எண்ணிப் பார்க்கவேண்டிய விஷயம்

 • படம்: அபூர்வ ராகங்கள்
 • பாடல்: ஏழு ஸ்வரங்களுக்குள்
 • எழுதியவர்: கண்ணதாசன்
 • இசை: எம். எஸ். விஸ்வநாதன்
 • பாடியவர்: வாணி ஜெயராம்
 • Link: http://www.youtube.com/watch?v=51YPPoBKllg

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்!

இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி!

காணும் மனிதருக்குள் எத்தனை சலனம், வெறும்

கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்!

இந்தப் பாடலின் முதல் வரியில் ‘எத்தனை’ என்கிற வினாச்சொல் இருப்பினும், அது உண்மையில் கேள்வி அல்ல. ‘இருப்பவை ஏழு ஸ்வரங்கள்தாம். அதற்குள் எத்தனை எத்தனையோ பாடல்கள் அடங்கியுள்ளனவே!’ என்கிற வியப்பைக் குறிப்பிடும் வாக்கியம்தான்.

ஆக, ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்’ என்ற வரிக்கு, நாம் ‘1792 பாடல்கள்’ என்பதுபோல் ஓர் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு பதில் சொல்லவேண்டியதில்லை. அது கவிஞரின் நோக்கமும் இல்லை.

ஒரு பேச்சுக்கு, நாம் இதை ஒரு கேள்வி வாக்கியமாகவே எடுத்துக்கொள்வோம். இதனுடன் அடிப்படைத் தொடர்பு கொண்ட, ஆனால் சற்றே வேறுபட்ட இன்னும் இரு சொற்களைப் புரிந்துகொள்வோம் : எத்துணை & எவ்வளவு.

‘எத்தனை’க்கும் ‘எத்துணை’க்கும் ’எவ்வளவு’க்கும் என்ன வித்தியாசம்?

 • ‘எத்தனை?’ என்று கேட்டால், அதற்குப் பதிலாக ஒன்று, இரண்டு, மூன்று, தொண்ணூற்றெட்டு, ஆறு லட்சத்துப் பதினாறு என்பதுபோல் ஓர் எண்ணை(Number)தான் பதிலாகச் சொல்லவேண்டும்
 • ‘எத்துணை?’ என்று கேட்டால், எண் + அதனுடன் அளவு (Unit) ஒன்றையும் சேர்த்து பதிலாகச் சொல்லவேண்டும்
 • ‘எவ்வளவு?’ம் ’எத்துணை’மாதிரியேதான்

உதாரணமாக, ‘உனக்கு எத்தனை வயது?’ என்று ஒருவர் கேட்டால், ‘19’ என்று எண்ணிக்கையைப் பதிலாகச் சொல்லலாம். ’உன் வீட்டில் எத்தனை பேர் வசிக்கிறார்கள்?’ என்று கேட்டால், ‘6’ என்று எண்ணிக்கையைப் பதிலாகச் சொல்லலாம்.

ஆனால் அதே நபர் ‘உன் சம்பளம் எத்தனை?’ என்று கேட்டால், அதற்கு என்ன பதில் சொல்வது?

சம்பளம் என்பது வெறும் எண் அல்ல, ‘10’ என்று பதில் சொன்னால், அது பத்து ரூபாயா, பத்து பைசாவா, பத்து டாலரா, பத்து யூரோவா, பத்து தங்கக்கட்டிகளா?

ஆக, ‘சம்பளம் எத்தனை?’ என்ற கேள்வி தவறு, ‘சம்பளம் எவ்வளவு?’ அல்லது ‘சம்பளம் எத்துணை?’ என்றுதான் கேட்கவேண்டும். அப்போது பதில் ‘10 ரூபாய்’ என்று (அளவோடு சேர்ந்து) வரும்.

அதெல்லாம் முடியாது, நான் ’எத்தனை’யைதான் பயன்படுத்துவேன் என்று நீங்கள் பிடிவாதம் பிடித்தால், பிரச்னையில்லை, ‘உன்னுடைய சம்பளம் எத்தனை ரூபாய்?’ என்று சற்றே மாற்றிக் கேட்கலாம். அப்போது ‘10’ என்று (வெறும் எண்ணாக) பதில் கிடைக்கும்.

இன்னும் சில உதாரணங்கள்:

 • உங்கள் வீட்டில் தினமும் எத்துணை பால் வாங்குகிறீர்கள்? (சரி)
 • உங்கள் வீட்டில் தினமும் எத்தனை லிட்டர் பால் வாங்குகிறீர்கள்? (சரி)
 • உன் உயரம் எத்தனை? (தவறு)
 • +2வில் நீ எத்தனை மார்க் வாங்கினாய்? (சரி)
 • இந்த மேட்ச்சில் சச்சின் டெண்டுல்கர் எத்தனை ரன் எடுத்தார்? (சரி)
 • இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்க எத்தனை நேரம் ஆகும்? (தவறு)
 • இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்க எத்தனை நிமிடங்கள் ஆகும்? (சரி)
 • இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்க எத்துணை நேரம் ஆகும்? (சரி)

‘எத்துணை’யின் இன்னொரு பயன்பாடு, அளவிடமுடியாத விஷயங்களைச் சொல்வது. உதாரணமாக, ‘இந்த ஓவியம்தான் எத்துணை அழகு!’

இங்கே ‘எத்தனை’யைப் பயன்படுத்தினால் (’இந்த ஓவியம் எத்தனை அழகு!’) பதில் ஓர் எண்ணாக இருக்கவேண்டும். ஓவியத்தின் அழகை 10,  20 என்று நம்மால் அளவிட்டுச் சொல்லமுடியாதல்லவா?

’என்ன அழகு, எத்தனை அழகு!’ என்று ஒரு பிரபலமான பாட்டுக் கேட்டிருப்பீர்கள். அது ‘என்ன அழகு, எத்துணை அழகு!’ என்றுதான் இருக்கவேண்டும். காதலிக்கு ஐஸ் வைப்பதென்றாலும், இலக்கணப்படி ‘உன் முகம் எத்துணை அழகாக உள்ளது’ என்றுதான் கொஞ்சவேண்டும் :>

அது நிற்க. இந்த நான்கு வரிகளில் கண்ணதாசன் மூன்றுமுறை ‘எத்தனை’யைப் பயன்படுத்துகிறார். அவை மூன்றும் சரிதானா? நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள் 🙂

***

என். சொக்கன் …

21 02 2013

082/365