விருந்தினர் பதிவு : எந்த அவதாரம்

  • படம்: தசாவதாரம்
  • பாடல்: முகுந்தா முகுந்தா
  • எழுதியவர்: வாலி
  • இசை: ஹிமேஷ் ராஷ்மியா
  • பாடியவர்: சாதனா சர்கம், கமலஹாசன்
  • Link: http://www.youtube.com/watch?v=ahKeeQrhVXg
அமெரிக்காவில் ,தன் ஆராய்ச்சியில் உருவான ,உலகை அழிக்கவல்ல கிருமி ஒன்று தவறுதலாக இந்தியாவுக்கு பார்சலாகிவிட , அதைத் தேடி அழிக்க/பாதுகாக்க அந்த விஞ்ஞானியும், அவரைத் தேடி ஒரு கொலைக்கார ஏஜண்ட்டும்(அமெரிக்கன்) இந்தியா வருகிறார்கள். அந்தப் பார்சல் சிதம்பரத்தில் இருக்கும் ஒரு பாட்டியிடம் வந்து சேர்கிறது. அதைத் தெரிந்துக்கொண்டு விஞ்ஞானி,ஏஜண்ட் மற்றும் இவர்களை பின் தொடர்ந்து ஒரு ரா அதிகாரியும் சிதம்பரத்துக்குப் புறப்படும் இடத்தில் இந்தப் பாடல் அந்தப் பாட்டி இருக்கும் மடத்தில் கதாநாயகியால் பாடப்படுவதாக வருகிறது. இவ்வளவு பரபரப்பானக் கதையில் சரியான இடத்தில் இந்தப் பாடல் அமைந்திருக்கும். 
 
பாடலில் 2 சரணங்கள் உண்டு. ஆனால் இந்த 2வது சரணம் மட்டும் தான் படத்தில் வந்தது என நினைக்கிறேன்.

மச்சமாக நீரில் தோன்றி மறைகள் தன்னைக் காத்தாய்
கூர்மமாக மண்ணில் தோன்றி பூமி தன்னை மீட்டாய்
வாமனன் போல் தோற்றம் கொண்டு வானளந்து நின்றாய்
நரன் கலந்த சிம்மமாகி ஹிரணியனைக் கொன்றாய்
ராவணன் தன் தலையைக் கொய்ய ராமனாக வந்தாய்
கண்ணனாக நீயே வந்து காதலும் தந்தாய் 

கூர்மம் – ஆமை. தேவர்களுக்கு அசுரர்களுக்கும் நடக்கும் சண்டையில் ஆமையாக அவதாரமெடுத்து உதவி செய்தார்.

வராக அவதாரத்தில் தான் பூமியைக் காத்தார்.

என் மனைவிதான் இதை முதலில் கவனித்து என்னிடம் சொன்னது.ஆனா இரண்டு பேருக்கும் கூர்மம்,வராகத்தில் குழப்பமிருந்தது. எது ஆமை, எது பன்றி என.. அப்போது நான் சொன்னது “ பாட்டு எழுதினது வாலி. இந்த டாப்பிக்கில் அவர் தப்பு செய்ய வாய்ப்பே இல்லை”…

அவருக்கு மிகவும் பிடித்த ஏரியா இது. அதனால் கண்டிப்பாகத் கூர்மம்/வராகம் குழப்பத்தில் இப்படி எழுதியிருக்கமாட்டார் என நம்புகிறேன்.

அப்படியென்றால் வேறு என்ன சாத்தியங்கள் இருக்கலாம்!

  • ’வராகமாக மண்ணில் தோன்றி பூமி தன்னை மீட்டாய்’ என்றே அவர் எழுதியிருக்கலாம். “வராகமாஹ” ட்யுன் சே பைட்டியே நஹிஜின்னு இசையமைப்பாளர் நச்சரித்து,இவர் கடுப்பில் ”போய்யா கூர்மமாகன்னு போட்டுக்கோ,சரியா வரும் என சொல்லியிருக்கலாம் :))
  • சரி. “கூர்மமாக” என மாத்தியாச்சு. அப்படியே பின்னால் உள்ள வரியை மாத்திருக்கலாமே. இந்தக் கதையே உலகத்தை ஒரு கிருமியில் இருந்துக் காக்க முயல்பவனின் கதை தான். அதை இந்தப் பாடலில் தொட்டுவிடலாம் என நினைத்திருக்கலாம்

ஒருவேளை ஏதோ ஞாபகத்தில் வாலியே மாத்தி எழுதிருந்தால் , அவர் எழுதிய பேப்பரில் இருந்து நம் காதுகளுக்கு வந்து சேர 7 கடல் 7 மலை தாண்டித்தான் வந்திருக்கும். ஒருவர் கூடவா கவனிக்கவில்லை!?

இசையமைப்பாளருக்கும் பாடலைப் பாடியவருக்கும் அர்த்தம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

படத்தில் கூட இந்த வரிக்கு வராகவதாரத்தைத் தான் காட்டுவார்கள்.

சூட்டிங்கில் கமல் கவனிக்கவில்லையா!! அது சரி! அவர் பாவம் ஏதாவது மூலையில் வாயைக்கூட அசைக்கமுடியாதபடி மேக்கப் போட்டிட்டிருந்திருப்பாரு.

யாராவது ஒரு உதவியாளர் கவனித்துச் சொல்லிருந்தால் கூட ” பாட்டு எழுதினது வாலி. இந்த டாப்பிக்கில் அவர் தப்பு செய்ய வாய்ப்பே இல்லை” என அவருக்கு மேல் உள்ளவரால் அமைதியாக்கப்பட்டிருப்பார் 🙂

காளீஸ்