சின்னவளை, முகம் சிவந்தவளை…

  • படம்: அந்த ஒரு நிமிடம்
  • பாடல்: சிறிய பறவை சிறகை விரித்து
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: S. P. பாலசுப்ரமணியம், S. ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=rAfDNE3QKMk

சொர்ணமே, அரச அன்னமே, இதழின் யுத்தமே முத்தமே!

நெற்றியில் வியர்வை சொட்டுமே, கைகள் பற்றுமே, ஒற்றுமே!

சோழன் குயில் பாடுகையில், சோலைக் குயில் ஓய்வெடுக்கும்,

மெல்லினங்கள் பாடு கண்ணே, வல்லினங்கள் வாய் வலிக்கும்!

சிறு பின்னணியுடன் வாசிக்கவேண்டிய வரிகள் இவை. இந்தப் பாடலின் இந்தக் குறிப்பிட்ட பகுதி (சரணம்), கம்பர் மகன் அம்பிகாபதியும், சோழன் மகள் அமராவதியும் பாடுவதாகக் கற்பனை செய்து எழுதப்பட்டுள்ளது.

அதனால்தான், தன் காதலியைச் ‘சோழன் குயில்’ என்று வர்ணிக்கிறான் காதலன். ‘அரச அன்னமே’ என்றும் விளிக்கிறான்.

‘அரச அன்னம்’ என்பது வடமொழியில் உள்ள ‘ராஜ ஹம்ஸம்’ என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பு. இதை இந்த வடிவத்திலேயே பல இலக்கியங்கள் பயன்படுத்தியுள்ளன. உதாரணமாக, மணிமேகலையில், ‘அரச அன்னம் ஆங்கு இனிது இருப்ப…’, குமர குருபரர் எழுதிய ‘சகலகலாவல்லி மாலை’யில், ‘அரச அன்னம் நாண நடை கற்கும்…’

அழகான இந்த இலக்கியச் சொல்லைச் சினிமாவுக்குக் கொண்டுவந்து, மிகப் பொருத்தமான இடத்தில் பயன்படுத்தியிருக்கிறார் வைரமுத்து. இதற்கு என்ன அர்த்தம்?

‘அரசன்’ என்பது இங்கே சோழனைக் குறிக்கலாம், ‘சோழன் மகளே’ என்ற அர்த்தத்தில் ‘அரச அன்னம்’ என்று காதலன் அவளைப் பாடலாம். அல்லது, ’அன்னங்களுக்கெல்லாம் அரசியைப்போன்றவளே’ என்று வர்ணிக்கலாம்.

இவைதவிர, ‘அரச அன்னம்’ என்றே ஒரு வகை இருக்கிறதாம்.

பொதுவாக அன்னப் பறவைகள் முழுவதும் வெண்மையாகதான் இருக்கும் என்று சொல்வார்கள். அரச அன்னம் கொஞ்சம் ஸ்பெஷல், அதன் அலகும், கால்களும் செக்கச்செவேல் என்று காணப்படும்.

நான்காவதாக ஒரு நகைச்சுவை விளக்கமும் உண்டு, ’அரச அன்னம்’ என்பதில் அன்னத்தைச் சாதமாகக் கொண்டு ‘ராஜ போஜனம்’ என்றும் மொழி பெயர்க்கலாம். அதாவது, அரசர்கள் உண்ணக்கூடிய, அறுசுவையும் நிறைந்த Rich, Multi Course Meal. காதலன் ஒரு சாப்பாட்டு ராமனாக இருக்கும்பட்சத்தில் காதலியை ‘அடியே, அன்லிமிட்டெட் மீல்ஸே’ என்று வர்ணிப்பது பொருத்தமாக இருக்குமல்லவா?

அடுத்து, நான்காவது வரியில் ‘மெல்லினங்கள் பாடு கண்ணே, வல்லினங்கள் வாய் வலிக்கும்’ என்று ஓர் அழகான கற்பனை உள்ளது. ஆனால், திடீரென்று காதலன் ஏன் அப்படிப் பாடவேண்டும்?

காரணம் இருக்கிறது, இரண்டாவது வரியைக் கவனியுங்கள், ‘நெற்றி’, ‘சொட்டுமே’, ‘பற்றுமே’, ‘ஒற்றுமே’ என்று வல்லினமாகப் பாடுகிறாள் காதலி. அந்த அழுத்தத்தை அவள் தேகம் தாங்குமா என்று காதலனுக்குக் கவலை, ’இனிமேல் வல்லினம் பாடாதே கண்ணே, உனக்கு மெல்லினம் போதும்’ என்கிறான்.

‘வல்லினம் பாடினாலே வாய் வலிக்குமா? என்ன கதை விடறீங்க?’ என்று சண்டைக்கு வராதீர்கள். இந்தப் பாடல் எழுதப்பட்ட நேரத்தில் பெண்கள் அத்துணை மெல்லியர்களாக இருந்திருக்கிறார்கள். சாட்சிக்கு, இதேபோல் ஓர் அன்னத்தை முக்கியப் பாத்திரமாகக் கொண்ட நளவெண்பாவிலிருந்து ஒரு பாடல்:

கொய்த மலரைக் கொடுங்கையினால் அணைத்து

மொய்குழலில் சூட்டுவான் முன்வந்து, தையலாள்

பாதார விந்தத்தே சூட்டினான் பாவை இடைக்(கு)

ஆதாரம் இன்மை அறிந்து.

காதலன் ஒரு மலரைப் பறிக்கிறான். அதை உள்ளங்கையில் ஏந்தி வருகிறான், காதலியின் அடர்த்தியான கூந்தலில் அதைச் சூட்டப் பார்க்கிறான்.

திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை, மனத்தை மாற்றிக்கொண்டுவிடுகிறான், காதலியுடைய கால்களில் அந்த மலர்களைச் சூட்டிவிடுகிறான்.

ஏன்?

தலையில் பூவைச் சூட்டப்போன அந்த விநாடியில்தான், அவன் அவளது இடையைப் பார்த்திருக்கிறான், அத்தனை மெலிதான இடை, பூவின் பாரத்தைத் தாங்குமா?!

இப்போது சொல்லுங்கள், வல்லினம் பாடினால் சோழன் குயில் என்னவாகும்!

***

என். சொக்கன் …

15 02 2013

076/365