கொஞ்சும் கொலுசு

பெண் அணியும் ஆபரணங்களில் அவளுக்கு எது பிடிக்குமோ தெரியவில்லை. ஆனால் ஆணுக்கு பிடித்தது கொலுசும் சலங்கையும்தானோ என்று தோன்றுகிறது. ‘ஆஹா மெல்ல நட மெல்ல நட’ என்றும் ‘ஆடி வா ஆடி வா ஆடப்பிறந்தவளே ஆடி வா’ என்றும் சொல்லி பெண்ணின் நடையிலும் நடனத்திலும் ஆட்டத்திலும் ஓட்டத்திலும் கொலுசின் சத்தமும் சலங்கையின் ஓசையும் கேட்டு மயங்கிய ஆண், இதை விரும்பியதில் வியப்பில்லை.
‘உன் கால் கொலுசொலி போதுமடி பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி’ என்று பாடும் அளவுக்கு இந்த சத்தம் அவனை மயக்கியிருக்கிறது .கொலுசு தமிழ்பண்பாட்டின் தனித்த ஆபரணமாம். கொலுசின் ஒலியில் பெண்ணின் மனநிலை உணர முடியுமாம். நிஜமாகவா? கொலுசு பெண் மன indicator ஆ? அவ்வளவு சிம்பிள் விஷயமா பெண்மனம் அறிதல்?
           கற்பனைக்கு மேனி தந்து கால் சதங்கை போட்டு விட்டேன்
           கால்சதங்கை போன இடம் கடவுளுக்கும் தோன்றவில்லை
என்று கண்ணதாசன் தெய்வத்தின் தேரெடுத்து தேவியை தேட சொல்கிறார். வைரமுத்துவும் இதயத்தை தொலைத்துவிட்டு அவள் கால் கொலுசில் அது தொலைந்திருக்குமோ என்று காலடியில் தேடுகிறார்…(நிற்க இது ஆதி சங்கரனின் காலடி இல்லை டைரக்டர் ஷங்கர் நாயகியின் கால் அடி)
வெள்ளி கொலுசு மணியும் பாத கொலுசு சத்தமும் கொஞ்சம் கொஞ்சமாக பாடலில் வர, கொலுசு சத்தம் கேட்கும்போது மனம் தந்தியடிக்குது என்கிறார் முத்துலிங்கம். நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்ற காதலி தன்னைத் தாலாட்ட வருவாளா என்று சந்தேகத்துடன் நடக்கும் காதலன் சட்டென்று ‘கொஞ்சம் பொறு   கொலுசொலி கேட்கிறதே’ என்று நின்று பாடும் கவிஞர் பழனி பாரதியின் வரிகள்.
வைரமுத்து வந்தபின் தமிழ்பாடலில் கொலுசு சத்தம் சற்றே அதிகம். வெள்ளி சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடிய காலம். ஒரு பாடலில்
         கொலுசே கொலுசே எசை பாடு கொலுசே
         நீ பாடாதிருந்தால் நான் பாதை மறப்பேன்
         நீ கேளாதிருந்தால் நான் வாழாதிருப்பேன்
என்னவோ கொலுசின் ஒலி தான் வழிகாட்டி போல் சொல்கிறார். மொத்தத்தில் அவள் தந்த சத்தத்தில் தேன் வந்து ரத்தத்தில் தித்தித்ததே என்று Fasting / PP blood sugar ரிசல்ட் சொல்லி  … கொஞ்சம் ஓவரா போய்ட்டாரோ? இன்னும் இல்லை. மற்ற பாடல்களையும் பார்ப்போம்
முதல்வன் பாடலில்
          குறுக்கு சிறுத்தவளே என்ன குங்குமத்தில் கரைச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சு குளிக்கையில் என்ன கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம் மாத்து தாயே
குறுக்கு சிறுத்தவளின் கொலுசுக்கு மணியாக தன்னை கொஞ்சம் மாற்றிக்கொள்ள ஆசைப்படுகிறார். அன்பே அன்பே கொல்லாதே பாடலில்
         கொடுத்து வைத்த பூவே பூவே அவள் கூந்தல் மணம் சொல்வாயா
         கொடுத்து வைத்த கொலுசே கொலுசே அவள் காலளவை சொல்வாயோ
என்று உலக அழகியை பற்றி பாடும்போதும் விடாமல் கொலுசை கெஞ்சுகிறார்.மானுத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலுக்கு தாய் மாமன் சீராக தங்க கொலுசு தான் தருகிறார். (தங்கத்தை இடுப்புக்கு கீழே அணியக்கூடதாமே, தங்கத்தில் கொலுசு பரவாயில்லையா ?)
கொலுசும் சலங்கையும் வெறும் சத்தமா ? அதை தாண்டி ஒரு கற்பனை உண்டா? இருக்கிறது. அதுவும் வைரமுத்துவின் வரிகள் தான். சங்கமம் படத்தின் முதல் முறை கிள்ளிப்பார்த்தேன் பாடலில் http://www.youtube.com/watch?v=e6IVUGuENd8 பெண் மனதின் ஓசைகளையும் அவள் இதழின் மௌனங்களையும் சொல்லும் வரிகள்
‘கால்களில் கிடந்த சலங்கையை திருடி
அன்பே என் மனசுக்குள் கட்டியதென்ன’
என்று காதல் வயப்பட்ட ஒரு பெண் தன் மனதின் ஓசையை சொல்ல, பதிலுக்கு  ஆண்
சலங்கையை அணிந்தும் சத்தங்களை மறைத்தாய்
பெண்ணே உன் உள்ளம் தன்னை ஒளித்ததென்ன
என்று சலங்கை அணிந்தும் மௌனமாய் நிற்கும் பெண்ணை , பெண்ணின் மனதை கேள்வி கேட்டு
சலங்கையே கொஞ்சம் பேசு
மௌனமே பாடல் பாடு
மொழியெல்லாம் ஊமை யானால்
கண்ணீர் உரையாடும்

வசீகரிக்கும் வார்த்தைகள். கவிஞருக்கு தேசிய விருது வாங்கி கொடுத்த வரிகள். இன்னும் இன்னும் எழுதுங்கள் கவிஞரே கொலுசின் கொஞ்சலும் சலங்கையின் கெஞ்சலும் சலிக்கப்போவதேயில்லை எங்களுக்கும்.

மோகனகிருஷ்ணன்

072/365