ஒரு படத்தின் எல்லாப் பாடல்களையும் ஒருவரே எழுதவேண்டுமா?

இன்று ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர் இப்படி எழுதியிருந்தார் (Extract from a long message):

‘தாய்க்கு ஒரு தாலாட்டு’ படத்தின் பாடல்களை வைரமுத்து எழுத, அதில் ஒரே ஒரு பாடலைமட்டும் வாலிக்குக் கொடுக்க முன்வந்தார் இசையமைப்பாளர். வந்ததே கோபம் நம் கவிப்பேரரசுக்கு. “மொத்தப் பாட்டையும் அவரிடமே கொடுத்திருக்கலாம். எனக்குச் சம்மதம்தான். ஆனால், நான் பெரும்பாலான பாடல்களை எழுதும் படத்தில் ஒரே ஒரு பாட்டைமட்டும் இன்னொருவருக்குக் கொடுப்பது என்ன நியாயம்?” என்று கோபக்குரல் எழுப்பினார் கவிஞர்.

இந்த நிகழ்ச்சி உண்மையாக இருக்கலாம். ஆனால் வைரமுத்து அப்படிப் பிடிவாதம் பிடிப்பதை விட்டுப் பல வருடங்களாகிறது என்பது எல்லாருக்கும் தெரியும்.

ஆனால் இப்போதும் அவர் ‘ஒரு படத்தில் அனைத்துப் பாடல்களும் ஒரே கவிஞருக்குதான் வழங்கப்படவேண்டும்’ என்பதையே வலியுறுத்துகிறார்.

கவனியுங்கள், அவர் எல்லாப் பாடல்களும் தனக்கே வேண்டும் என்று சொல்லவில்லை, ஒரு படத்தின் அனைத்துப் பாடல்களும் **ஒரே** கவிஞருக்கு வழங்கப்படவேண்டும் என்கிறார். அது வைரமுத்துவோ, வாலியோ, இன்னொருவரோ, எல்லாப் பாடல்களையும் அவர்களேதான் எழுதவேண்டும் என்பது வைரமுத்துவின் கருத்து.

இதற்கு அவர் சொல்லும் காரணம் (In my words) ‘ஒரு படத்துக்கு ஒரே ஒரு இசையமைப்பாளர், ஒரே ஒரு இயக்குனர், ஒரே ஒரு ஒளிப்பதிவாளர் இருக்கையில் பாடல்களையும் ஒரே ஒருவரே எழுதுவதுதானே முறை? அப்போதுதானே அவர்கள் படத்தின் கதைச் சூழலைப் புரிந்து ஒன்றுக்கொன்று முரணில்லாத பாடல் வரிகளைத் தரமுடியும், படத்தின் வெற்றி, தோல்வியில் அவர்கள் முழு மனத்துடன் பங்கு பெறமுடியும்?’

இந்த விஷயத்தில் வைரமுத்துவுடன் நான் முழுமையாக உடன்படவில்லை. இயக்குனரும் இசையமைப்பாளரும் சூழலுக்கேற்ப அந்தந்தப் பாடல் எந்தக் கவிஞருக்குப் பொருந்தும் என்று யோசித்துத் தீர்மானிப்பதே சிறப்பு என்பது என் கருத்து. ஒரு பாடலுக்கும் இன்னொரு பாடலுக்கும் Conflict ஏற்பட்டால் அதைக் கவனித்துச் சரி செய்யவேண்டியது அதே இயக்குனர், இசையமைப்பாளருடைய பொறுப்பு என்று நான் நினைக்கிறேன். ‘இதயக் கோயில்’ போன்ற படங்களில் ஒவ்வொரு பாடலையும் வெவ்வேறு கவிஞர் எழுதியும்கூட, ஒட்டுமொத்த ஆல்பத்தில் பிசிறில்லை.

இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

***

என். சொக்கன் …

05 02 2013