அழகன் ஆலயங்கள்

ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது தற்செயலாக இப்படிக் கேட்டார்.

“முருகனைக் கும்புடுறிங்களே. ஆறுபடை வீடுகளுக்கும் போயிருக்கிங்களா?”

“ஆகா! போகாமலா? நல்லா போயிருக்கேனே.”

“நீங்க போயிருப்பீங்க. இந்த ஆறுபடை வீடுகள் மட்டுந்தான் தமிழ்நாட்டுல முருகன் கோயில்களா? வேற கோயில்கள் எதுவும் இருக்கா? 108 வைணவத்தலங்கள்னு சொல்றாங்க. ஆனா தமிழ்க்கடவுள்னு சொல்ற முருகனுக்கு ஆறு கோயில்தானா?”

இவருக்கு எப்படி விளக்குவது என்று ஒரு நிமிடம் யோசித்தேன். சங்க இலக்கியங்களில் அதற்குப் பிந்தைய காப்பியங்களில் எல்லாம் இருக்கும் கோயில்களை எடுத்துச் சொன்னால் அடுத்த முறை என்னோடு பேசாமல் போனாலும் போய்விடுவார் என்று புரிந்தது.

எப்போதும் துணைவரும் சினிமா இப்போது துணைவனாக வந்தது.

ஆம். தேவரின் துணைவன் என்ற திரைப்படத்தில் ஒரு அழகான பாடல். அந்தப் பாடலில் தமிழகத்திலுள்ள மிகப்பிரபலமான முருகன் கோயில்களை எல்லாம் பட்டியல் போடுவார்கள். கணவனும் மனைவியும் கோயில் கோயிலாகச் சென்று முருகனை வழிபட்டு பிள்ளையின் உடல்நலம் சரியாக வேண்டுவது போல காட்சியமைப்பு.

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையில் மருதகாசியும் கண்ணதாசனும் பாதிப்பாதி பாடலை எழுதிக் கொடுக்க டி.எம்.சௌந்தரராஜனும் பி.சுசீலாவும் உள்ளம் உருகப் பாடிய பாடல் இது.

அந்தப் பாட்டின் மொத்த வரிகளையும் கொடுக்கிறேன். ஆறுபடை வீடுகளையும் சேர்த்து மொத்தம் எத்தனை கோயில்கள் என்று பாருங்கள். இவை மிகப்பிரபலாமன கோயில்கள். இவை போக இன்னும் எத்தனையெத்தனையோ கோயில்கள் ஊரெங்கும் உண்டு. அதை விட அடியவர் உள்ளங்களில் அவன் கொண்டுள்ள கோயில்கள் இன்னும் நிறைய.

மருதகாசி எழுதிய வரிகள்
மருதமலை மீதிலே குடி கொண்டிருப்பவனே
மனதார நினைப்பவர்கள் எண்ணியதை முடிப்பவனே
வாயாறத் துதிப்பவர்கள் கேட்டதைக் கொடுப்பவனே
வந்தவர்க்கு அருள் புரியும் மருதமலை ஆண்டவனே

மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே
மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே
பிள்ளை முகம் பாரு முருகா
பிறவிப் பிணி தீரு
பிள்ளை முகம் பாரு முருகா
பிறவிப் பிணி தீரு
மருத மலையானே நாங்கள் வணங்கும் பெருமானே

உன்னை ஒருபோதும் எண்ண மறவேனே
சென்னிமலை வாழும் பெருமானே
அன்னை தந்தையுடன் உன்னை சிவன்மலையில்
வந்து தொழுவோர்க்கு அருள்வோனே
வள்ளல் உனை நாடி வள்ளிமலை தேடி
வருவோர்க்கு இன்பம் தருவோனே
கள்ளம் அறியாத பிள்ளைப் பெருமானே
காங்கேய நல்லூர் வளர்வோனே

திருமுருகன் பூண்டியில் பரமனருள் வேண்டியே
சிவலிங்கம் தனை வைத்துப் பூஜித்த குமரா
தென்தேரிமலை கண்டு நெஞ்சாரத் துதிப்போர்க்கு
அஞ்சாதே ! என அபயம் தருகின்ற அமரா
திருமுருகன் பூண்டியில் பரமனருள் வேண்டியே
சிவலிங்கம் தனை வைத்துப் பூஜித்த குமரா
தென்தேரிமலை கண்டு நெஞ்சாரத் துதிப்போர்க்கு
அஞ்சாதே ! என அபயம் தருகின்ற அமரா
வருந்தி வரும் அடியவர்கள் படும் துயரம் தீர்த்தாள
குருந்தமலை மீதிலே கொஞ்சும் வேலே
வற்றாத கருணை மலை நற்றாய் எனப் பொழியும்
வட்ட மலை தெய்வமே வெற்றி வேலே

அமரர் கூட்டம் ஆடவும் அசுரர் தோற்று ஓடவும்
சமர் புரிந்த குமரர் கோட்ட தவமணியே
அண்ணல் ராமலிங்க வள்ளல் நெஞ்சில்
அருள்பாவின் வெள்ளம் பொங்கச் செய்த
கந்தக் கோட்ட தமிழ்க்கனியே
தஞ்சம் என்று வந்து உன்னைக்
கெஞ்சுகின்ற எங்கள் பிள்ளை
துன்பம் தீர்க்க வேண்டுமய்யா சுடரொளியே

