அம்

  • படம்: எனக்குள் ஒருவன்
  • பாடல்: முத்தம் போதாதே
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: S. P. பாலசுப்ரமணியம், S. ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=elhsWBmIL_4

முத்தம் போதாதே,

சத்தம் போடாதே,

ரத்தம் சூடானதே!

’முத்தம்’ என்றால் நேரடி அர்த்தம் எல்லாருக்கும் தெரியும். அதன் அடிப்படையில் பார்த்தால் இந்த வரிகள் காதல் ரசம் நிரம்பித் ததும்பித் தோன்றுகின்றன:

‘நீ தந்த முத்தம் போதவில்லை’ என்கிறாள் அவள், ‘அதற்காகக் கோபப்பட்டுச் சத்தம் போடாதே, இன்னும் தருகிறேன்’ என்கிறான் அவன். அதனால் இருவருக்கும் ரத்தம் சூடேறுகிறது. முத்தம், சத்தம், ரத்தம் (பின்னால் பித்தம்கூட வரும்) என இயைபுத் தொடையில் நயமான பாட்டு.

ஆனால், தமிழில் முத்தத்துக்கு இன்னொரு அர்த்தமும் உண்டு. தெரியுமா?

முத்து என்றால் Pearl, அதே முத்து சற்றே பெரியதாக இருப்பின் அதனை ‘முத்தம்’ என்று அழைப்பார்கள்.

சாட்சி வேண்டுமா? நான்மணிக்கடிகையிலிருந்து இந்தப் பாடல்:

கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும், மான் வயிற்றில்

ஒள் அரிதாரம் பிறக்கும், பெரும் கடலுள்

பல் விலைய முத்தம் பிறக்கும், அறிவார் யார்

நல் ஆள் பிறக்கும் குடி?

உபயோகமற்றதாகத் தோன்றும் கள்ளி மரத்தின் நடுவே, மணமுள்ள அகில் கட்டை பிறக்கும், மானின் வயிற்றில் ஒளி நிறைந்த அரிதாரம் என்ற பொருள் பிறக்கும், ஏகப்பட்ட விலைக்கு விற்கப்படும் பெரிய முத்துகள், பெரும் கடலுக்குள் பிறக்கும். அதுபோல, நல்லவர்கள் எந்தக் குடும்பத்திலும் பிறக்கலாம்.

இங்கே ‘கடலுள் முத்தம் பிறக்கும்’ என்ற வரியில், ‘முத்தம்’க்கு அர்த்தம், தண்ணீரில் மூழ்கிக் கிஸ் அடிக்கிறார்கள் என்பதல்ல, ’பெரிய முத்து கடலில் கிடைக்கும்’ என்பதுதான்.

தமிழில் ‘அம்’ என்ற விகுதி, சிறப்பைக் கொடுக்கும். உதாரணமாக:

‘நிலை’ என்றால் ஓர் இடத்தில் நிலைத்திருப்பது, அதையே இன்னும் சிறப்பாகச் சொல்வதுதான் ‘நிலையம்’, அதாவது நிலை + அம், பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்றவை.

‘விளக்கு’ என்றால் சாதாரண தீபம், அதையே கடற்கரை ஓரமாக வைத்தால், ’விளக்கம்’, அதாவது விளக்கு + அம், பெரிய கப்பல்களுக்கு வழிகாட்டுகிற கலங்கரை விளக்கம்.

அதே விதிப்படி முத்து + அம் = முத்தம், பெரிய முத்து.

இப்போது, வைரமுத்துவின் வரிகளை மீண்டும் படித்துப் பாருங்கள். செம காமெடியான ஒரு கற்பனை தோன்றும்:

காதலன் காதலிக்கு ஒரு முத்து மாலை வாங்கி வருகிறான். அவளுக்குக் கோபம், ‘யோவ், என்னய்யா மாலை வாங்கிவந்திருக்கே? எண்ணி எட்டே எட்டு முத்துதான் இருக்கு, அதுவும் ஜவ்வரிசிமாதிரி தக்கனூண்டு இருக்கு, இதெல்லாம் நல்லால்லே!’

‘ஏய், சத்தம் போட்டு மானத்தை வாங்காதேடி’ என்கிறான் காதலன், கோபத்தில் அவனுக்கு ரத்தம் சூடேறுகிறது. அதை அடக்கிக்கொண்டு, வேறு பெரிய முத்து மாலையாக அவளுக்கு வாங்கித் தருகிறான்.

ரொமான்ஸ் பிரியர்கள் மன்னிப்பார்களாக! 😉

***

என். சொக்கன் …

09 02 2013

070/365