கம்யூனிசமும் (கந்த) சாமியும்

தமிழ் திரையுலகம் பொதுவுடைமை சமவுடமை சித்தாந்தங்களை அவ்வப்போது படங்களிலும் பாடல்களிலும் சொல்ல முயற்சித்தது.

அந்த நாள் சினிமா நாயகன் பொதுவாக பாட்டாளி மக்களின் உரிமைக்காக போராடுபவனாகவே சித்தரிக்கப்பட்டான். அவன் காதலி முதலாளியின் மகளாக இருந்தால் நலம். கதை திரைக்கதையை இன்டர்வெல் பிளாக் வரை நகர்த்துவது சுலபம். ஒரு வேலைநிறுத்தம், ஒரு பொதுவுடைமை கருத்து பாடல் என்று அலைந்து, அடுத்த பாதியை செங்கல்பட்டு விநியோகஸ்த்தரை கலந்து பேசி முடித்துவிடலாம்.

சினிமா சொன்ன கம்யூனிசம் எவ்வளவு ஆழமானது? பாரதிதாசன், பட்டுக்கோட்டை  இவர்களின் பாடல்கள் உண்டு. ஆனால் இதற்கு ஒரு template உருவாக்கியவர்  மக்கள் திலகம். அவர் அரசியல் வாழ்வை நோக்கி நகரும்பொழுது அவரது சினிமா பிம்பமும் அதோடு align செய்யப்பட்டது.

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே

கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே

என்ற கருத்து இன்றளவும் கொண்டாடப்படுகிறது. இதே கருத்து மறுபடி மறுபடி வலியுறுத்தப்படுகிறது. மண்குடிசை  வாசலென்றால்,தென்றல் வர வெறுத்திடுமா என்னும் கவர்ச்சியான வரிகள் மிகவும் பிரபலம். தொடர்ந்து காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது என்ற  பாடல்.கிடைத்தவர்கள் பிழைத்துக்கொண்டார்உழைத்தவர்கள் தெருவில் நின்றார், கவலைப்படாதே  இனி  எது வந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற ஒரு சமுதாயம் படைப்போம்  என்பதே இந்த நாயகர்களின்  கனவு. 

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
சிந்தும் கண்ணீர் தனை மாற்றலாம்
வாருங்கள் தோழர்களே ஒன்றாய் சேருங்கள் தோழர்களே
என்று அழைத்தால் அணி திரளும் மக்கள் கூட்டம் உண்டு.எல்லோர்க்கும் யாவும் உண்டு என்றாகும் காலம் இன்று என்பதை தாண்டி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சொன்ன இன்னொரு முக்கிய கருத்துகடவுள் இல்லை என்பதும்,. மதம் ஒரு போதைப்பொருள், அது மக்களை அடிமைப்படுத்தி சீரழிக்கிறது என்பதும். மேலே சொன்னதிரைப்பாடல்கள் இதை சொல்கிறதா? சந்தேகம்தான்ஒரு பாடலின் தொடக்கமே

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்

அவன் யாருக்காகக் கொடுத்தான்

ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை

 ஊருக்காகக் கொடுத்தான்

இதில் கொடுத்தவன் யார்? இறைவனா ?

மற்றொரு பாடல்

 கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை

கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை

என்று கோவிலை பாடுகிறது சரி ஆத்திகர்கள் எழுதிய பாடல்களை விட்டுவிடலாம். புலமைப்பித்தன் என்ன சொல்கிறார்?

விடியும் வேளை வரப்போகுது

தருமம் தீர்ப்பை தரப்போகுது

என்று Judgement day சொல்லி நமக்கு மேல் இருக்கும் ஒரு சக்தியை குறிப்பிடுகிறார்.

கந்தசாமியும் கந்தல் அணிந்த சாமியும் ஒரே பாடலில். இது முரணா? முழுமையற்ற கருத்தா?

மோகனகிருஷ்ணன்

066/365