வீறிட்டெழுந்த சூரன் போரிட்டழிய
திருப்போரூரில் வேல் விடுத்து நின்றவா
ஏறி வரும் மயிலின் பேரும் விளங்க
ஒரு ஊரை மயிலம் எனக் கொண்டவா
பக்தர்கள் தேரூர் பவவினை தீருர்
உத்தரமேரூர் உறைபவனே
எங்கும் இல்லாத விதத்தினிலே
பொங்கும் திருமயிலாடியிலே
வடதிசை நோக்கி அமர்ந்தவனே
மயிலை ஆடச் செய்தவனே

வருபவர் பிணி தீர்க்கும் வைத்தீஸ்வரன்
பெற்ற முருகனே ஷண்முகா முத்துக்குமாரா
சரவணா எங்களின் சிறுவனைக் காப்பாற்று
சக்தி வேலாயுதா சூரசம்ஹாரா
திண்புய சூரனை வென்றதை முனிவர்க்கு
எண் கண்ணிலே சொன்ன சுப்ரமண்யா
கந்தன் குடி வாழ்ந்திடும் கந்தனே
அன்பரின் கண்ணுக்கு விருந்தாக அமர்ந்த புண்யா
தக்க தருணத்திலே பக்தரின் பக்கம் துணையிருப்பாய்
சிக்கலைத் தீர்த்து வைப்பாய் ஜெகம் புகழ் சிக்கல் சிங்காரவேலா
செட்டிமகன் என்னும் இறைவா
செந்தமிழின் தலைவா
எட்டிக்குடி தனிலே அகத்தியன் ஏற்ற குருவானவா

பழகு தமிழ் கொண்டு அருணகிரி அன்று
திருப்புகழ் பாடிய வயலுரா
புலவன் நக்கீரன் புனைந்த முருகாற்றுப்படை போற்றும்
விராலி மலை வீரா
கொன்றதொரு சூரனைக் கோலமயிலாகவே
குன்றக்குடியில் கொண்ட குமரய்யா
கந்தய்யா எங்களின் கவலையைத் தீரய்யா
கழுகு மலையில் வாழும் வேலய்யா
கழுகு மலையில் வாழும் வேலய்யா

கவியரசர் கண்ணதாசன் எழுதிய வரிகள்
பருவத ராஜகுமாரியின் மகனே
பாசத்தை உணர்ந்த பாலகனே
திருமலை முருகா மழலையின் நாவில்
ஒரு மொழி தருவாய் காவலனே
தக்கலை குமாரவேலா
ஒரு தாய் நிலை அறிந்த பாலா
மக்களைக் காத்திடும் சீலா
என் மகனைக் காத்திட வா… வா ..வா
வள்ளியூரிலே குடிகொண்ட வள்ளிமணாளா வழிகாட்டு
பிள்ளைக்கு உந்தன் அருள் காட்டு
பிணிகள் விலகிடத் தாலாட்டு

அலைந்து தவித்தோம் குமரய்யா
வடபழனிக்கு வந்தோம் முருகய்யா
நலம் பெற வேண்டும் மகனய்யா
நம்பிக்கை தருவாய் கந்தய்யா
தணியாத கோபம் தணிந்த இடம் வந்தும்
தனித்தனியாக இருப்பவனே
கனிந்த முகம் காட்டு கலங்கும் எமைத் தேற்று
தணிகைமலை மீது வசிப்பவனே

தந்தைக்கு ஓம் எனும் மந்திரப்பொருள் சொன்ன
ஸ்வாமி மலை வாழும் குருநாதா
மைந்தன் துயர்தீர வந்த பிணி மாற
கந்தா கடம்பா வரமே தா
பூவுதிர் சோலையில் வள்ளியை மணந்து
பழமுதிர் சோலைக்கு வந்தவனே
காவல் தெய்வம் நீ என வந்தோம்
கை கொடுப்பாய் எங்கள் மன்னவனே

திருப்புகழ் பாடி திருவடி தேடி
தெண்டனிட்டோம் எங்கள் தென்னவனே
திருப்பரங்குன்றத்து நாயகனே
குறை தீர்த்து வைப்பாய் வடிவேலவனே
வேலவனே .. வேலவனே

இந்தப் பாடலின் ஒளிவடிவமும் நமக்குக் கிடைக்கிறது. கிட்டத்தட்ட எட்டு நிமிடங்கள் பாடல் ஓடுகிறது. இத்தனை வரிகளையும் தொடர்ந்து பாடிய சுசீலாம்மாவிற்கும் டி.எம்.சௌந்தரராஜனும் முருகனுடைய ஆசி நிச்சயம் கிடைத்திருக்கும்.

முருகனருள் முன்னிற்கும்.

பாடலின் சுட்டி – http://youtu.be/aeGUa8rg3nM
அன்புடன்,
ஜிரா

077/365