ஒரு பாடல், இரு கவிஞர்கள்

சில நாட்களுக்கு முன்னர் நண்பர் நாகா ஒரே கவிஞர் படத்தின் எல்லாப் பாடல்களையும் எழுதப் போவது பற்றிய பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவிலேயே பலர் விதவிதமான கருத்துகளைத் தெரிவித்திருந்தார்கள்.

ஒரு படத்தில் எல்லாப் பாடல்களையும் ஒரே கவிஞரே எழுதினால் நன்றாக இருக்கும் என்று எண்ணம் எழுந்தது இருக்க, ஒரே பாடலை இரண்டு கவிஞர்கள் எழுதிய கதையெல்லாம் நடந்திருக்கிறது.

பொதுவாக இரு மொழிப் பாடல்கள் வருகையில் இரண்டு கவிஞர்கள் எழுதுவார்கள். ஆங்கில வரிகளைப் பெரும்பாலும் ராண்டார் கையும் தமிழ் வரிகளைத் தமிழ்க் கவிஞர் ஒருவரும் எழுதியிருப்பார். அதே போல இந்தி வரிகள் என்றால் பி.பி.ஸ்ரீநிவாசைத்தான் கூப்பிடுவார்கள்.

தவப்புதல்வன் படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விசுவநாதன் இசையில் வந்த “உலகின் முதலிசை தமிழிசையே” என்ற பாடலின் தமிழ் வரிகளைக் கவிஞர் கண்ணதாசன் எழுதினார், அதே பாடலில் வரும் இந்துஸ்தானி இசைக்கான வரிகளை பர்கத் சைபி எழுதினார்.

அதே போல வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் ”தூ ஹே ராஜா மே ஹூ ராணி” என்ற இந்திப் பாட்டை பி.பி.ஸ்ரீனிவாஸ் எழுத கடைசியாக நான்கு வரிகளைத் தமிழில் கண்ணதாசன் எழுதினார். நான்கு வரிகளை எழுதுவதா என்றெல்லாம் யோசிக்கவில்லை கண்ணதாசன். அந்த நான்கு வரிகளில் பாட்டையே பிரமிப்பாக்கி விட்டார். நல்ல கவிஞன் ஒரு வரியில் கூடச் சொல்ல வந்ததைச் சொல்லி தன்னையும் நிலை நிறுத்துவான் என்பதே உண்மை.

சூரியகாந்தி படத்தில் தமிழும் ஆங்கிலமும் கலந்த பாடல் உண்டு. “நான் என்றால் அது நானும் அவளும்” என்று தமிழ் வரிகளை வாலி எழுத, ஆங்கில வரிகளை ராண்டார்கை எழுதினார். இது எஸ்.பி.பாலசுப்ரமணியமும் ஜெயலலிதாவும் இணைந்து பாடிய பாடல்.

இந்தப் பாடல்கள் எல்லாம் இரு மொழிப் பாடல்கள். இரண்டு கவிஞர்கள் இருவேறு மொழிகளில் எழுதியது இயல்பானது. ஒரே மொழிப்பாடலை இரண்டு கவிஞர்கள் எழுதியிருக்கிறார்களா? எழுதியிருக்கிறார்கள். மூன்று எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும். ஆனால் மூன்றிலும் கவியரசர் கண்ணதாசனின் பங்கு இருக்கிறது.

வியட்னாம் வீடு படத்தில் ”உன் கண்ணில் நீர் வழிந்தால்” பாடலின் தொடக்க வரிகள் பாரதியாரால் எழுதப்பட்டவை. அந்த வரிகளை எடுத்துக் கொண்டு சரணத்தை கண்ணதாசனிடம் எழுதச் சொன்னார்களாம். அவரும் எழுதிக் கொடுத்தார். ஆனால் பாடலை எழுதியவர் என்று தன்னுடைய பெயரைப் போடக்கூடாது என்று சொல்லிவிட்டார்.

இந்த எடுத்துக்காட்டு செல்லாது என்கின்றீர்களா? வாருங்கள். இன்னும் இரண்டு சொல்கிறேன்.

தேவரின் துணைவன் திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் முருகனைப் புகழ்ந்து பாடும் “மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே” என்ற பாடலின் முதல் பாதியை மருதகாசியும் இரண்டாம் பாதியைக் கண்ணதாசனும் எழுதினார்கள். இருவருமே முழுதாகத் தானே எழுதுவேன் என்று சண்டையிடவில்லை.

அடுத்த எடுத்துக்காட்டு சிவப்பு ரோஜாக்கள். ”மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது” அற்புதமான பாடல். அந்தப் பாடலின் பல்லவியை கவியரசர் எழுத சரணங்களை கங்கையமரன் எழுதினாராம். இருவரையும் நம்மால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. கவியரசர் எழுதிய பல்லவிக்குச் சரணம் எழுதி அதைப் பிரபலமாகவும் ஆக்கிய கங்கையமரனையும் பாராட்டியே ஆக வேண்டும்.

உலகின் முதலிசை தமிழிசையே (தவப்புதல்வன்) – http://youtu.be/pLNYJ7uCyyM
தூ ஹே ராஜா மே ஹூ ராணி (வறுமையின் நிறம் சிவப்பு) – கிடைக்கவில்லை
நான் என்றால் அது நானும் அவளும் (சூரியகாந்தி) – http://youtu.be/lWH2aplXjG0
உன் கண்ணில் நீர் வழிந்தால் (வியட்னாம் வீடு) – http://youtu.be/NC3QQL3cMlg
மருதமலையானே (தேவரின் துணைவன்) – http://youtu.be/aeGUa8rg3nM
மின்மினிக்குக் கண்ணில் (சிவப்பு ரோஜாக்கள்) – http://youtu.be/Yoo_WkRIgYU

அன்புடன்,
ஜிரா

074/365