24 காரட்

  • படம்: இளமை ஊஞ்சலாடுகிறது
  • பாடல்: கிண்ணத்தில் தேன் வடித்து
  • எழுதியவர்: வாலி
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=472O53yVXvw

ஆணிப்பொன் கட்டில் உண்டு, கட்டில்மேல் மெத்தை உண்டு,

மெத்தைமேல் வித்தை உண்டு, வித்தைக்கோர் தத்தை உண்டு,

தத்தைக்கோர் முத்தம் உண்டு, முத்தங்கள் நித்தம் உண்டு!

வாலிக்கு ‘ஆணிப்பொன்’ என்ற பதம் மிகவும் பிடித்ததாக இருக்கவேண்டும். எம்ஜிஆருக்கு ‘அழகிய தமிழ் மகள் இவள்’ என்று எழுதும்போது, தொகையறாவை ‘ஆணிப்பொன் தேர் கொண்டு மாணிக்கச் சிலையென்று வந்தாய்’ என்று தொடங்குகிறார். இங்கே கமலஹாசனுக்கு ஆணிப்பொன்னால் கட்டில் போடுகிறார், அப்புறம் ரஜினிகாந்த் குரலில் ‘ஆணிப்பொன்னு, ஐயர் ஆத்துப்பொண்ணு’ என்று நாயகியை வர்ணிக்கிறார்.

காதல்மட்டுமல்ல, ‘பூங்காவியம் பேசும் ஓவியம்’ என்று தாய், மகள் உறவைச் சொல்ல வரும்போதும்கூட, ‘ஆணிப்பொன் தேரோ’ என்றுதான் நெகிழ்கிறார் வாலி.

ஆரம்பத்தில் நான் இதை ‘ஆனிப்பொன்’ என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். அப்புறம் ஒரு நண்பர்தான் ‘ஆணிப்பொன்’ என்று திருத்தினார்.

அதென்ன ‘ஆணிப்பொன்’?

எந்தக் கலப்படமும் இல்லாத, சுத்தமான 24 காரட் தங்கத்தைதான் ‘ஆணிப்பொன்’ என்று அழைக்கிறோம்.

பொதுவாகவே தமிழில் ‘ஆணி’ என்ற வார்த்தை உயர்வைக் குறிக்கிறது. ‘ஆணிமுத்து வாங்கிவந்தேன் ஆவணி வீதியிலே’ என்று கண்ணதாசன் எழுதிய பாடலைக் கேட்டிருப்பீர்கள்.

இன்றைக்கு நம்மிடம் ‘ஆணி’ என்று யாராவது சொன்னால், சுத்தியலால் அடித்துப் பிணைக்கும் ஓர் இரும்புத் துண்டுதான் மனத்தில் தோன்றும். ஆனால், நம்மையும் அறியாமல் இந்த ‘ஆணி’யை, உயர்வு என்ற பொருளிலும் நாம் பயன்படுத்திவருகிறோம் என்று சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள்.

‘ஆணித்தரமாகப் பேசினான்’ என்று சொல்கிறோம் அல்லவா? எந்தப் பிழையும் இல்லாமல், குழப்பம் இல்லாமல், தடுமாற்றம் இல்லாமல், தெளிவாகவும் அழுத்தமாகவும் அடித்துப் பேசினான் என்று நீட்டி முழக்காமல் ‘ஆணி’த்தரம் என்று ஒரே வார்த்தையில் அதைச் சொல்லிவிடுகிறது தமிழ்.

இந்தப் பாடலில் வாலி சொல்லும் ‘ஆணிப்பொன் கட்டில்’ என்பது, ஆழ்வார் பாடலின் சாயல்தான். பெரியாழ்வார் குழந்தைக் கண்ணனுக்கு ஆணிப்பொன்னால் தொட்டில் போட்டார்:

மாணிக்கம் கட்டி, வைரம் இடை கட்டி,

ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டில்,

பேணி உனக்கு பிரம்மன் விடுதந்தான்,

மாணிக் குறளனே, தாலேலோ! வையம் அளந்தானே, தாலேலோ!

ரொம்ப சீரியஸாகப் பேசிவிட்டோம், கொஞ்சம் ஜாலியாக ஒரு விளக்கம் பார்ப்போமா?

இப்போதெல்லாம் அலுவலகத்தில் வேலை செய்கிறோம் என்பதை வேடிக்கையாக ‘ஆணி பிடுங்குகிறோம்’ என்று சொல்வார்கள். அது இழிவான கேலி வார்த்தை என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் அங்கே இரும்பு ஆணிக்குப் பதில் இந்த 24 காரட் ஆணியைப் பொருத்தினால், உயர்வான வேலையைச் செய்கிறோம் என்கிற அர்த்தம் வந்துவிடுகிறது 😉

***

என். சொக்கன் …

24 02 2013

85/365