சொல் சொல் சொல்

திரைப்பாடல்கள் உருவாகும் விதம் நம்மை வியக்க வைக்கும். மெட்டுக்கு பாட்டு, மீட்டருக்கு மேட்டர் என்பதுதான்  பொது விதி. மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு என்பது விதிவிலக்கு . முதலில் இசைதான்.

ஆனால் ஒரு பாடலின் முழு வடிவம் என்பது Black Box Solution போல் அவ்வளவு சுலபமில்லை. இசையமைப்பாளரும் கவிஞரும் சேர்ந்து அங்கங்கே சில பல நகாசு வேலை செய்து அழகு சேர்த்தே முழு பாடல் கிடைக்கும். இந்த அலங்காரத்தை கவிஞரோ இசையமைத்தவரோ யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

மெட்டமைக்கும்போது dummy வார்த்தைகள் போட்டு விட்டு பின்னர் கவிஞர் மாற்றுவதும் நடக்கும். நீதி படத்தில் வரும் பாடல் ஒன்று. MSV ‘இன்று முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்’ என்று வைத்த  வரிகளை தொடர்ந்து கண்ணதாசன் பாடல் எழுதி முடித்துவிட்டு, முதல் வரியை ‘நாளை முதல்’ என்று மாற்றினார் என்று படித்திருக்கிறேன்.

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ பாடலில் ‘செந்தாமரை இரு கண்ணானதோ’ என்ற வரியில் செந்தா….மரை என்று வார்த்தையை பூ மலர்வது போல் விரித்து அழகு செய்தது இசை. இதுபோல் இசை ஒரு பாடலின் வரிகளில் என்னவெல்லாம் செய்ய முடியும்?

வாழ்க்கை படகு என்ற படத்தில் வரும் ‘ஆயிரம் பெண்மை மலரட்டுமே’ என்ற http://www.inbaminge.com/t/v/Vazhkai%20Padagu/Ayiram%20Penmai%20Malarattume.eng.html
பாடலில்

ஆயிரம் பெண்மை மலரட்டுமே

ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே

ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே

சொல் சொல் சொல்.. தோழி சொல் சொல் சொல்

அந்த சொல் என்ற வார்த்தையை மூன்று முறை – இல்லை ஆறு முறை பாட வைத்து வாக்கியத்திற்கு ஒரு Force கொடுக்கிறது இசை. இது சரணத்திலும் தொடர்கிறது.

இன்னொரு பாடல். நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் வரும் ஒரு எவர்க்ரீன் பாடல் http://www.inbaminge.com/t/n/Nenjil%20Oor%20Aalayam/Sonnathu%20Nethana.eng.html

சொன்னது நீதானா,

சொல், சொல், சொல் என்னுயிரே .

என்ற வரிகளில் வரும் சொல் , வலியுடன் வேதனையுடன் வெளிப்படும் ஒரு ஆதங்கத்தை உள்வாங்கி எதிரொலிக்கிறது.

மூன்றாவது கலங்கரை விளக்கம் என்ற படத்தில் வரும் பொன்னெழில் பூத்தது புதுவானில் என்ற பாடல். http://www.inbaminge.com/t/k/Kalangarai%20Vilakkam/Ponnezil%20Poothathu.eng.html
இதில் ஒரு வரி

என் மனத் தோட்டத்து வண்ணப்பறவை

சென்றது எங்கே சொல் சொல் சொல்.

இதில் வரும் சொல் சொல், தேடலின் துடிப்பை பிரதிபலிக்கும்.

இது பாடலில் முதலில் எழுதப்பட்டதா ? அல்லது பாடல் உருவாகும்போது செய்த மாற்றமா ? தெரியாது.முதல் இரண்டு கண்ணதாசன் எழுதிய பாடல்கள்   மூன்றாவது பஞ்சு அருணாசலம் எழுதியது. மூன்றுக்கும் இசை MSV அதனால்  கண்டிப்பாக இசையமைத்தவரின் பங்கு கணிசமானது என்றே தோன்றுகிறது.

கொசுறாக ஒரு உதாரணம். கண்மணி ராஜா என்ற படத்தில் ‘ஓடம் கடலோடும் என்ற பாடலில் வரும் வரிகள். பாடலில் SPB இணையும் இடம்

ஏதோ அது ஏதோ அதை நானும் நினைக்கின்றேன்
ஏதோ அது ஏதோ அதை நானும் நினைக்கின்றேன்
ஏனோஅது ஏனோ அதை நானும் ரசிக்கின்றேன்
ஏதோ அது ஏதோ அதை நானும் நினைக்கின்றேன்
ஏனோ அது ஏனோ அதை நானும் ரசிக்கின்றேன்

இப்போது இந்த பாடலை கேளுங்கள். http://www.inbaminge.com/t/k/Kanmani%20Raja/Odam%20Kadalodum.eng.html
Subtle மியூசிக் மாற்றம் இருந்தும் ஒரே வரியை உபயோகித்து பாடல் அமைத்து பின்னர் வரிகளிலும் சிறு மாற்றம் செய்தது போல் இருக்கிறது.  என்ன நடந்திருக்கும்? கவிஞர் ஒரு வரியை எழுதிக்கொடுத்து MSV பல விதமாக இசையமைததாரா ? அல்லது மெல்லிசை மன்னர் போட்ட மெட்டுக்கு இவர் ஒரே வரியை எழுதினாரா ? புரியாத புதிர்

மோகன கிருஷ்ணன்

084/365