பாட்டே பார்வை

ஒரு கேள்விக்கு விடை சொல்லி விளக்குவதற்குள் நமக்குப் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. அப்படி கேள்வி கேட்பவள் காதலியாக இருந்து விட்டால் வேறு வினையே வேண்டாம்.

ஆனால் இந்தக் காதலிக்கு கண்ணில்லை. பார்வையில்லை. உலகம் எப்படியிருக்கும் என்று தெரியாது. காதலன் எப்படியிருப்பான் என்று தெரியாது. தொட்டுத் தொட்டுதான் எதையும் அவளால் உணர்ந்து கொள்ள முடியும்.

காதலனோடு காதலிக்க வந்தவள் காதலிக்காமல் கேள்விகளைக் கேட்கிறாள். அழகாகவும் பொறுமையாகவும் அவளுக்கு பாட்டிலேயே விடை சொல்கிறான் காதலன்.

இதுதான் கவியரசரிடம் சொல்லப்பட்ட காட்சியாக இருக்கும். 1979ல் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளி வந்த திரைப்படம் நீலமலர்கள். அன்றைய பிரபல ஜோடியான கமலும் ஸ்ரீதேவியும் இணைந்து நடித்திருந்தார்கள். மெல்லிசை மன்னர் இசையமைத்திருந்தார்.

இந்த மாதிரி காட்சிகளுக்கெல்லாம் கவியரசரின் யோசனை எப்படிதான் வேலை செய்யுமோ! பாடல் வரிகளைப் பாருங்களேன். நான் சொல்வது உங்களுப்புரியும்.

பெண் : இது இரவா பகலா
ஆண் : நீ நிலவா கதிரா

அவளுக்கு இரவும் பகலும் தெரியாது. எப்போதும் இருட்டுதானே. காதலைச் சந்தித்த வேளை இரவா பகலா என்று ஐயம். கேள்வியில் வைக்கிறாள் ஐயத்தை. இதற்குக் காதலன் சொல்லும் விடையும் கேள்வியாக இருக்கிறது.

அவளைப் பார்த்து “நீ நிலவா கதிரா” என்று கேட்கிறான். அவள் நிலவாகக் குளிர்ந்திருந்தால் அது இரவு. அவள் சுடராக இருந்திருந்தால் அது பகல். என்னவொரு அழகான விடை.

அவள் அடுத்த கேள்விக்குப் போகிறாள்.

பெண் : இது வனமா மாளிகையா
ஆண் : நீ மலரா ஓவியமா

இருக்கும் இடத்தில் சுற்றியிருப்பது அவளுக்குதான் தெரியாதே. அவர்கள் இருக்கும் இடம் எப்படிப்பட்டது என்று தெரிந்து கொள்ள அவளுக்கு ஆவல்.

அவள் மலராக மலர்ந்திருந்தால் அந்த இடம் வனமாகிவிடும். அவள் ஓவியமாக இருந்தால் அந்த இடம் மாளிகையாக இருக்கும். எங்கெங்கு எது இருக்கும் என்பதை இதை விட எப்படி அழகாககச் சொல்ல முடியும்?

பெண் : மேகம் என்பதும் மின்னல் என்பதும் அருகில் இல்லையா
ஆண் : உன் கூந்தல் என்பதில் பூச்சரம் வைப்பது அறிவாய் இல்லையா

மேகம் மின்னல் என்று எதையெதையோ சொல்கிறார்கள். அந்த மேகமும் மின்னல் இங்கு இருக்கிறதா என்று வருகிறது அவளது கேள்வி.

பெண்ணே, உன் கூந்தலில் பூச்சரம் வைப்பது உனக்குத் தெரியுமே. அந்தக் கூந்தலே மேகம். அதில் சூடிய பூச்சரமே மின்னல். மேகமும் மின்னலும் இப்படித்தான் இருக்கும் என்று அழகாக வருணித்திருக்கிறார் கவியரசர்.

அடுத்தடுத்த பாடல் வரிகளையும் நான் கீழே குடுத்திருக்கிறேன். நீங்களே படித்து மகிழுங்கள்.

