.

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு

ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு

நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு

என்று தள்ளி நின்று தன்னையே விமர்சனம் செய்யும் வார்த்தைகள். கர்வத்துடன் சொன்ன வரிகள்

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை –

எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை

அவர் பாடல் வரிகளில் சில செய்திகள் மறைந்திருக்கும் என்று சொல்வார்கள். நான் படித்த கேள்விப்பட்ட சில உதாரணங்கள்

  • அறிஞர் அண்ணா 1968 ல் உடல் நலமின்றி இருந்தபோது ‘ நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா’ என்ற காட்சியோடு பொருந்திய பாடல்
  • காமராஜருடன் நெருங்கிப்பழகியவர். அரசியலில் அவருடன் இணைய முயற்சி செய்தபோது ‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி சேரும் நாள் பார்க்க சொல்லடி’ என்று பாடலில் தூது அனுப்பிய திறமை.
  • அரங்கேற்றம் படத்தின் ‘மூத்தவள் நீ கொடுத்தாய்’ என்ற பாடலின் வரிகள் காமராஜரை பற்றி அவர் எழுதியது பின் கதையில் வரும் பெண் பாத்திரத்துக்கு மாற்றப்பட்டது
  • தன் சகோதரர் A L சீனிவாசனுடன் ஏதோ சண்டை. அன்று அவர் எழுதிய பாட்டுதான் அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே
  • ஜெயலலிதா கேம்ப் மாறி சிவாஜியின் கலாட்டா கல்யாணம் படத்தில் நடித்த போது ‘நல்ல இடம் நீ வந்த இடம் வரவேண்டும் காதல் மகராணி’ என்று எழுதியது

கண்ணதாசன் ரஜினிகாந்துக்கு பொருத்தமாக ஒரு பாட்டு எழுதியிருக்கிறார் தெரியுமா? சில சிக்கல்களிலிருந்து மீண்டு வந்து ரஜினி நடித்த பில்லா படத்தில் நாட்டுக்குள்ளே எனக்கொரு ஊர் உண்டு பாடலை பாருங்கள்.

 என்னப்பத்தி ஆயிரம் பேரு என்னென்ன

சொன்னாங்க இப்பென்ன செய்வாங்க

நாலு படி மேலே போனா நல்லவனா உடமாட்டாங்க

பாடுபட்டு பேர சேத்தா பல கதைகள் சொல்லுவாங்க

வாலி எம் ஜி ஆருக்கு எழுதிய பல பாடல்கள் இந்த வகை. நாயகனுக்கு பாடல் என்ற template இவருக்கு பொம்மை விளையாட்டு. சின்னத்தாயவள் தந்த ராசாவே என்றும் சொல்வார் . எல்லாம் புகழும் ஒருவன் ஒருவனுக்கே என்று ARR பெருமை சொல்வார் அவர் தன்னை பற்றி எழுதிய வரிகள் தசாவதாரம் படத்தில்

நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜன்தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்தான்

வைரமுத்து ரஜினிகாந்துக்கு எழுதிய பல வரிகள் மிக பிரபலமானவை. கருப்பு நிறத்தையும் காந்தம் போல் கண்கள் பற்றியும் அரசியல் திட்டம் பற்றியும் இமயமலை போவது பற்றியும் சலிக்காமல் எழுதிக்கொண்டிருக்கிறார். அவ்வப்போது ஆழ்வார்பேட்டை ஆண்டவனைப்பற்றியும் எழுதுவார். உலக நாயகனே என்பார். தடைகளை வென்று சரித்திரம் படைத்த கதை சொல்வார்

‘சமுத்திரம் பெரிதா தேன் துளி பெரிதா

தேன்தான் அது நான்தான்

என்று மாஸ் vs கிளாஸ் சொல்வார்.

வைரமுத்து அண்ணாமலை படத்தில் எழுதிய பாடல் ஒன்று. http://www.youtube.com/watch?v=_iaQ3e0Vm5M   அந்த படம் வெளிவந்த காலகட்டத்தில் திரையுலகில் ஒரு மௌனமான மாற்றம்

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்
என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்

அடே நண்பா……..உண்மை சொல்வேன்……….
சவால் வேண்டாம்….உன்னை வெல்வேன்…..

ஒவ்வொரு விதையிலும்… விருட்சம் ஒளிந்துள்ளதே…
ஒவ்வொரு விடியலும்…. எனது பெயர் சொல்லுதே…
பணமும் புகழும் உனது கண்ணை மறைக்கிறதே….

இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்
வானமே தாழலாம் தாழ்வதில்லை தன்மானம்
மேடுபள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம்
பாறைகள் நீங்கினால் ஓடைக்கில்லை சங்கீதம்
எனது நடையில் உனது படைகள் பொடிபடுமே….

அண்ணாமலைக்கும் ரஜினிக்கும் மட்டுமில்லை கவிஞருக்கும்  பொருந்தும் வார்த்தைகள்.

பாடல் வரிகளுக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் அர்த்தங்களை தேடுவது ஒரு சுவாரஸ்யம்.

மோகனகிருஷ்ணன்

86/365