நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க வாடகை என்ன தர வேண்டும் என்று குழம்புவர்களுக்கும் யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போனது என்று உருகும் உள்ளங்களுக்கும் இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய் என்று கலங்கும் இதயங்களுக்கும் காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கும் அனைவருக்கும் #4வரிநோட் ன் இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்

காற்றெல்லாம் இன்று காதல் வாசம். இன்று உலகமெங்கும் ஒரே மொழி அது  உள்ளம் பேசும் காதல் மொழி.

ஆனால் திரைப்பாடல்களில் எப்போதுமே காதல் வாசம்தான். மூன்றில் இரண்டு காதல் பாட்டுதான். கண்ணதாசன் ‘அவள் கவிஞன் ஆக்கினாள் என்னை’ என்று தெளிவாக சொல்கிறார். வாலி ‘காற்று வாங்க போனால்கூட கவிதைதான் வாங்கி வருகிறார்.  அவருக்கு வளையோசை சத்தமே கவிதைதான் . வைரமுத்துவும் கால காலமாக வாழும் காதலுக்கு அர்ப்பணம் என்கிறார்.

பல ஆயிரம் காதல் பாடல்கள். பல ஆயிரம் வர்ணனைகள். காதல் என்பது  கல்யாணம் வரைதான்  என்று சொன்ன ஒரு பாட்டு. காதல் கசக்குதையா என்ற இன்னொரு பாடல். காதலின் ஏழு நிலை சொன்ன என்னுயிரே என்னுயிரே என்று இன்னொரு பாடல்.

காதலின் Symptoms பற்றி கவிஞர்கள் என்ன சொல்கிறார்கள் ? கண்ணதாசன் (அந்தக் கால?) காதலின் symptoms என்ன என்பதை

பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது

பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது

நாலுவகை குணமிருக்கும் ஆசை விடாது

நடக்கவரும் கால்களுக்கு துணிவிருக்காது

என்ற வரிகளில் அழகாக விவரிக்கிறார். நா முத்துகுமார் காதல் பட பாடலில் இந்தக்கால அவஸ்தைகள் என்னவென்று சொல்கிறார் பாருங்கள்

இதயத்தின் உள்ளே இமயத்தை போலே

சுமைகளை வைத்தால் … காதல்

உலகத்தில் உள்ள சித்ரவதைக்கெல்லாம்

செல்லப்பெயர் வைத்தால்… காதல்

இதயத்தின் உள்ளே சுமையை வைப்பதும் சித்திரவதைக்கு செல்லப்பெயர் வைப்பதும் – காதல் விரும்பி ஏற்றுக்கொண்ட வலி  என்ற தொனியில் அட ..

திரைப்பாடல்களில் காதலுக்கு கிடைத்த சுவாரஸ்யமான dimensions என்ன?

காதலை கடவுள் என்று சொன்ன பாடல்கள் உண்டு. நா முத்துகுமார் ‘காதல்’ படத்தில் தொட்டு தொட்டு பாடலில்

தொடக்கமும் இல்லை முடிவுகள்  இல்லை

கடவுளைப்போல காதல்

என்கிறார். வைரமுத்து ஒரு பாடலில்

நீரினை நெருப்பினை போல விரல் தொடுதலில் புரிவதும் அல்ல

காதலும் கடவுளைப்போல அதை உயிரினில் உணரனும் மெல்ல

என்று காதலை கடவுள் போல என்கிறார்.   (அதனாலதான் இதில் நம்பிக்கையில்லாத சிலர் இருக்கிறார்களோ?) இந்த கடவுளையும் நிராகரிக்கும் ஒரு பகுத்தறிவு கூட்டமும் உண்டு.

அடுத்த பரிமாணம் Secrecy. கோடம்பாக்கம் பட பாடலில்

ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல்

முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்

என்றும் வைரமுத்து பூவெல்லாம் உன் வாசம் படத்தில்

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்,
காதலை யாருக்கும் சொல்வதில்லை,
புத்தகம் மூடிய மயிலிறகாக

புத்தியில் மறைப்பாள்  தெரிவதில்லை,

என்று உணர்வுகளை மயிலிறகால் வருடுகிறார்.

சரி காதலர் தினத்துக்கு என்ன பரிசு கொடுப்பது என்று யோசிப்பவருக்கு யுகபாரதி சதுரங்கம் படத்தின்  என்ன தந்திடுவேன், பாடலில் http://www.inbaminge.com/t/s/Sathurangam/Enna%20Thanthi.eng.html அந்தக்கால barter trade போல ஒரு ஐடியா கொடுக்கிறார். இந்த உரையாடலை கேளுங்கள்

நீ வானவில் தந்தால் நான் வானம் தந்திடுவேன்
நீ ஓரிடம் தந்தால் நான் உலகை தந்திடுவேன்
நொடிகள் நீ தந்தால் நான் யுகங்கள் தந்திடுவேன்
விதைகள் நீ தந்தால் நான் விருட்சம் தந்திடுவேன்

அதுமட்டுமா? கோபமிருந்தால் எப்படி சமாதானப்படுத்துவது என்று சொல்கிறார்

நீ கோப பார்வை பார்க்கும் போது கொஞ்சல் தந்திடுவேன்
என் தோளில் நீயும் சாய தொட்டில் தந்திடுவேன்

கவிதையில் தொடர்ந்து

நீ பார்த்திடும் போது பாராமல் நான் பார்வை தந்திடுவேன்
நீ பேசிடும் போது பேசாமல் நான் மௌனம் தந்திடுவேன்

என்ற புரிதலை சொல்கிறார். மேலும்

உன் நெற்றி வருட கேசம் ஒதுக்க காற்று தந்திடுவேன்
நீ இருட்டில் நடக்க எந்தன் விழியில் வெளிச்சம் தந்திடுவேன்
நீ ஜன்னலின் ஓரம் நின்றிடும் போது சாரல் தந்திடுவேன்
நீ தூங்கிடும் நேரம் லேசாய் கேட்கும் பாடல் தந்திடுவேன்

என்று இதமான வரிகளில் காதலின் முழு வீச்சு. எனக்கென்னவோ அட்டை பெட்டியில் கலர் பேப்பர் சுற்றி கலர் ரிப்பன் கட்டி கொடுக்கப்படும் பரிசுகளை விட யுகபாரதி சொல்லும் பரிசுகளில் காதல் மிகுந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. கொடுத்துப்பாருங்கள். அப்புறம் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை.

மோகன கிருஷ்ணன்

075/365