பெண் : இது கனியா காயா
ஆண் : அதை கடித்தால் தெரியும்
பெண் : இது பனியா மழையா
ஆண் : எனை அணைத்தால் தெரியும்
பெண் : தென்றல் வந்ததும் வண்ணப்பூங்கொடி எதனால் அசைந்தது
ஆண் : தன்னை மறந்து காதல் கனிந்து ஒன்றாய் இணைந்தது
பெண் : இது குயிலா குழலா
ஆண் : உன் குரலின் சுகமே
பெண் : இது மயிலா மானா
ஆண் : அவை உந்தன் இனமே
பெண் : பூவின் நிறமும் தேனின் நிறமும் ஒன்றாய் காணுமா
ஆண் : பூவை கன்னமும் கோவை இதழும் ஒன்றாய் ஆகுமா
பெண் : இங்கு கிளிதான் அழகா
ஆண் : உன் அழகே அழகு
பெண் : இந்த உலகம் பெரிதா
ஆண் : நம் உறவே பெரிது

இந்தப் பாடலை மனம் போன போக்கில் விரைவாக எழுதிக் கொடுத்திருப்பார் கண்ணதாசன். அதனால்தான் அவரைக் கவியரசர் என்று சொல்கிறோம்.

கண் தெரியாத காதலன் என்று கதை வந்ததும் அவர்தான் பாடல் எழுதினார். கமலின் நூறாவது படமான ராஜபார்வைதான் அது. தன்னுடைய காதலியைத் தொட்டுத் தொட்டு அவள் எப்படியிருக்கிறாள் என்று பாட்டு. அங்கும் கவியரசரின் விளையாட்டுதான். இந்த முறை இசையமைத்தது இளையராஜா. “அழகே அழகு தேவதை” என்ற பாடல் மிகமிக இனிமையானது.

இந்த இரண்டு பாடல்களும் கமல் நடித்த பாடல்களாக இருப்பது ஒரு ஒற்றுமை. இன்னொரு ஒற்றுமை இரண்டு பாடலிலும் இருக்கும் கே.ஜே.ஏசுதாஸ். மெல்லிசை மன்னர் இசையில் வாணிஜெயராமோடு இணைந்து பாடிய ஏசுதாஸ் இசைஞானி இளையராஜாவின் இசையில் தனியாகவே பாடியிருக்கிறார்.

இன்னொரு பாடலும் உண்டு. அது சற்று பழைய பாடல். 1961ல் வெளிவந்த குமுதம் படப்பாடல். கண்ணில்லாத மனைவியை மாமல்லபுரம் அழைத்து வந்த கணவன் பாடும் பாட்டு. “கல்லிலே கலைவண்ணம் கண்டான் கண்பார்வை மறைந்தாலும் காணும்வழி கொண்டான்” என்று தொடங்கும் பாடலை எழுதியதும் கவியரசர் கண்ணதாசனே. சீர்காழி கோவிந்தராஜன் வெங்கலக்குரலில் பாடிய இந்தப் பாடலும் சிறப்பானது.

வாலியை விட்டுவிட முடியுமா? அவருக்கும் இதே சூழ்நிலை கொடுக்கப்பட்ட போது அழகானதொரு கவிதையைக் கொடுத்தார். கண்பார்வை இல்லாதவர்கள் வண்ணங்களை எப்படிப் புரிந்து கொள்வது? எண்ணங்களை வைத்துதான். தென்றல் வீசும் போது மனதில் எழும் எண்ணம் ஒரு வண்ணம். அந்த எண்ணங்களுக்கு ஏற்றபடிதான் வண்ணங்கள் மாறுகின்றன என்ற உண்மையை அழகாகச் சொன்னார். அவதாரம் படத்தில் இடம் பெற்ற பாடலை இசையமைத்துப் பாடியவர் இசைஞானி இளையராஜா.

இப்படியெல்லாம் பாடல்களை எழுதி நம்மை ரசிக்க வைத்த கவிஞர்களை என்னதான் சொல்லிப் பாராட்டுவது?!

இந்தப் பதிவில் இடம் பெற்ற பாடல்களின் சுட்டி.
நீலமலர்கள் படப்பாடல் – http://youtu.be/DBKbbYJJGGc
ராஜபார்வை படப்பாடல் – http://youtu.be/jqCH3PK6GxQ
குமுதம் படப்பாடல் – http://youtu.be/EdysGi1bmJk
அவதாரம் படப்பாடல் – http://youtu.be/K8qs_TpAWpc

அன்புடன்,
ஜிரா

068/365