ஓணம்!

திருவோணத் திருநாளும் வந்தல்லோ” இளையராஜாவின் குரல் துள்ளலோடு அறை முழுதும் நிரம்பியது. தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது பாண்டியராஜன் நடித்த கவலைப் படாதே சகோதரா என்ற படம்.

அதே போல ”சுந்தரி நீயும் சுந்தரி ஞானும் சேருண்ண நாள் திருவோணம்” என்று மைக்கேல் மதன காமராஜனிலும் ஒரு பாடல் உண்டு. இரண்டுமே மலையாளச் சாயலில் அமைந்த பாடல்கள்.

திருவோணத் திருநாள் இப்போ கேரளத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு திருநாள். மாவலி என்னும் அசுரன் இந்திரபதவி வேண்டி யாகம் செய்தான். அந்த யாகம் வெற்றி பெறாமல் தடுக்க மகாவிஷ்ணு குள்ளமான வாமன அவதாரம் எடுத்து தானம் கேட்க வந்தார்.

மூன்று அடிகள் தானம் கேட்டுப் பெற்ற பின் விசுவரூபம் எடுத்து மூன்று உலகங்களையும் இரண்டு அடிகளால் அளந்து கொண்டார். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மூன்றாவது அடிக்குத் தலை கொடுத்தான் மாவலி. அவனை அப்படியே அழுத்தி பாதாளத்துக்குத் தள்ளினார். அங்கு அவன் அரசு புரிவதாக நம்பிக்கை. அந்த மாவலி ஆண்டில் ஒருநாள் மண்ணுலகம் வருவதாக நம்பிக்கை. அந்த நாளே திருவோண நாள்.

அந்த நாளில் வீடுகளை அலங்கரித்து மலர்க்கோலமிட்டு மாவலியை வரவேற்பார்கள். ஓணம் சதயா என்று சிறப்பான உணவு வகைகளைப் பரிமாறி சுவைப்பார்கள். ஆனைச் சண்டைகளும் பந்தயங்களும் கேரளத்தில் அமளிப்படும். கேரளத்தில் எந்தப் பண்டிகையை விடவும் ஓணம் பண்டிகை சிறப்பானது.

மேலே சொன்னதெல்லாம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் சங்க இலக்கியம் படித்தவர்களுக்கு மட்டும் தெரிந்த சில தகவல்களை இங்கு எடுத்துச் சொல்கிறேன்.

தலையாணங்கானத்து நெடுஞ்செழியன் பெயர் நாம் கேள்விப்பட்டதே. அவன் கூடிச் சண்டைக்கு வந்த மன்னர்களை வென்றான் என்பதும் தெரிந்ததே. அந்த நெடுஞ்செழியனைப் பாராட்டி மாங்குடி மருதனார் எழுதிய நூல்கதான் மதுரைக் காஞ்சி.

போர் வெற்றியைப் பாராட்டியும் அந்த வெற்றி தலைக்கனமாக மாறிவிடாமல் இருக்க அறிவுரை சொல்லியும் எழுதப்பட்ட நூல் மதுரைக்காஞ்சி. சில பெரிய எழுத்தாளர்கள் சொல்வது போல வெறும் புகழ்ச்சி நூலல்ல.

அந்த மதுரைக் காஞ்சி நூலில் மதுரையில் ஓணம் கொண்டாடப்பட்டது பற்றி வருகின்றது. தமிழ் மொழி வளர்ச்சியின் தலையூராக இருந்த மதுரையில் ஓணம் கொண்டாடப்பட்டிருக்கிறது. அதைச் சொல்லும் வரிகளை எடுத்துத் தருகிறேன் படியுங்கள்.

கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்
மாயோன் மேய ஓண நல் நாள்

இந்த வரிகளுக்கு என்ன பொருள்?

திரண்டு நிமிர்ந்த அவுணரை(அசுரரை) வென்ற பொன்னாற் செய்த மாலையினையுடைய மாமையை உடையோன் பிறந்த ஓணமாகிய நன்னாள் என்று பொருள்.

அதாவது மாயோன் என்னும் கடவுள் பிறந்த நாளாம் ஓணம் நன்னாள்.

அந்த ஓண நாளில் மக்கள் மகிழ்ந்து கொண்டாடி யானைகளைப் பந்தயங்களுக்கு உட்படுத்தி மனைவி மக்களோடும் சுற்றத்தோடும் குடித்திருந்து மகிழ்ந்திருந்திருக்கிறார்.

மேலே சொன்னவற்றை நான் சொல்லவில்லை. மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனார் சொல்லியிருக்கிறார்.

கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்
மாயோன் மேய ஓண நல் நாள்,
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த,
சாணம் தின்ற சமம் தாங்கு தடக் கை,
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்,
மாறாது உற்ற வடுப் படு நெற்றி,
சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங் களிறு ஓட்டலின், காணுநர் இட்ட
நெடுங் கரைக் காழகம் நிலம் பரல் உறுப்ப,
கடுங் கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர
நூல் – பத்துப்பாட்டில் ஒன்றான மதுரைக்காஞ்சி
எழுதியவர் – மாங்குடி மருதனார்

வாமனனாக வந்த கதையும் ஓங்கி உலகங்களந்த முறையும் இந்தப் பாடல் வரிகளில் இல்லை. அத்தோடு இன்றைய ஓணவிழா முறைகளில் இந்த விழாக் கொண்டாட்ட முறைகள் மாறுபட்டாலும், ஓணம் என்னும் பண்டிகை பாண்டிய நாட்டின் மதுரையிலும் கொண்டாடப்பட்டிருக்கிறது என்பது சான்றாகிறது.

அன்புடன்,
ஜிரா

080/365