விருந்தினர் பதிவு : கத்தாழை(ளை)

  • படம்: ஆடுகளம்
  • பாடல்: ஒத்தச் சொல்லாலே
  • எழுதியவர்: ஏகாதேசி
  • இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்
  • பாடியவர்:வேல்முருகன்
  • Link: http://www.youtube.com/watch?v=vYdy_bsva78
வேலைக்குப் போகாம சேவ சண்டயே கதியெனக் கெடக்கும் இளைஞன் ஓர் ஆங்கிலோ இந்தியன் பெண்ணின் பின்னால் சுற்றுகிறான். ஒரு சந்தர்ப்பத்தில் எல்லார் முன்னிலையில் இவனைத்தான் காதலிக்கிறேன்னுக் கைக்காட்டிவிடுகிறாள். அங்குத் தொடங்கும் துள்ளல் , பாடல் முழுக்க இருந்துக் கொண்டேயிருக்கும். தனுஷ் கைலியால் தலையை மூடிக்கொண்டு கெட்ட ஆட்டம் போட்டதில், நடன இயக்குனர் தேசியவிருதே வாங்கிவிட்டார். 
 
பாடல்வரிகளில் பெரிய வார்த்தை விளையாட்டுகள் கிடையாது. முடிந்தளவு அந்தக் கதாபாத்திர வடிவமைப்புக்கு அதிகமான வார்த்தைகள் இருக்காது.  போறவர்ற ஆளுங்களை வம்பிழுக்கும்படியே வரிகளும்,காட்சிகளும் அமைந்திருக்கும்
 
ஏ கட்ட வண்டி கட்டி வந்துதான்
அவ கண்ணழக பாத்து போங்கடா
அட கட்டு சோறு கட்டி வந்துதான்
அவ கழுத்தழக பாத்து போங்கடா
கத்தாழ பழச்சிவப்பு முத்தாத இளஞ்சிவப்பு
வத்தாத அவ இடுப்பு நான் கிறுக்கானேன்
இதில் கத்தாழ பழச்சிவப்பு என வருகிறது .
முதலில் நம் அனைவருக்கும் தெரிந்த கத்தாழ என்பது கத்தாழச் செடி, ‘கற்றாழை’ என்பதன் சிதைந்த வடிவம், பச்சை நிறத்தில் கள்ளிச் செடி மாதிரி இருக்கும். இப்போது சில சந்தேகங்கள்
1) இது கத்தாழையா அல்லது கத்தாளையா? இரண்டுமே சம அளவில் உபயோகத்தில் இருக்கிறது.
2) எது எப்படியாயினும் இதில் பழம் காய்க்குமா? அது சிவப்பு நிறத்தில் இருக்குமா? யாராவது பார்த்ததுண்டா?
3) இதற்கு முன் சினிமாவில் எனக்குத் தெரிந்து அனைத்துப் பழங்களையும் பாடல்களில் உபயோகப்’படுத்தி’ விட்டனர்.
 இந்தப் பழத்தை வேறு பாடலில் கேட்டிருக்கிறீர்களா ?
இது ஒருபுறம் இருக்க , கத்தாளை என ஒரு வகை மீன் (Jew Fish) உள்ளது எனவும் கேள்வி. அப்படியென்றால் “கத்தாளக் கண்ணாலே” எனபது மீனை(ப்போன்ற கண்களை)தான் குறிக்கிறதா? அல்லது, கற்றாழைச் செடிபோல் முள்ளாய்க் குத்துகிற கண்களையா?
பதில் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!
காளீஸ்